Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்க பிஸ்கெட்டுகளாக மாறும் கோயில் நகைகள் - அமைச்சரின் அறிவிப்பால் என்ன நடக்கும்?

தங்க பிஸ்கெட்டுகளாக மாறும் கோயில் நகைகள் - அமைச்சரின் அறிவிப்பால் என்ன நடக்கும்?
, திங்கள், 4 அக்டோபர் 2021 (10:34 IST)
கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. `வழிபாட்டுக்குத் தேவையில்லாத நகைகளை உருக்கி வங்கிகளில் தங்க வைப்பு நிதியில் வைத்து வருமானம் ஈட்டுவோம்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது. என்ன நடக்கிறது?
 
வட்டிப் பணத்தில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,301 கோவில்கள் உள்ளன. இவற்றில் அதிக வருவாய் வரக் கூடிய கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த தங்க நகைகளில் ஏராளமானவை பயன்பாடில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இவற்றை மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி வங்கிகளில் தங்கம் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வட்டியின் மூலம் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
 
இதன் ஓர் அங்கமாக, கோவில்களில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் துரிதப்படுத்த சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களுக்கு தனித்தனி நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜுவும் மதுரை மண்டலத்துக்கு நீதிபதி மாலாவும் திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவி சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. `` கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது என்பது அந்தக் கோவிலுக்கு மட்டுமே சொந்தமானது. கோவில் நகைகளை என்ன செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அது அறநிலையத்துறையின் பணி அல்ல" என்கிறார் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன். இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட இந்து இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
67 நகைகள் எங்கே?
அறநிலையத்துறையின் முயற்சிகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில பொறுப்பாளர் பக்சி சிவராஜன், `` நகைகளை உருக்கி முதலீடு செய்வதற்கான உரிமை அரசுக்குக் கிடையாது. கோவிலில் என்ன நோக்கத்துக்காக பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தார்களோ, அந்த நோக்கத்துக்காகத்தான் அவை செலவழிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்றுவது என்பது அதிகார அத்துமீறலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது" என்கிறார்.
webdunia
மேலும், `` 1970 ஆம் ஆண்டு, `67 நகைகளை டெபாசிட் செய்கிறோம்' என்ற பெயரில் ராமேஸ்வரம் கோவிலில் இருந்த நகைகளை அழித்துவிட்டனர். அந்த நகைகளின் மூலம் கோவிலுக்கு பத்து பைசாகூட வருமானம் வரவில்லை. பயன்பாட்டில் இல்லாத நகைகளை முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் அழித்தனர். அவை என்னவானது என இன்றளவும் தெரியவில்லை" என்கிறார்.
 
`` திருப்பதி கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டப்படுகிறதே?" என்றோம். `` திருப்பதி கோவிலில் அளவுக்கு மீறிய நகைகள் உள்ளன. அங்கு உண்டியலில் போடும் நகைகளை அழித்து முதலீடு செய்வது என்பது வேறு. இங்குள்ள நிலைமை என்பது வேறு. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த நகைகளை அழித்து முதலீடு செய்யப் போவதாகக் கூறுகிறார்கள். இதனை ஏற்க முடியாது. கோவில் நகைகள் எல்லாம் மஞ்சள் தங்கமாகப் பார்க்கப்படுகிறது. அதில் உள்ள கற்கள் எல்லாம் விலைமதிப்பில்லாதவை. நகைகளை அழித்தால் அதில் உள்ள கற்களை என்ன செய்வார்கள்? கோவிலுக்கு உரிமையாளர் கடவுள் மட்டும்தான். அவருக்கு காணிக்கையாக வந்த நகைகளில் கை வைக்கும் உரிமை அரசுக்கு இல்லை" என்கிறார்.
 
பழங்கால நகைகள் பாதுகாக்கப்படுமா?
அடுத்ததாக, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரிடம் பேசினோம். `` இவர்கள் எந்த நகைகயை மாற்றப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. உண்டியலில் செலுத்திய நகையா.. அல்லது கடவுளுக்கு அலங்காரத்துக்கு கொடுத்த நகையா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. உண்டியலில் தாலி, மோதிரம் மற்றும் அலங்காரப் பொருள்களை காணிக்கையாகப் போடுவார்கள்.
 
பழங்கால நகைகளாக இருந்தால் அது உடைந்திருந்தாலும் அதனை சரிசெய்து பயன்படுத்தலாம். பழைய காலத்து நகைகளை எல்லாம் பாதுகாத்து வைப்பதுதான் சரியாக இருக்கும். உண்டியலில் வந்தது காணிக்கையாக இருப்பதால் அதனை பயன்படுத்துவதில் தவறில்லை. காரணம். அந்த நகைகளை வைத்துத்தான் திருத்தணி, பழநியில் தங்கத் தகடுகளை வேய்ந்தார்கள். இதுதொடர்பாக முழுமையான தகவல்கள் வந்த பிறகு பேசுகிறேன்" என்கிறார்,
 
தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாகவே, ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``கோயில்களில் கடவுளுக்கு வந்த அனைத்து நகைகளையும் வங்கியில் வைக்கப் போவதாக நாங்கள் கூறவில்லை. மன்னர்களும் ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் அளித்த நகைகளில் ஒரு குண்டுமணி அளவுகூட நாங்கள் எடுக்கப் போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்குக் காணிக்கையாக வந்த நகைகள் தேங்கிக் கிடக்கின்றன. அதில் எந்தவிதப் பயன்பாட்டிலும் இல்லாத நகைகளைக் கணக்கிட உள்ளோம்" என்றார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` அந்த நகைகளில் தெய்வ வழிபாட்டுக்குப் பயன்படும் நகைகளைக் கணக்கிட்டு தெய்வங்களுக்குப் பயன்படுத்த உள்ளோம். அதில் தேவைப்படாத நகைகள், உடைந்த நகைகள், சிறு நகைகள் ஆகியவற்றை மத்திய அரசின் தங்க உருக்காலைக்குக் கொண்டு சென்று உருக்க இருக்கிறோம். தங்கக் கட்டிகளை தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையை கோவில்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த உள்ளோம். இந்தத் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த உள்ளோம். திருப்பதியிலும் இந்த நடைமுறை உள்ளது. தமிழ்நாட்டிலும் 1977 முதல் இந்த நடைமுறை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இந்தப் பணிகள் நடைபெறவில்லை. இந்தத் திட்டத்தில் துளியளவும் தவறு நடைபெற வாய்ப்பில்லை" என்றார்.
 
கோவில்களுக்குப் பலன் கிடைக்குமா?
அதேநேரம், ``தங்கத்தை வைப்பு நிதியில் வைப்பதால் கோவில்களுக்கு எந்தவகையில் பலன் கிடைக்கும்?" என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` 2015 ஆம் ஆண்டில் இருந்து கோல்டு மானிடைஷேசன் திட்டம் (Gold Monetization Scheme) அமலில் உள்ளது. அதில் 24 கேரட் தங்கத்தை மட்டும் முதலீடாக ஏற்றுக் கொள்வார்கள். இது 3 முதல் 5 ஆண்டுகள் என குறுகிய காலத் திட்டமாகவும் அடுத்து 5 முதல் 15 வருடங்கள் என நீண்டகால திட்டமாகவும் உள்ளது. தங்கத்தை முதலீடு செய்த பிறகு திரும்பப் பெறும்போது பணமாகவோ தங்கமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்" என்கிறார்.
 
மேலும், `` கோவில்கள் சார்பாக முதலீடு செய்த தங்கத்தை தங்கமாகவே திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு 1.75 சதவிகிதம், 2.25 சதவிகிதம் என திட்டத்தின் அடிப்படையில் வட்டி கொடுக்கின்றனர்" என்கிறார்.
 
``தங்கத்தை அப்படியே வைத்திருப்பதால் வங்கிகளுக்கு என்ன லாபம்?" என்றோம். `` ரிசர்வ் வங்கியின் வைப்பு நிதியில் குறிப்பிட்ட சதவிகிதத்தை பணமாக வைக்க வேண்டும். அதற்கு இணையாக தங்கத்தையும் கணக்கு காட்டுகின்றனர். இதற்கு 4.5 சதவிகிதம் வரையில் வட்டி கிடைக்கிறது. அந்த வட்டியில் சிறிதளவை தங்கமாக முதலீடு செய்தவர்களுக்கு கொடுக்கின்றனர். முதலீடு செய்யப்படும் தங்கத்தை பிஸ்கெட் வடிவில் மாற்றுகின்றனர். எனவே, `இது என்னுடைய தங்கம்' என யாரும் சண்டையிட முடியாது. அன்றைய தேதியில் என்ன மதிப்பு என்பதை முடிவு செய்து கொடுக்கின்றனர். தங்கத்தை எந்தவொரு பொதுத்துறை வங்கியிலும் முதலீடு செய்யலாம்" என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்கட்சி தலைவர் வீட்டு சிறை; முதல்வர்கள் வர தடை! – பரபரப்பான உத்தர பிரதேசம்!