Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் வீகர் மக்கள் மீது பரிசோதிக்கப்பட்ட உணர்ச்சி கண்டறியும் மென்பொருள்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:42 IST)
உணர்ச்சி நிலைகளை கண்டுபிடிக்கக்கூடிய, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அடையாளத்தை பயன்படுத்தும் கேமரா அமைப்பு ஆகியவை ஷின்ஜியாங்கில் உள்ள வீகர் இன மக்கள் மீது சோதிக்கப்பட்டுள்ளது என்று பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
ஒரு மென்பொருள் பொறியாளர் அத்தகைய அமைப்புகளை மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிறுவியதாகக் கூறினார்.
 
ஆதாரங்களைக்கண்ட ஒரு மனித உரிமை ஆர்வலர், அது அதிர்ச்சி தருகிறது என்று விவரித்தார்.
 
லண்டனில் உள்ள சீனத் தூதரகம் இந்த கூற்றுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் சீனாவில் எல்லா இனத்தவர்களுக்கும் அரசியல் மற்றும் சமூக உரிமைகளுக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறுகிறது.
 
ஷின்ஜியாங் மாகாணத்தில் 12 மில்லியன் சிறுபான்மை வீகர் இன மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
 
மாகாணத்தில் உள்ள குடிமக்கள் தினசரி கண்காணிப்பின் கீழ் உள்ளனர். இந்தப்பகுதியில் மிகவும் சர்ச்சைக்குரிய "மறு கல்வி மையங்கள்" அமைந்துள்ளன. இவை மனித உரிமைகள் குழுக்களால் 'உயர் பாதுகாப்பு தடுப்பு முகாம்கள்' என அழைக்கப்படுகின்றன. அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தப் பிராந்தியத்தில் கண்காணிப்பு அவசியம் என்றும் ஏனெனில், தங்கள் சொந்த நாட்டை அமைக்க விரும்பும் பிரிவினைவாதிகள், பயங்கரவாத தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளனர் என்றும் பெய்ஜிங் தொடர்ந்து வாதிடுகிறது.
 
தனது பாதுகாப்பைக்கருத்தில்கொண்டு தன் பெயரை வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மென்பொருள் பொறியாளர் ஒருவர், பிபிசியின் 'பனோரமா நிகழ்ச்சியில்' பேச ஒப்புக்கொண்டார். தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயரையும் அவர் தெரிவிக்கவில்லை.
 
ஆனால் உணர்ச்சி வேகம் கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கூறும் ஐந்து வீகர்களின் புகைப்படங்களை அவர் பனோரமாவுக்குக் காட்டினார்.
 
"ஆய்வகங்களில் எலிகள் பயன்படுத்தப்படுவதைப் போலவே சீன அரசு பல்வேறு சோதனைகளுக்கு வீகர்களை பயன்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
 
மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களில் கேமராக்களை நிறுவுவதில் தான் வகித்த பங்கை அவர் கோடிட்டுக் காட்டினார். "நாங்கள் உணர்ச்சி கண்டறியும் கேமராவை ஒருவருக்கு 3 மீட்டர் தொலைவில் வைத்தோம். இது பொய்களைக்கண்டுபிடிக்கும் கருவிக்கு ஒப்பானது. ஆனால் இதில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளது."
 
சீனா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பரவலாக நிறுவப்பட்டுள்ள "கட்டுப்படுத்தும் நாற்காலிகளை" அதிகாரிகள் பயன்படுத்தினர் என்று அவர் கூறினார்.
 
"உங்கள் மணிக்கட்டு உலோகப் பிணைப்புகளால் பூட்டப்படுகிறது. மேலும் இது உங்கள் கணுக்கால்களிலும் மாட்டப்படுகிறது," என்கிறார் அவர்.
 
முகபாவங்கள் மற்றும் தோல் துளைகளில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதற்கு, செயற்கை நுண்ணறிவு (AI ) அமைப்புக்கு எவ்வாறு பயிற்சியளிக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களை அவர் வழங்கினார்.
 
அவரது கூற்றுப்படி, மென்பொருள் ஒரு வரைபடத்தை உருவாக்குகிறது. இதில் சிவப்பு பிரிவு எதிர்மறை அல்லது கவலையான மனநிலையை குறிக்கிறது.
 
இந்த மென்பொருள் "நம்பகமான ஆதாரங்கள் இல்லாமலேயே ஒருவரை முன்மதிப்பிடுகிறது" என்று அவர் கூறினார்.
 
உணர்ச்சிவேகத்தை அடையாளம் காணும் மென்பொருள் அம்மாகாணத்தில் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விகளுக்கு லண்டனில் உள்ள சீனத் தூதரகம் பதிலளிக்கவில்லை. ஆனால் "ஷின்ஜியாங்கில் உள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் மற்றும் மத நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றிற்கு முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது," என்று அது குறிப்பிட்டது.
 
"மக்கள் தங்கள் இனப் பின்னணியைப் புறந்தள்ளி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எந்த தடையும் இல்லாமல் நிலையான மற்றும் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்."
 
இந்த நிலையில், சீன மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் சோஃபி ரிச்சர்ட்சனுக்கு, இதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டன.
 
"இது அதிர்ச்சியூட்டுகிறது. மக்கள் ஒரு வரைபடமாக ஆக்கப்படுவது ஏற்றுகொள்ளமுடியாதது. மிரட்டலுக்கு உள்ளான ஒரு சூழலில் மக்கள் மிகுந்த அழுத்தத்தின் கீழ் இருப்பார்கள். ஆகவே அவர்கள் பதற்றமாக இருப்பது இயற்கையே. ஆனால் அதுவே குற்ற உணர்ச்சியின் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிகவும் பிரச்சனை வாய்ந்ததாக இதை நான் கருதுகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
சந்தேகத்திற்கிடமான நடத்தை
 
வீகர்கள் வழக்கமாக உள்ளூர் அதிகாரிகளுக்கு டி.என்.ஏ மாதிரிகளை வழங்க வேண்டும், டிஜிட்டல் ஸ்கேன் செய்ய வேண்டும், பெரும்பாலானவர்கள் அரசு தொலைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும், இது தொடர்பெண் பட்டியல், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தரவுகளை சேகரிக்கிறது என்று கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேரன் பைலர் கூறுகிறார்.
 
"வீகர்களின் வாழ்க்கை என்பது இப்போது தரவுகளாக ஆகிவிட்டது," என்று அவர் கூறினார்.
 
"ஸ்மார்ட்போன் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். அதை எடுத்துச் செல்லவில்லை என்றால் நீங்கள் தடுத்து வைக்கப்படலாம். இதன் மூலம் தாங்கள் கண்காணிக்கப்படுவது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதிலிருந்து தப்ப முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார் அவர்.
 
'ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாட்டு தளம்' எனப்படும் கணினி அமைப்பில் பெரும்பாலான தரவுகள் உட்செலுத்தப்படுகிறன. சந்தேகத்திற்கிடமான நடத்தை என்று தான் கருதுவதை அது பிரித்துக்காட்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
 
"இந்த அமைப்பு டஜன் கணக்கான சட்டரீதியான சரியான நடத்தைகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறது. இதில் மக்கள் முன் கதவுக்குப் பதிலாக பின் கதவு வழியாக வெளியே செல்கிறார்களா, அவர்களுக்கு சொந்தமில்லாத ஒரு காரில் எரிபொருளை நிரப்புகிறார்களா என்பது போன்ற விஷயங்கள் அடங்கும்" என்கிறார் திருமதி ரிச்சர்ட்சன்.
 
"அதிகாரிகள் இப்போது QR குறியீடுகளை வீட்டு கதவுகளுக்கு வெளியே வைக்கிறார்கள். உண்மையில் அங்கு யார் இருக்கவேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை அவர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்."
 
சுதந்திரமான சமூகத்திற்கு ஆதரவு?
சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசுடன் எவ்வளவு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி நீண்ட காலமாக விவாதம் நடந்து வருகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வுக் குழு ஐபிவிஎம், அத்தகைய நிறுவனங்கள் தாக்கல் செய்த காப்புரிமைகளில் ஆதாரங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகிறது, குறிப்பாக வீகர் மக்களை அடையாளம் காண வடிவமைக்கப்பட்டுள்ள முக அடையாள தயாரிப்புகள் பற்றி இவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
 
2018 ஜூலையில் உவாவே மற்றும் சைனா அகாடமி ஆஃப் சயின்சஸ் தாக்கல் செய்த காப்புரிமை, இன அடிப்படையில் மக்களை அடையாளம் காணும் திறன் கொண்ட , முக அடையாளம் காணும் தயாரிப்பு ஒன்றைப்பற்றி விவரிக்கிறது.
 
எந்தவொரு சமூகத்தின் உறுப்பினர்களையும் பாகுபடுத்தவோ, ஒடுக்கவோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும். தான் செயல்படும் எல்லா இடங்களிலும் "அரசிடமிருந்து தனித்தே" செயல்படுவதாகவும், உவாவே தெரிவித்தது.
 
'ஒரு நபர், ஒரு கோப்பு முறைமை' என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் உருவாக்கி வருவதாகக் கூறும் ஒரு ஆவணத்தையும்,ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
 
"ஒவ்வொரு நபர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், அவர்களின் அரசியல் நடவடிக்கைகள், உறவுகள், அந்த நபர் எவ்வாறு நடந்துகொள்வார், அவர்கள் எந்த வகையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பற்றிய நுண்ணறிவைத் தரக்கூடிய எல்லா தகவல்களையும் அரசு சேமித்து வைக்கும்," என்று ஐபிவிஎம் ஆய்வுக்குழுவின் கோனார் ஹீலி கூறினார்.
 
"இது எந்தவிதமான எதிர்ப்பையும் சாத்தியமற்றதாக்குகிறது. குடிமக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்ற உண்மையான முன்கணிப்பை அரசுக்கு உருவாக்குகிறது. ஒரு அரசு இந்த வகையான பகுப்பாய்விற்கான திறனைப்பெறும் என்று எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
'ஒரு நபர், ஒரு கோப்பு முறைமைக்கான' தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் அதன் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு உவாவே பதிலளிக்கவில்லை. ஆனால் தான் செயல்படும் இடமெல்லாம், அரசிடமிருந்து தனித்தே செயல்படுவதாக மீண்டும் மீண்டும் கூறியது.
 
லண்டனில் உள்ள சீன தூதரகம் இந்த திட்டங்களைப் பற்றி " தனக்கு எதுவும் தெரியாது" என்று கூறியது.
 
சீன நிறுவனமான ஹிக்விஷனில் இருந்து ஒரு வீகர்-கண்டுபிடிப்பு AI கேமராவின் விளம்பர ஆவணங்களையும், மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான டஹுவா உருவாக்கிய , வீகர்களை அடையாளம் காணக்கூடிய மென்பொருளுக்கான காப்புரிமையையும், தான் கண்டுபிடித்ததாக ஐபிவிஎம் கூறியது.
 
தனது காப்புரிமை சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 56 இனங்களையும் குறிக்கிறது என்றும் அவர்களில் யாரொருவரையும் வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்றும் டஹுவா கூறியது.
 
இவை "மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் தயாரிப்புகள்" என்றும், இங்கிலாந்து உட்பட தான் செயல்படும் "ஒவ்வொரு சந்தையின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும்" இணங்கி சேவைகள் வழங்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
 
ஹிக்விஷன் தனது வலைத்தளத்தில் உள்ள விவரங்கள் தவறானவை என்றும் "பொருத்தமான மதிப்பாய்வு இல்லாமல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன" என்றும் கூறியது. மேலும் தனது தயாரிப்பு வரம்பில் "சிறுபான்மையின அடையாள செயல்பாடு அல்லது பகுப்பாய்வு தொழில்நுட்பம்" இல்லை என்றும் தான் அதை விற்கவும் இல்லை என்றும் தெரிவித்தது.
 
AI ஆளுமை தொடர்பான சீனாவின் தேசியக் குழுவின் தலைவர் டாக்டர் லான் சூ, இத்தகைய காப்புரிமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
 
"சீனாவுக்கு வெளியே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன. இவற்றில் பல , துல்லியமானவை அல்ல, உண்மையானவையும் இல்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
"ஷின்ஜியாங் மக்களை உண்மையிலேயே பாதுகாக்கும் பொறுப்பு ஷின்ஜியாங் உள்ளூர் அரசுக்கு உள்ளது என்று நான் நினைக்கிறேன். அந்த சூழலில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், அது மிகவும் புரிந்துகொள்ளத்தக்கது," என்று அவர் கூறினார்.
 
பிரிட்டனின் சீன தூதரகம் மிகவும் வலுவாக இந்தக்குற்றச்சாட்டை எதிர்த்தது. "வீகர் பகுப்பாய்வுகளைக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்பம் என்று கூறப்படும் எதுவும் இல்லை," என்று பிபிசியிடம் அது தெரிவித்தது.
 
தினசரி கண்காணிப்பு
 
உலகின் கிட்டத்தட்ட 800 மில்லியன் கண்காணிப்பு கேமராக்களில் பாதி, சீனாவில் உள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
நகர்ப்புற சூழலின் கட்டமைப்பிலேயே AI இருக்கும்படியான சோங்கிங் போன்ற ஏராளமான ஸ்மார்ட் நகரங்களும் இங்கு உள்ளன.
 
சோங்கிங்கை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் ஹு லியு தனது சொந்த அனுபவத்தைப் பற்றி பனோரமாவிடம் கூறினார்: "நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி லிப்ட்டுக்குள் நுழைந்தவுடன், ஒரு கேமரா உங்களை படம்பிடிக்கிறது. எல்லா இடங்களிலும் கேமராக்கள் உள்ளன."
 
"நான் எங்காவது செல்ல வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு டாக்சியை அழைக்கிறேன். டாக்சி நிறுவனம் தரவை அரசிடம் பதிவேற்றுகிறது. பின்னர் நான் சில நண்பர்களை சந்திக்க ஓர் ஓட்டலுக்குச் சென்றால், ஓட்டலில் உள்ள கேமரா மூலம் நான் இருக்கும் இடத்தை அதிகாரிகள் தெரிந்துகொள்கிறார்கள்."
 
" நான் சில நண்பர்களைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. 'அந்த நபரைப் பார்க்க வேண்டாம், இதைச் செய்யாதீர்கள்.'என்று அவர்கள் எச்சரித்தனர்."
 
"செயற்கை நுண்ணறிவு காரணமாக நாம் இனி மறைந்துகொள்ள இடமே இல்லை," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments