Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் பிச்சை எடுத்த தமிழ் தொழிலாளி -

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (23:56 IST)
மலேசியாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்ற தொழிலாளர், தாம் அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும், பல்வேறு துயரங்களை எதிர்கொண்ட பின் தாயகம் திரும்பியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியின் மீள் காணொளிப் பதிவு ஒன்று மலேசியாவில் வைரலாகி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
 
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைதானா? என்பதைக் அறிய மலேசிய மனித வள அமைச்சர் சரவணன் நேரடியாகக் களமிறங்கி உள்ளார். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு துரித கதியில் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
 
நீண்ட காலமாகவே தமிழக தொழிலாளர்களுக்கு மலேசியாவில் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்படுவதாக அவ்வப்போது சில செய்திகள் வெளிவந்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டைத்தான் வேலாயுதமும் முன்வைத்துள்ளார்.
 
எனினும், இம்முறை மலேசிய அமைச்சரே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருவது எதிர்பாராத ஒன்று.
 
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இருந்து மலேசியா வரக்கூடிய தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக அமைச்சர் சரவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்காக வரும் தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
 
வேலாயுதத்துக்கு என்ன நடந்தது?
வேலாயுதம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த அந்தப் பேட்டி யு டியூபில் வெளியானது. அப்போது அது குறித்து யாரும் பெரிதாகப் பேசவில்லை. அண்மையில் அந்தக் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் மீண்டும் வெளியானதை அடுத்து ஏராளமானோர் அதைப் பார்த்தனர்.
 
தாம் மலேசியாவில் இந்திய உணவகம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், அதன் உரிமையாளர் செய்த கொடுமைகள் தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்து மலேசிய தலைநகரான கோலாலம்பூருக்கு வந்ததாகவும், கொரோனா கிருமித்தொற்று பரவத் தொடங்கிய வேளையில் தாம் மலேசியாவில் பிச்சை எடுத்ததாகவும் கூறியுள்ளார் வேலாயுதம். அதன்பிறகு சிலரது ஆதரவுடன் தாயகம் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வழிநடத்தும் 'நேர்கொண்ட பார்வை' என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தாம் வேலை பார்த்த உணவகத்தில் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் குறித்து விவரித்துள்ளார் வேலாயுதம்.
 
"வேலை விசா இல்லாததால் அடிமையாக நடத்தப்பட்டேன்"
"2018ஆம் ஆண்டு மலேசியா சென்றேன். அதற்காக தமிழகத்தில் இருந்து என்னை அனுப்பிய முகவருக்கு 52 ஆயிரம் ரூபாய் தரவேண்டி இருந்தது. சுற்றுலாவுக்கான விசாதான் பெற்றுத் தந்தனர். மலேசியா சென்றடைந்த ஆறு மாதங்களுக்குள் வேலை அனுமதி (WORK PERMIT) வாங்கித் தருவதாக அந்த முகவர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.
 
"நான் தச்சர் வேலைக்காகத்தான் மலேசியா செல்ல விரும்பினேன். ஆனால், அங்கு சென்றதும் உணவகம் ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்றனர். அந்த உணவகத்தில் உணவு பரிமாறுவது, தட்டுகளைக் கழுவுவது, கழிவறைகளை சுத்தம் செய்வது என்று வேலை செய்து வந்தேன். தினமும் இரவு 12 மணி வரை வேலை இருக்கும். அதன்பிறகுதான் தூங்க அனுமதிப்பார்கள். அதுவும்கூட காலை 5 மணி வரைதான். அதன்பிறகு மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும்.
 
"எனக்கு மாதந்தோறும் முறையாக சம்பளமும் வழங்கவில்லை. பலமுறை கேட்ட பிறகு குறைந்த தொகை ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். ஏதாவது கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும். எனது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டனர். ஓர் அடிமையைப் போல் நடத்துவர்.
 
"அதனால் நான் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. வேலைக்கான அனுமதி இல்லாமல் வந்தால், எங்கேனும் வெளியே செல்லும்போது போலிசார் கைது செய்ய வாய்ப்பும் உள்ளது. சில தொழிலாளர்கள் அடி உதையுடன் பாலியல் தொல்லைகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.
 
கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீளும் மலேசியா - சிங்கப்பூர் நிலவரம் என்ன?
மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள மானியம்
"சக தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றினர்"
 
"என்னுடன் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர், இவ்வாறு பாலியல் தொல்லைக்கு ஆட்பட்டதாக கூறினார். தம்மைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார்.
 
