Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணுக்குத் தெரியாமல் மிரட்டும் இமயமலையின் பெரிய ஆபத்துகள்

Advertiesment
கண்ணுக்குத் தெரியாமல் மிரட்டும் இமயமலையின் பெரிய ஆபத்துகள்
, சனி, 6 மார்ச் 2021 (09:55 IST)
இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது பனிப்பாறை ஏரிகளின் அளவை ஆபத்தான முறையில் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவை கண்காணிக்கப்படாத பிற ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இரு துருவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இமயமலைப்பகுதியில்தான் உலகிலேயே மிக அதிகமான பனிப்பாறைகள் இருக்கின்றன. புவி  வெப்பமடைதலால் மில்லியன் கணக்கான டன் பனி இங்கு உருகியுள்ளது. இதுபோன்ற ஆபத்துகள் குறித்து நாம் எவ்வளவு தூரம் அறியாமையில் இருக்கிறோம் என்பதற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலியில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
"இத்தகைய ஆபத்துகளின் பின்னணியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி விரிவான புரிதல் நம்மிடம் இல்லை" என்று அமெரிக்காவின் மூத்த  புவியியலாளரும் இமயமலை பேரழிவுகள் பற்றிய ஆராய்ச்சியாளரும், உத்தராகண்ட் பேரழிவு குறித்து ஆராய்ச்சி செய்துவருபவருமான ஜெஃப்ரி கார்ஜெல் கூறுகிறார்.
 
உத்தராகண்ட் நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது நாம் செயலில் இறங்குகிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகுவதன் மூலமாக ஏற்படக்கூடிய இதுபோன்ற  ஆபத்துக்களை நாம் கண்காணிப்பதில்லை.'' என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் ஆபத்து
பனிப்பாறைகள் உருகும்போது அல்லது மெலிந்துபோகும்போது இவற்றில் பல ஆபத்தானதாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக பனிப்பாறை  உருகியபின் மீதமுள்ள பனி மலைகளின் செங்குத்தான கிடைமட்டத்தில் ஒட்டிக்கொண்டு இருந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும்.
 
மெல்லிய பனிப்பாறைகள் மலையின் கீழும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் சீர்குலைவை ஏற்படுத்தும் சாத்தியமும் உள்ளது. இது நிலச்சரிவு, பாறை வீழ்ச்சி ,பனி  வீழ்ச்சி போன்ற சம்பவங்களை ஏற்படுத்தும். முழு மலையின் சாய்வும் இடிந்து விழக்கூடும்.
 
இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நிகழக்கூடும், எந்த மனித குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு, ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பது  நமக்குத்தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இமயமலையின் கடினமான புவியியல் அமைப்பு, கண்காணிப்பு பணிகளை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.
 
"இமயமலை மற்றும் இந்துகுஷ் வட்டாரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. அவற்றில் 30 மட்டுமே உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, கள  ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்று இந்தூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பனிப்பாறை நிபுணர் முஹம்மது பாரூக் ஆசாம் தெரிவிக்கிறார்.
 
"இவற்றில் 15 ஆய்வுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. பனிப்பாறைகளை நாம் இன்னும் நெருக்கமாக ஆராய வேண்டும், ஏனென்றால் பல காரணிகளின் பங்கு  மிக முக்கியமானது. ''என்கிறார் அவர்.
 
நிலநடுக்கம் மற்றும் காலநிலை
உலகின் இளம் மலைத்தொடரான இமயமலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், நிலநடுக்கங்கள் பெரும்பாலும் மலை சரிவுகளை ஒழுங்கற்றதாக ஆக்குகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பொழிவு மற்றும் மழை பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், மலைகளை மேலும் பாதிப்பு ஏற்படக்கூடியதாக ஆக்குகின்றன என்று  அவர்கள் மேலும் கூறுகின்றனர். புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன என்றும் விஞ்ஞானிகள்  எச்சரிக்கின்றனர்..
 
2016 ஆம் ஆண்டில், திபெத்தின் அரு மலையில் ஒரு பனிப்பாறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கால்நடைகளும் இறந்துபோயின.
 
சில மாதங்களுக்குப் பிறகு அதே மலையில் மற்றொரு பனிப்பாறை எதிர்பாராத விதமாக சரிந்தது.
 
2012 ஆம் ஆண்டில், காஷ்மீரின் சியாச்சினில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு விபத்தில் சுமார் 140 பேர் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வீரர்கள்.
 
குறைவான பனிப்பாறைகள், அதிக நிலச்சரிவுகள்
 
1999 முதல் 2018 வரை நிலச்சரிவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பனிப்பாறைகள் உருகுவதே என்று மேற்கு இமயமலை, கிழக்கு பாமிர், காரகோரம் மற்றும் இந்துகுஷ் மலைத்தொடரின் தெற்கு பகுதி உள்ளிட்ட ஆசியாவின் மிக உயர்ந்த மலைப்பிரதேசங்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
 
சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் அமெரிக்க புவியியல் ஆய்வு செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தபோது, 2009 மற்றும் 2018 க்கு இடையில் 127 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
 
"நிலச்சரிவுகள் ஏற்படும் பகுதிகள் மற்றும் அதன் எண்ணிக்கையில் மாற்றங்கள் தெரிவதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. இது கடந்த தசாப்தத்தில் பெரிய நிலச்சரிவுகளின் அதிகரித்துவரும் போக்கைக் காட்டுகிறது. பனிப்பாறைகள் குறைவதற்கும், நிலச்சரிவுகள் அதிகரிப்பதற்கும் நேரடித் தொடர்பு உண்டு," என்று  ஜனவரி மாத 'நேச்சர்' சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
 
டாலியா கிர்ஷ்பாம், நாசாவின் நீர்நிலை அறிவியல் ஆய்வகத்திற்கு தலைமை வகிக்கிறார்.அவர் ஒரு நிலச்சரிவு நிபுணரும் ஆவார். "பனிப்பாறைகள் உருகுவதோடு  தொடர்புடைய ஆபத்துகள் வெளிப்படையாக தெரியத்தொடங்கியுள்ளன," என்று அவர் கூறுகிறார்.
 
"முன்னர் பனிப்பாறைகள் காரணமாக,மலைச்சரிவுகளில் இருக்கும் பாறைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது பனிப்பாறை இல்லையென்றால், அவை  அந்தரத்தில் நிற்கின்றன. இதனால் ஆபத்து ஏற்படக்கூடும்," என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
2018 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுகளின் குழுவின் (ஐபிசிசி) கிரையோஸ்பியர் குறித்த சிறப்பு அறிக்கை, "பனிப்பாறைகள்  உருகுவதும் பெர்மா ஃப்ராஸ்ட்( நிரந்தரமாக உறைந்த நிலையில் இருக்கும் மண்படிவம்) உருகுவது போன்றவை மலைச்சரிவுகளின் நிலைத்தன்மை மற்றும்  அடிப்படையை பலவீனமாக்கியுள்ளது ,''என்று தெரிவிக்கிறது.
 
மலைகளின் பனிப்பாறைகள், கண்டப் பனிக்கட்டிகள், பனி மற்றும் பனி மூடிய பகுதிகள் மற்றும் கடல் பனி போன்ற உறைந்த நிலையில் தண்ணீரைக் கொண்டிருக்கும் புவிக்கோளின் பகுதிகளையே கிரையோஸ்பியர் என்று குறிப்பிடுகிறார்கள்.
 
பனிப்பாறை ஏரிகள் மீது கவனம்
 
பனிப்பாறைகளின் விரைவான உருகுவது மற்றும் பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான முறையில் நிரம்புவதால் ஏற்படும் உடைப்பு ஆகியவவை பற்றி, இமயமலை  பனிப்பாறைகள் குறித்த வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் மறைவது துரிதப்படுத்தப்பட்டால், இப்பகுதியில் பனிப்பாறையால் நிரம்பும் ஆறுகளுக்கு என்ன நேரிடும் என்பதையும் சில ஆய்வுகள் கவனித்துள்ளன.
 
