சூடானில் குடிமை அரசை கலைத்துள்ள அந்நாட்டு ராணுவம், அரசியல் தலைவர்களை கைது செய்துள்ளதுடன் அவசர நிலையையும் பிரகடனம் செய்துள்ளது.
அரசியல் சண்டைகளே குடிமை அரசைக் கலைப்பதற்கான காரணமென்று, குடிமை அரசின் தலைவர்களுடன் சேர்ந்து, நாட்டை நிர்வகிக்கும் கூட்டுக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் ஃபட்டா புர்கான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கார்தூமில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானை நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஓமர் அல்-பஷீர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஓர் இடைக்கால அரசு குடிமைத் தலைவர்களை கொண்டு அமைக்கப்பட்டது.
அப்போது முதலே குடிமை அரசின் தலைவர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
ஆழமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சூடானுக்கு மிகப்பெரிய அளவில் சர்வதேச நாடுகள் உதவி செய்து வருகின்றன. தற்பொழுது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளதால் அந்த உதவிகளை ஏற்படுவதற்கான அபாயம் உண்டாகியுள்ளது.