அது குறித்து நான் விசாரித்தபோது, கோபமடைந்த உணவக உரிமையாளர்களில் ஒருவரின் உத்தரவின் பேரில், மைக்கேலின் இடுப்புக்குக் கீழே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல் உணவகத்திலேயே ஓர் அறையில் தூக்கி வீசிவிட்டார்.
 
படுகாயமடைந்து துடியாய்த் துடித்த மைக்கேலுக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. நடப்பதை எல்லாம் பார்க்கத்தான் முடிந்தது. அவரது நிலை கண்டு அழுதேன். வேறென்ன செய்ய முடியும்?
 
"நிலைமை மோசமடைந்ததால் அந்த இளைஞரை ஏதோ ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் சொல்வதைப் போலவே மருத்துவரிடம் பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்துச் சென்று, பெயரளவுக்குச் சிகிச்சை அளித்து மீண்டும் அழைத்து வந்து விட்டனர். அந்த மைக்கேல் இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.
 
"ஒருமுறை என்னை ஊருக்கு அனுப்பி விடுமாறு கேட்டபோது 'முடியாது' என்றனர். இதனால் கைபேசி மூலம் ஊருக்குத் தொடர்பு கொண்டு பேசினேன். எனது நண்பர் மூலம் குடியுரிமை அதிகாரியாகப் பணியாற்றுபவரிடம் எனது நிலைமை குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டது. அவரும் மலேசியாவைத் தொடர்பு கொண்டு உணவக நிர்வாகத்திடம் என்னை உடனடியாக மலேசியாவில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்தார்.
 
"இதனால் எனக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால், உரிமையாளரோ என்னை சகட்டுமேனிக்கு ஏசியதுடன், பாஸ்போர்ட் இருந்தால்தானே ஊருக்குச் செல்வாய், உயிரோடு இருந்தால்தானே புகார் கொடுப்பாய் என்று கூறி என் கண்ணெதிரே அதை எரித்து விட்டார்.
 
"உன்னால் எங்கும் செல்ல முடியாது. பகலில் பாஸ்போர்ட்டை எரித்ததுபோல் இரவில் உன்னையும் எரித்துக் கொன்று உடலை சாக்கடையில் வீசிவிடுவேன்," என்று ஏளனமாகச் சிரித்து, எனது கைபேசியையும் உடைத்துவிட்டனர்.
 
"கோலாலம்பூரில் பிச்சை எடுத்து நாட்களைக் கடத்தினேன்"
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே டெங்கில் பகுதியில் உள்ள கட்டுமான இடத்தில் ஜூன் 19ஆம் தேதி உரிய ஆவணமின்றி இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 தொழிலாளர்களில் சிலர்.
 
"எனது கடவுச்சீட்டை எரித்த பிறகு மனமுடைந்து போன நிலையில், உணவகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்தேன். அணிந்திருந்த பேன்ட் சட்டையுடன் சல்லிக்காசு கூட இல்லாமல் கால் நடையாக 300 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே அந்த மாநிலத்தை விட்டு வெளியேறினேன். அருகில் உள்ள மாநிலத்தில் இன்னொரு இடைத்தரகரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் தமிழர் என்பதால் எனக்கு உதவுவதாகக் கூறினார். ஆனால் அவரும் என்னை ஏமாற்றி ஒரு மாட்டுப்பண்ணையில் 2 ஆயிரம் மலேசிய ரிங்கிட்டுக்கு விலை பேசி விற்று விட்டார். அங்கு மாடுகளைக் குளிப்பாட்டுவது, சாணம் அள்ளுவது என்று ஆறு மாதங்கள் படாதபாடு பட்டேன்.
 
"பிறகு அந்த தமிழ் முகவரே என்னை பண்ணையில் இருந்து மீட்டு வந்து தனது கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தினார். ஆறு மாதம் வேலை பார்த்ததற்கு அவர் சம்பளம் ஏதும் தரவில்லை. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவர் காலில் விழுந்து அழுது கெஞ்சிய பிறகுதான் ஆயிரம் மலேசிய ரிங்கிட் (சுமார் 17,500 ரூபாய்) கொடுத்தார். அந்தத் தொகையுடன் கிளம்பி கோலாலம்பூர் சென்றடந்தேன். அங்கு எனக்கு யாரையும் தெரியாது என்பதால் கைவசம் இருந்த தொகையைக் கொண்டு ஒரு கைபேசி வாங்கினேன். காரணம் அதை வைத்து மட்டும்தான் நான் மலேசியாவில் இருந்து உயிருடன் ஊர் திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. மீதமிருந்த தொகையும் கரைந்து போன பிறகு கோலாலம்பூர் தெருக்களில் பிச்சை எடுத்தேன்.
 
"அங்குள்ள ஒவ்வொரு கடையின் வாசலிலும் அமர்ந்து பிச்சை எடுத்தபோது மனம் வேதனைப்பட்டது. அங்கிருந்த பள்ளிவாசலில் தினமும் மதியம் உணவளிப்பார்கள். அதுதான் எனது ஒரு வேளைக்கான பசியைப் போக்கியது. மதியம் 12 மணிக்குள் அந்த உணவைப் பெற முடியாவிட்டால் அன்று முழுவதும் பட்டினி கிடக்க வேண்டும். இப்படித்தான் என் நாட்கள் கழிந்தன. அதுவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவிய போதுதான் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானேன்.
 
"கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்தும் எனக்கு உதவி கிடைக்கவில்லை. நல்ல உள்ளம் படைத்தோர் பிச்சை எடுத்த எனக்கு உதவி செய்தனர். 'அயலகம் உதவிக்குழு' என்ற அமைப்பு எனக்கு உதவி செய்தது.
 
"அந்த அமைப்பும் மலேசியாவைச் சேர்ந்த சில தமிழ் சகோதரர்களும் என் மீது பரிதாபப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அளித்த தொகையைக் கொண்டு நாட்களைக் கடத்தினேன். ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்து விடுமோ என்று தோன்றியது. இறந்து போக நேரிடுமோ என்றும் கூட மனம் கலங்கியது.
 
"இந்திய நாயே... உன்னால் என்ன செய்ய முடியும் என்று அங்குள்ள ஒருவன் என்னைப் பார்த்து கேட்டதுதான் மனதை வெகுவாகப் பாதித்தது. இந்தியாவில் பிறந்த தமிழனாக என்னால் என்ன செய்ய முடியும் என்று அத்தகையவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஓராண்டு காலம் உண்ண உணவின்றியும் கூட வைராக்கியத்துடன் இருந்தேன்.
 
"அதன் பின்னர் முறையான வேலை அனுமதி (work permit) இன்றி வேலை பார்ப்பவர்கள் தாயகம் திரும்புவதற்காக மலேசிய அரசு அறிவித்த திட்டத்தின் மூலம் நாடு திரும்ப செலுத்த வேண்டிய கட்டணத்தை பலரது உதவியுடன் செலுத்தி நாடு திரும்பினேன்.
 
"மலேசியாவையோ அங்குள்ள அரசாங்கத்தையோ நான் குறை சொல்லவில்லை. அங்குள்ள சில கறுப்பு ஆடுகளால் என்னைப் போன்ற தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
 
மலேசியாவில் இருந்தபோதே நான் எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் குறித்து புகார் தெரிவித்திருக்கலாம். ஆனால் என்னை உயிரோடு விட்டிருக்க மாட்டார்கள்," என்று கூறியுள்ளார் வேலாயுதம்.
 
"மலேசியாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வேலை பார்க்கின்றனர்"
இந்தப் பேட்டி குறித்த விவரங்களை அறிந்த பின்னர் மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
முதல் கட்டமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசிய அவர், வேலாயுதத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் யுடியூப் மூலமாக லட்சுமி ராமகிருஷ்ணனிடமும் வேலாயுதத்திடமும் நேரடியாக விசாரித்து தகவல்களைப் பெற்றார்.
 
அதன் பின்னர் மலேசிய அரசாங்கம் இந்த பிரச்னையை எவ்வாறு அணுகுகிறது, அதனால் ஏற்படக் கூடிய பலன்கள் என்னென்ன என்பது குறித்து அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
 
"மலேசியாவில் சுமார் 1.7 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் எனது மனிதவள அமைச்சின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் இந்தியர்கள், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்க்கிறார்கள். உணவகத் தொழில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
"தற்போது வேலாயுதம் கூறியது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடப்பவைதானே என்று நாம் விலகிச் சென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் நீடிக்கவே செய்யும். எந்தவொரு பிரச்னைக்கும் மூன்று பக்கங்கள் இருக்கும். உங்கள் பக்கம், என் பக்கம், உண்மையான பக்கம். எனவே, என்ன நடந்தது என்பதை கண்டறிவது மனிதவள அமைச்சரான எனது கடமை.
 
"மூன்றாவதாக, எல்லா நல்ல நோக்கங்களையும் கொச்சைப்படுத்தி குறை கூறுபவர்கள் இருப்பார்கள். சாதாரண தொழிலாளர் பிரச்னைக்காக அமைச்சர் இப்படி நேரத்தை வீணடிக்க வேண்டுமா? என்றும் சிலர் கேட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண பிரச்னையாக இருக்கலாம். ஆனால் மனித வள அமைச்சராக, உள்நாட்டுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, இத்தகைய பிரச்னைகள் களையப்பட வேண்டும் என விரும்புகிறேன். இல்லையெனில் இது வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவிடும்.
 
"வேலாயுதம் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து அவர் வேலை பார்த்த உணவகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் நான் இப்போது பேசும் வரை கிடைக்கவில்லை. எனினும் அவரால் குற்றம்சாட்டப்பட்டுள்ள உரிமையாளர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்ல. அவர் அதன் செயல் அதிகாரி என தெரிய வந்துள்ளது. அலுவல்பூர்வ விசாரணை தொடங்கியதை அடுத்து அந்நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
 
"மலேசிய உணவகத்துறை மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும்"
 
 
"தமிழகத்தில் இருந்து மலேசியா வந்த பலர் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு மலேசியாவிலேயே திருமணம் நடந்து இங்கேயே தங்கிவிட்டனர். மேலும் பலர் இங்கு சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊரில் சொத்துக்கள் வாங்கி குடும்பத்தை வளப்படுத்தி உள்ளனர்.
 
"மலேசியாவில் உணவகத்துறை மரியாதைக்குரிய தொழிலாக கருதப்படுகிறது. சமூகத்தில் மிகுந்த அந்தஸ்துடன் உள்ள பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரேயொரு குற்றச்சாட்டின் காரணமாக ஒட்டுமொத்த துறையும் பாதிக்கப்படக் கூடாது. அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வது என் கடமை.
 
"மலேசியாவில் ஏற்கெனவே தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் என்னிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும். என் வீட்டில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் சமையல்காரராக வேலை பார்க்கிறார். தமிழகத்தின் பொன்னமராவதியைச் சேர்ந்தவர்.
 
"மலேசிய உணவகத்துறை மீதான இந்த களங்கம் துடைக்கப்பட வேண்டும். வேலாயுதம் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது சாத்தியமல்ல. அதற்கான நிறைய நடைமுறைகள் உள்ளன. அதேசமயம் இனி மலேசியாவுக்கு வரக்கூடிய, எற்கெனவே இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கப்படும். மலேசியா அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு நாடு என்பதுதான் அந்த உத்தரவாதம். இதன் மூலம் அத்தொழிலாளர்களின் குடும்பத்தாரும் நிம்மதி அடைவார்கள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 
"பாதிக்கப்பட்ட வேலாயுதம் தெரிவிக்கும் தகவல்களும், உணவகத் தரப்பில் அளிக்கப்பட்ட தகவல்களும் வெவ்வேறாக உள்ளன. இது குறித்து விரிவாக விசாரிக்கப்படும். எனினும் நிச்சயம் நியாயம் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். தாக்கப்பட்டதாகவும் பாலியல் வன்முறைகள் குறித்தும் வேலாயுதம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை எனது மனிதவள அமைச்சு விசாரிக்க இயலாது.
 
"இது காவல்துறை சம்பந்தப்பட்ட விவகாரம். அதற்கு வேலாயுதம் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். எந்த நாட்டிலும் பாதிக்கப்பட்டவர் நேரில் புகார் அளிக்காமல் காவல்துறையால் நடவடிக்கை எடுக்க இயலாது. அவ்வாறு வரத்தயார் என்றால் வேலாயுதத்துக்கு மலேசிய அரசு உரிய பாதுகாப்பு வழங்கும்.
 
"அயலகத் துறையுடன் இணைந்து செயல்படுவோம்"
"தமிழகத்தில் தற்போதுள்ள அரசுடனும் தமிழக முதல்வருடனும் எங்களுக்கு நேரடியான, நெருங்கிய தொடர்புள்ளது. தமிழகத்தில் இருந்து மலேசிய வரக்கூடிய தமிழர்களுக்கு இங்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம்.
 
"சில ஏஜென்டுகளால் அழைத்து வரப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 15 மணி நேரம் வரை உழைக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம்தான் வேலை பார்க்க வேண்டும் என்று மலேசிய சட்டம் சொல்கிறது. ஆனால் சில ஏனென்டுகளால் இந்த விதிமுறை மீறப்படுகிறது.
 
"இதனால் மலேசிய அரசாங்கத்துக்கு அனைத்துலக அளவில், கெட்ட பெயர் ஏற்படுகிறது. தொழிலாளர்களை கட்டாயமாக வேலை வாங்கும் குற்றச்சாட்டு காரணமாக அண்மையில் அமெரிக்கா கூட மலேசிய நிறுவனம் தயாரிக்கும் கையுறைகளுக்கு தடை விதித்தது.
 
"வேலாயுதம் மலேசிய வரக் காரணமாக இருந்த இடைத்தரகரின் தகவலை அளித்தால் அவர் இனி மலேசிய நாட்டிற்குள் நுழையாதபடி குடிநுழைவுத் துறை அவரைக் கறுப்புப் பட்டியலில் இணைத்திடும். இது போன்ற இடைத்தரகர்கள் களையப்பட்டால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
 
"மேலும், மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் திரும்ப வேலாயுதம் மலேசிய அரசாங்கத்திடம் 3,600 ரிங்கிட் தொகையை கட்டணமாகச் செலுத்தியதாகவும், அதற்காக ஆவணத்தைத் தாம் வைத்திருப்பதாகவும் சொன்னார். மனிதநேய அடிப்படையில் இத்தொகையை அவர் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். உணவக நிர்வாகம் உதவாவிட்டால் மலேசிய அரசாங்கமே அவருக்கு அத்தொகையை திருப்பி அளிக்கும். ஏனெனில் வேலாயுதத்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொகை.
 
"விவரம் அறியாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியா சென்றால் கைநிறைய சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்து பிரச்சினையில் சிக்குகிறார்கள். இவ்வாறு நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 
"மலேசியாவுக்கும் தமிழகத்துக்குமான நல் உறவு நீடிக்க வேண்டும். வேலாயுதத்தின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காணாமல் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை வராமல் இருப்பதற்கு வழிவகை காணப்படும்," என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் மேலும் தெரிவித்தார்.
 
தமிழக அரசின் அங்கீகாரம் இன்றி மலேசியாவில் வேலை பார்க்க இயலாது
"இன்றையத் தமிழக அரசு அயல்நாட்டுத் தமிழர்களுக்கென ஒரு துறையை உருவாக்கியுள்ளது. இனி மலேசியாவுக்கு வேலை பார்க்க வருபவர்கள், தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையின் அங்கீகாரம் பெற்ற பின்னரே மலேசியா வர முடியும். மலேசியாவில் மனிதவள அமைச்சின் அடுத்தக்கட்ட அங்கீராத்திற்குப் பின்னரே அவர்கள் இங்கு வேலை செய்ய முடியும் எனும் நடைமுறையை ஏற்படுத்த விரும்புகிறோம்," என்கிறார் அமைச்சர் எம். சரவணன்.
 
இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு தாமே இதுகுறித்து நேரடியாக தமிழக அரசைத் தொடர்பு கொண்டு பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மலேசியாவுக்கு இனி வரக் கூடிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாயமான சிறப்பு அறிமுகப் பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த 48 மணி நேரப் பயிற்சியை மலேசிய அரசே வழி நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
"இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்துவிட்டோம். நமக்கு எந்த உரிமையும் இங்கு இல்லை எனப் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்துலக தொழிலாளர் மன்றம் அனைத்துத் தொழிலாளர்களும் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. அதைக் கொண்டுதான் ஒரு நாட்டின் தரம் முடிவு செய்யப்படுகிறது.
 
"இந்த நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளிகளின் உரிமை என்ன? இவர்கள் என்னென்ன செய்யலாம்? இவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும் தருவாயில் யாரைத் தொடர்பு கொள்ளலாம்? என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கப்படும்.
 