பனிப்பாறை ஏரிகள் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளன, அதே நேரத்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகளுடன் தொடர்புடைய பிற ஆபத்துகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
உட்டா பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர் சமர் ரூபர், "இது குறைவான கவனத்தைப் பெற்றுள்ளது" என்று கூறுகிறார். உளவு செயற்கைக்கோள் படங்கள்  வாயிலாக இமயமலையின் பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை இவர் ஆய்வு செய்துள்ளார். "பனிச்சரிவு மற்றும் பனிப்பொழிவு போன்ற பேரழிவுகள் அரிதாக  இருந்ததும், பனிப்பாறை தொடர்பான ஆபத்துக்கள் அவ்வளவு அதிகமாக இல்லாததும் இதற்குக்காரணமாக இருக்கக்கூடும்" என்கிறார் அவர்.
 
பனிப்பாறை ஏரி தொடர்பான வெள்ளம், வரலாற்று ரீதியாக இப்பகுதியில் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது என்று பல ஆண்டுகளாக இமயமலைப் பகுதியில் பணியாற்றி வரும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
"பனிப்பாறையிலிருந்து வெகு தொலைவில் வாழும் எச்சரிக்கை உணர்வு இல்லாத மக்களை இந்த வெள்ளம் பாதிக்கக்கூடும் என்பதால் இது இந்த குறிப்பிட்ட பேரழிவை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது," என்று மையத்தின் கிரையோஸ்பியர் முன்முயற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மிரியம் ஜாக்சன் கூறினார்.
 
உறைந்த பனிப்பாறை பற்றிய ஆய்வு
 
இந்திய அரசு நிறுவனங்கள் எச்சரிக்கைகள் குறித்து போதுமான கவனம் செலுத்தவில்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
 
மூத்த பனிப்பாறை நிபுணரான டாக்டர் டி.பி.டோபல், அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாடியா, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி அமைப்பிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் கூறுகிறார்: "நாங்கள் 2009 இல் பனிப்பாறைகளைப் ஆய்வுசெய்ய ஒரு மையத்தைத் தொடங்கினோம். இதை இந்திய  பனிப்பாறைகள் தேசிய மையமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது."
 
"இது நடக்கவேயில்லை. பனிப்பாறை குறித்த ஆய்வு இதன் காரணமாக பாதிக்கப்பட்டது. நாங்கள் பயிற்சியளித்த ஒரு டஜன் பனிப்பாறை வல்லுநர்களுக்கு வேலை  போய்விட்டது," என்று டோபல் கூறுகிறார்.
 
இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டத்தின் கீழ் , எட்டு தேசிய பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று "இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பது".
 
அதன் நோக்கம் 'இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் பனிப்பாறைகளைப் புரிந்துகொள்வதும் , அவற்றின் தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதும், தரவுகளை  உருவாக்குவதும், புதிய முறைகளைப் பின்பற்றுவதும்' ஆகும்.
 
இமயமலை எல்லையை பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதற்றமும் இதற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதாக சில  நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
"இந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டும். எல்லைகளைத் தாண்டிய பனிப்பாறைகள் தொடர்பான தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் பனிப்பாறைகள் உருகுவது தொடர்புடைய ஆபத்துக்களை நாம் விரிவாகக் கண்காணிக்கவும், பேரழிவுகளைச் சமாளிக்க நம்மை  தயார்படுத்திக்கொள்ளவும் முடியும்," என்று கடல் மற்றும் கிரையோஸ்பியர் குறித்த ஐபிசிசியின் சிறப்பு அறிக்கையின் முதன்மை ஒருங்கிணைப்பு எழுத்தாளர்  அஞ்சல் பிரகாஷ் தெரிவிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு