Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பம் தரித்த தந்தை, தாயாக போகும் திருநங்கை - மாற்றுப் பாலின தம்பதியின் கதை!

கர்ப்பம் தரித்த தந்தை, தாயாக போகும் திருநங்கை - மாற்றுப் பாலின தம்பதியின் கதை!
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:36 IST)
கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
கேரள மாநிலம் கோழிக்கோடு - உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத் - ஜியா இருவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. அதேபோல், ஜியா பாவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.
 
காதலர்களான இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குழந்தை மீதான ஆசையால் முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பிய இவர்கள், அதிலுள்ள சில சட்ட சிக்கல்களால் தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து மருத்துவரை அணுகியுள்ளனர்.
 
பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், அவரால் மருத்துவ சிகிச்சையின் மூலம் கர்ப்பமாக முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜியா - சஹத் இருவருமே வேறு பாலினத்திற்கு மாறும் சிகிச்சையில் இருந்தாலும், அவை இன்னும் முழுமையாக முடிவடையாததால், சஹத் கர்ப்பமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதன்படி, ஜியாவின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர். இந்த முறையில் சஹத் கர்ப்பம் அடைந்துள்ளார். சஹத்திற்கு இம்மாதம் (பிப்ரவரி) அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற உள்ளது.
 
'அம்மா' என்ற அழைப்புக்குக் காத்திருக்கும் ஜியா
 
தங்கள் மகிழ்ச்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜியா, "நான் பிறப்பாலோ அல்லது என்னுடைய உடலமைப்பாலோ பெண்ணாக இல்லாவிட்டாலும், 'அம்மா' என ஒரு குழந்தை அழைக்க வேண்டும் என்ற பெண்மைக்கே உண்டான கனவு எனக்குள் இருந்தது.
 
நாங்கள் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்கு எப்படி அம்மா ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறதோ, அதேபோன்று சஹத்திற்கும் அப்பா ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இப்போது, அவருடைய வயிற்றில் எட்டு மாத உயிர் அவருடைய முழு ஒப்புதலுடன் அசைந்துகொண்டிருக்கிறது," என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
 
தங்களுக்குத் தெரிந்தவரை இந்தியாவிலேயே திருநம்பி ஒருவர் கர்ப்பமடைந்திருப்பது இதுவே முதன்முறை என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளார் ஜியா.
 
மகிழ்ச்சியில் இருந்த சஹத், பிபிசி தமிழிடம் பேசினார்.
 
சஹத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், ஜியா கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் சஹத் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். ஜியா ஒரு நடனக்கலைஞர்.
webdunia
காதல் மலர்ந்தது எப்படி?
 
"2020ஆம் ஆண்டு கொரோனா அலை வீசிக்கொண்டிருந்தபோதுதான் நான் ஜியாவை முதன்முறையாகச் சந்தித்தேன். அப்போது முதலே எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டது. அப்போதிருந்து ஒன்றாகத்தான் வாழ்க்கையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்," என்கிறார் சஹத்.
 
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் சஹத்.
 
"என் வீட்டில் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர், சகஜமாக வீட்டுக்குச் சென்று வருவேன், ஆனால் எங்களுக்குள் காதல் ஏற்பட்ட பிறகு அம்மா என்ன நினைப்பாரோ, சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயத்தில் வீட்டுக்கு இரண்டு ஆண்டுகளாகச் செல்லவில்லை. இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டனர். அம்மா, தங்கை எல்லாம் என்னைப் பார்க்க வருவார்கள்," என்கிறார் சஹத்.
 
ஆனால், ஜியாவுக்கு அப்படியல்ல. "பாரம்பரியமான முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஜியாவை அவர்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றுவரை எதிர்ப்புதான்." என்றார் சஹத்.
 
6ஆம் வகுப்புப் படிக்கும்போதே தன்னை ஆணாக உணர்ந்திருக்கிறார் சஹத். "மார்பக அகற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளேன். கர்ப்பமாக இருப்பதால், ஹார்மோன் சிகிச்சையை இருவருமே நிறுத்தி வைத்துள்ளோம். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தொடங்கிவிடுவோம்" என்றார்.
 
குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் குறித்துப் பேசிய சஹத், "சேர்ந்து வாழத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். தத்தெடுக்கலாம் என நினைத்தோம், ஆனால் மாற்றுப்பாலின தம்பதிகள் குழந்தையைத் தத்தெடுப்பதில் உள்ள சட்ட சிக்கல்களால் அது சாத்தியமாகவில்லை.
 
அதன்பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம். ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதால் இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பதையெல்லாம் பரிசோதித்தோம். முதல்முறை சிகிச்சை எடுத்தபோது கரு உருவாகவில்லை.
 
இரண்டாவது முறைதான் கரு உருவானது. உறுதியான பிறகு முதலில் என் தங்கையிடம்தான் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். இம்மாதம் குழந்தை பிறக்க உள்ளது," எனத் தெரிவித்தார்.
webdunia
கர்ப்ப கால புகைப்படங்கள் வைரலானது குறித்துப் பேசிய சஹத், "புகைப்படங்களை எங்களுக்காகத்தான் எடுத்தோம். ஆனால், இவ்வளவு வரவேற்பும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
 
நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வரும், அதை பாசிட்டிவாகவே பார்க்கிறோம். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என இப்போதே தயார் செய்கிறோம். அதன் பாலினத்தை குழந்தையே தீர்மானிக்கட்டும், குழந்தையை நல்ல மனிதனாக வளர்த்து முன்னேற்றுவோம். அறுவைசிகிச்சை மூலம்தான் எனக்குப் பிரசவம் நடக்கும். பின்னர் கர்ப்பப்பையை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள உள்ளோம்," என்றார்.
 
குழந்தைக்கு ஒரு வயது ஆன பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக சஹத்தும் ஜியாவும் கூறுகின்றனர்.
 
"எப்போது குழந்தை பிறக்கும் என ஜியா ஆர்வமாக இருக்கிறாள். இந்தக் குழந்தைக்கு நான் அப்பா, ஜியா அம்மா.
 
எங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தானம் அளிக்க பெண் ஒருவர் முன்வந்துள்ளார். மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி," எனத் தெரிவித்தார் சஹத்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

32 கிராமி விருதுகள்; சாதனை மழையில் Beyonce! – ஆச்சர்யத்தில் இசை ரசிகர்கள்!