Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (10:51 IST)
'கன்னித்தன்மை' அல்லது கற்பு என்ற சொல் காலாவதியாகி விட்டதா, அல்லது வழக்கொழிந்து விட்டதா? சில வல்லுநர்கள், முதல் பாலுறவு பற்றிய அனுபவங்களை விவாதிப்பதற்கு பொருள்பொதிந்த ஒரு மாற்று வரையறை தேவை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
'கன்னித்தன்மை' என்ற கருத்துரு பல சிக்கல்களைக் கொண்டுள்ளது.
 
ஒரு பொக்கிஷம், பரிசு, நினைவுச்சின்னம் என்று கன்னித் தன்மையைப் பற்றி பாரம்பரிமாக வரையறுக்கப்படுவதாக பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். பெண்களால் 'கொடுக்கப்படும்', அல்லது அவர்களிடமிருந்து 'எடுக்கப்படும்', அல்லது வெறுமனே 'இழக்கப்படும்' என்று கன்னித் தன்மை பற்றி பொதுவானப் பேசப்படுகிறது.
கன்னித் தன்மையைப் பற்றிய இதுபோன்ற பாரம்பரியமான கதைகள் பெரும்பாலும் பலரின் நெருக்கத்தின் அனுபவங்களை பிரதிபலிக்கவில்லை என்று பாலியல் கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாலினமற்ற அனுபவங்களுக்குப் இது பொருந்தாது என்றும் கூறுகின்றனர்.
 
கன்னித் தன்மையின் தற்போதைய வரையறை பொருத்தமில்லாதது என்று பலரும் கூறினாலும் மிகச் சிலரே இதற்குப் பொருத்தமான ஏற்றுக் கொள்ளத் தக்க மாற்று வரையறையை வழங்கியிருக்கிறார்கள்.
 
கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த "பாலியல் சுதந்திரத் தத்துவவாதி" என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நிக்கோல் ஹோட்ஜஸ் கன்னித்தன்மை பற்றிய மாற்று வரையறையை வழங்கத் தொடங்கியிருக்கிறார்.
 
"நம்மிடம் இன்னும் இந்த பழைய, மோசமான சொல் இருக்கிறது. அது இன்னும் விரிவான வரையறையைக் கொண்டதாக இருக்க வேண்டும்" என்று ஹோட்ஜஸ் கூறுகிறார். "இது ஒரு வரம்புக்குட்பட்ட யோசனை, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தொடர்."
கன்னித் தன்மை என்று கூறும் இடத்தில், அதற்குப் பதிலாக புதிய மொழியை அவர் பயன்படுத்தத் தொடங்கினார். "பாலுறவு அறிமுகம்" என்று அவர் அதற்குப் பெயரிட்டார். இதன் மூலம் கன்னித் தன்மை என்று இதுவரை குறிப்பிடப்பட்டு வந்ததை ஒரு பயணமாக வரையறுக்க முனைந்தார்.
 
இதைத் தொடர்ந்து இந்த வரையறையைப் பரவலாக்குவதற்காக சமூக வலைத் தளங்களில் தம்மைப் பின்பற்றுவோர் மத்தியில் ஒரு பரப்புரையைத் தொடங்கினார். இன்ஸ்டாக்ராம், ட்விட்டர் இடுகைகள், டி ஷர்ட் வாசகங்கள் என பல வகையிலும் முயற்சிகளைத் தொடர்ந்தார்.
 
இவரது சமூக ஊடக பரப்புரைக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பலர் நேர்மறையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். தொடக்க பாலியல் அனுபவங்கள் குறித்த மாறுபட்ட உரையாடல்களைத் தொடர முடியும் என்பதை ஹோட்ஜஸுக்கு இது உணர்த்தியது. சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பலரும் ஹோட்ஜஸின் பணிகளைப் பாராட்டவே செய்தார்கள். பலர் அவருடைய கருத்துரு தங்களுடைய அனுபவங்களுடன் பொருந்துவதாகக் கூறினார்கள். பலர் கன்னித் தன்மை என்ற கருத்துரு தங்களது அனுபவங்களுக்கு இசைவாக இல்லை என்றும் வெளிப்படுத்தினர்.
ஹோட்ஜ்ஸின் "பாலியல் அறிமுகம்" என்ற வரையறை, தொடக்ககால பாலியல் அனுபவத்தின் எளிமையான, நேரடியான விளக்கத்தை தருகிறது. இது மிகவும் உள்ளடக்கியதாகவும், அதிகாரமளிப்பதாகவும் இருப்பதாக ஹோட்ஜஸ் நம்புகிறார்.
 
'பாலியல் அறிமுகம்' எப்படி உருப்பெற்றது?
ஒரு சொற்றொடராக பாலியல் அறிமுகம் என்பது பல தசாப்தங்களாக வழக்கத்தில் இருக்கிறது. "கன்னித் தன்மையை இழப்பது" என்பதற்கு மாற்றாக தொடக்கத்தில் ஒரு மருத்துவச் சொல் என்ற வகையில் அது பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்காவின் டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் இணைப் பேராசிரியரான லாரா கார்பென்டர் கூறுகிறார்.
 
"70 மற்றும் 80களில் "பாலியல் அறிமுகம்" என்பது பதின்ம வயது கருத்தரிப்பு, பாலியல் தொற்று நோய் போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் பல கல்வி புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 'பாலியல் அறிமுகம்' தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 80கள் மற்றும் 90 களில், இந்த சொல் 'முதல் உடலுறவு' என்று மாறிவிட்டது" என்கிறார் அவர்.
 
'செக்ஸ்' உள்ளிட்ட சொற்களின் மாறிவரும் அர்த்தங்களை பட்டியலிடும் கார்பெண்டருக்கு சொற்களை வரையறுப்பது முக்கியம். கன்னித்தன்மை மற்றும் கன்னித்தன்மை இழப்பு ஆகிய சொற்களை தனது எழுத்துகளில் துல்லியமாகப் பயன்படுத்தியதாக கார்பெண்டர் கூறுகிறார். பரவலாகப் பயன்படுத்தும் மொழியைக் குறிப்பிட வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இருப்பினும், நெறிமுறைகள் ஏற்றிக் கூறப்படும் பாலியல் தொடர்பான இந்தச் சொற்கள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். 1990 களின் நடுப்பகுதியில் அவர் தனது முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கியபோது, ​​ஒரே பள்ளியில் உள்ள வெவ்வேறு குழுக்கள் பாலியல் தொடர்பாக வெவ்வேறு வரையறைகளைக் கொண்டிருக்கலாம் என்று அவரது ஆராய்ச்சி கூறியது. இதன் பொருள் என்னவென்றால், கன்னித்தன்மையை இழப்பது போன்ற சொற்றொடர்கள் பல வகையிலும் வரையறுக்கப்படலாம். பல தருணங்களில் இது அவமானம் போன்று சித்தரிக்கப்படுகிறது.
 
ஆனால் அவமானம், நெறிகள் போன்றவற்றில் இருந்து விலகியிருக்கிறது ஹோட்ஜஸின் கன்னித்தன்மை அல்லது கற்புக்கான வரையறை. "கன்னித் தன்மை என்பது ஒரு பயணத்தின் முடிவு அல்லது மாற்றம்" என்று அவர் வகைப்படுத்தவில்லை. மாறாக, "பாலியல் அறிமுகம்" என்பது வாழ்நாள் முழுவதும் பல முறை, பல வழிகளில் பாலியல் பரிமாணம் நடக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறது.
 
"இது கன்னித்தன்மை என்ற சொல்லுக்கு புதிய சொல் கண்டுபிடிப்பது அல்ல. கன்னித் தன்மை என்ற ஒன்றே கிடையாது. ஏனெனில் உங்கள் பாலியல் பயணம் ஒருபோதும் முடியப் போவதில்லை"
 
ஹோட்ஜஸின் பாலியல் அறிமுகங்கள் ஆழ்ந்த தனிப்பட்ட மாற்றங்கள். அவை உணர்ச்சிபூர்வமானவை. பிரதிபலிப்பு கொண்டவை. இது கன்னித் தன்மை என்பதற்கு பதிலீடு இல்லையென்றால், ஹோட்ஜஸின் பாலியல் அறிமுகம் என்பது எப்படியிருக்கும் என்ற கேள்வி எழக்கூடும். அதற்கு உதாரணங்களுடன் விளக்கம் கூறுகிறார் அவர்.
 
"நீங்கள் ஒரு பெண் என்றால், வேறொரு பெண்ணை முத்தமிடும்போது, உங்கள் முழு உடலில் மின்னல் தோன்றி, பட்டாம்பூச்சிகள் போல உணர்ச்சிகள் பரவும் தருணமாக அது இருக்கலாம்" என்று ஹோட்ஜஸ் கூறுகிறார். அவரது கூற்றின்படி இது வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோன்ற வெவ்வேறு அனுபவங்களும் இருக்கலாம். எந்த வயது என்ற கட்டுப்பாடு இதற்கு இல்லை. "முதல் முறை" என்ற அழுத்தமும் இதற்குக் கிடையாது.
 
மிகவும் எளிதானதா?
ஹோட்ஜஸின் பரப்புரை சமூக வலைத்தளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கிய பிறகு, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பாலியல் கல்வியாளரான ஜூலியா ஃபெல்ட்மன் சில கவலைகளைத் தெரிவித்தார். டி ஷர்ட்டில் கன்னித்தன்மை என்பதற்குப் பதிலாக பாலியல் அறிமுகம் என்ற தொடர் எழுதப்பட்டிருந்தது, முழு வரையறையாக அவருக்குப் படவில்லை. கன்னித் தன்மை என்ற கருத்துரு காலாவதியாகிவிட்டது என்பதை அது தெளிவுபடுத்தவும் இல்லை என்றும் அவர் கருதுகிறார்.
 
"ஒரு மாற்றுச் சொல்லைத் தேடும்போது, ​குறைபாடுள்ள ஒரு கருத்துரு பற்றிய விவாதத்தில் இன்னும் ஈடுபடுகிறோம்" என்கிறார் ஜூலியா. தனிப்பட்ட பல தொடக்கங்களில் ஒன்றாக ஹோட்ஜஸ் கூறும் "பாலியல் அறிமுகம்" என்பதை எடுத்துக் கொண்டாலும்கூட, அதில் குறைபாடு இருப்பதாக அவர் கூறுகிறார்.
 
"கன்னித்தன்மை அல்லது பாலியல் அறிமுகம் போன்ற ஒரு தொடரைப் பயன்படுத்தும்போது மற்றொரு நபருடனான நெருக்கத்தைப் பற்றி மட்டுமே கூறுகிறோம். ஒரு நபரின் பாலியல் அனுபவம், அடையாளத்தை வரையறுக்க மற்றொருவருடனான பாலுறவு தேவைப்படுகிறது" என்று ஜூலியா சுட்டிக் காட்டுகிறார்.
 
"நாம் அதை அப்படித்தான் வரையறுக்கிறோம் என்றால் குழப்பம், தோல்வி, ஏமாற்றத்துக்கு நிறைய நபர்களை தயார் செய்கிறோம் என்று பொருள். அதாவது, ஒருவரின் பாலியல் இன்பத்தையும், பாலியல் திருப்தியையும் கணக்கிடுவதற்கு மற்றொருவரின் ஈடுபாடும் தேவை என்றாகிறது"
 
"என் துணை எனக்கு உச்சக்கட்டத்தை இன்பத்தைத் தரவில்லை" என்று ஜூலியாவிடம் பேசும் பலர் கூறுகிறார்கள். இது ஒருவரின் பாலியல் இன்பம் என்பது, அவரது இணையரைச் சார்ந்தது என்று கருதுவதன் விளைவு என்கிறார் அவர். "இது பாலியல் அடையாளங்கள் மற்றும் பாலுணர்வு நோக்கு நிலைகளில் இருந்து அந்நியப்படுத்தவும் செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.
 
இருப்பினும் கன்னித்தன்மை என்பது பல காரணங்களுக்காக பிரச்சனைக்குரியது என்பதில் என்று ஹோட்ஜஸுடன் ஜுலியா உடன்படுகிறார்.
 
"இந்த அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற கருத்துக்களை நாம் கைவிட முடிந்தால், அது நம் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை உருவாக்கும்" என்று அவர் கூறுகிறார்.
 
"இதுவரை நாம் பயன்படுத்தி வரும் கன்னித்தன்மை என்ற கருத்தாக்கத்தை பிரச்சனைக்குரியது என்று நாம் தள்ள வேண்டும். பாலுணர்விற்கு ஒரு தொடக்கம் இருக்கிறது, அது திடீரென்று நிஜமாகி விடும் ஒரேயொரு தருணம் இருக்கிறது என்பதை ஏற்க முடியாது. நம் வாழ்நாளின் அதன் பிறகான காலங்களை என்ன சொல்வது? நாம் அனுபவிக்கும் பிற வகையான இன்பங்களை எதில் சேர்ப்பது? நமக்குக் கிடைத்த மற்ற கண்களைத் திறக்கும் புதிய அனுபவங்கள் எங்கே? அவை கணக்கில் கொள்ளப்பட வேண்டாமா?"
 
"ஒரேயொரு தருணத்தைப் பற்றியது அல்ல"
 
சமூகங்கள் பல முதல் நிகழ்வுகளை நினைவுகூர முனைகின்றன என்கிறார் கார்பென்டர். முதல் குழந்தையின் பிறப்பு, குழந்தையின் முதன் முதலில் பள்ளி செல்லும் நாள் போன்றவை நினைவில் கொள்ளப்படுகின்றன. முதல் பாலியல் அனுபவங்களும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக இருக்கக்கூடும். இருப்பினும் பாலுணர்வைப் பற்றிய விரிவடையும் புரிதல் கன்னித் தன்மை என்பதைக் காலாவதியாக்கும் என்கிறார் அவர்.
 
"பெரும்பாலான மக்கள் படிப்படியாக அனைத்து வகையான பாலியல் விஷயங்களையும் தங்களது அறிவுப் பெட்டகத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். "கன்னித்தன்மை இழப்பு" என்பது மற்ற பாலியல் நடத்தைகளின் ஒன்றாக இருக்கலாம் என்று கருதிக் கொள்கிறார்கள்".
 
அந்த காரணத்திற்காகவே ஹோட்ஜஸ் மற்றும் ஜூலியா போன்றோரின் யோசனைகளில் முக்கியத்துவம் இருப்பதாக கார்பென்டர் கூறுகிறார்.
 
"நீங்கள் ஒரு சுவிட்சைப் போடுவது போல கன்னித்தன்மை என்பது ஒரு கணத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடக் கூடியது என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
 
"பெரும்பாலான மக்களுக்கு இது பொருந்தவில்லை. சமூகங்கள் கட்டமைக்கப்பட்ட விதத்தால் அது சிலருக்குப்பொருந்துவதாக இருக்கலாம். அதில் கலகத்தை விளைக்காவிட்டால், அதுவே பெரிய கலகமாக மாறிவிடமல்லவா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்