"தமிழகத்தில் இருந்து வேலைக்கு வருகிறவர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்து, இடைத்தரகர்கள் தொடர்பான பிரச்சனைகளைக் களைய மலேசிய மனிதவள அமைச்சு தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு பேசும். இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் தொழிலாளர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
"பாராட்ட வேண்டாம்... பலன்களை அங்கீகரியுங்கள்"
 
மலேசிய அமைச்சருடன் இணையம் வழி மேற்கொண்ட நேரடி கலந்துரையாடல் குறித்து 'பிபிசி தமிழிடம்' பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், வேலாயுதம் மீண்டும் மலேசியாவில் பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
 
மேலும், நாடு திரும்புவதற்கு மலேசியாவில் இருந்து புறப்படும் முன் வேலாயுதம் செலுத்திய 3,600 மலேசிய ரிங்கிட் தொகை மனித நேய அடிப்படையில் திருப்பி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாக அவர் கூறினார்.
 
"வேலாயுதம் போல் பாதிக்கப்பட்ட ஏராளமானோர்களை சந்தித்து இருக்கிறேன்.
 
மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு பெண், தனது கணவர் நோய்வாய்ப்பட்ட சூழ்நிலையில், குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு துபாய் சென்றிருந்தார். அங்கு காரின் டிக்கியில் அடைக்கப்பட்டு அவர் மஸ்கட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டார். அதன் பிறகு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அவரை நானும் எனது குழுவினரும் பெரும் முயற்சி எடுத்து காப்பாற்றினோம்.
 
"ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை துபாய்க்கு அனுப்பி வைத்த முகவர் ஆறு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவரை மீட்டுத்தருவதாக தெரிவித்தார்.
 
பின்னர் அவரை மடக்கிப் பிடித்து விமான கட்டணத்தை மட்டும் ஏற்பதாகக் கூறி அந்த பெண்மணியை மீட்டோம்.
 
"இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் அவர் தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்டதை அறிந்தபோது அவர்தான் உண்மையான தமிழச்சி என்று பெருமையுடன் என் நிகழ்ச்சியில் குறிப்பிட்டேன்.
 
"இதே போல் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களின் வலியை எடுத்துச் சொல்லும் விதமாகவும் சில நிகழ்ச்சிகள் படைத்துள்ளோம்.
 
எனக்கு அண்ணன் முறை வேண்டிய ஒருவர் ஜப்பானில் செய்யாத தவறுக்காக நீண்ட நாட்கள் சிறையில் வாடினார். அவரை மீட்க படாதபாடு பட்டோம். எனவே வெளிநாடுகளில் சிறையில் வாடும், சிக்கித்தவிப்பவர்களின் வலியையும் வேதனையும் என்னால் உணர முடிகிறது.
 
"ஆனால், சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதும் எனது நிகழ்ச்சியைக் கிண்டல் செய்வதும் வருத்தம் அளிக்கிறது. வேலாயுதம் போல் மேலுல் பல தமிழர்கள் காப்பாற்றப்படலாம், அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நன்மைகள் விளையும் என்ற மனநிறைவு மட்டுமே எனக்கு போதுமானது.
 
"இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் அவசியம் எனக்கு இல்லை. அதேசமயம் ஊதியம் பெற்றுக் கொண்டுதான் இதில் பங்கேற்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.
 
எனினும், இந்த நிகழ்ச்சியால் விளையும் பலன்களுக்காக என்னைப் பாராட்டவில்லை என்றாலும், கிடைத்த பலனை, நன்மையை அங்கீகரியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.
 
"சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தும் கிண்டல் செய்தும் மீம்ஸ்களை வெளியிடுகிறார்கள். நான் பஞ்சாயத்து செய்வதாகச் சொல்கிறார்கள். உண்மையில் நான் பஞ்சாயத்து ஏதும் செய்யவில்லை. ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் சோடை போயிருக்கலாம். ஆனால், இதர அனைத்துமே உரிய பலனைத் தந்துள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது. எனவே, ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
 
"மலேசியாவில் அத்தனை ஊடகங்களும் வேலாயுதம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மலேசியப் பெண்மணி ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து அங்குள்ள உணவகத்தில் துன்புறுத்தலுக்கு ஆளான மேலும் இரு தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். இதைக் கேட்கும்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. புகார் அளித்த பெண்மணி எனது நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார் என்றும் அதன் பிறகே காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
"தமிழக ஊடகம் மட்டுமல்ல, அனைத்து ஊடகங்களும் இத்தகைய செய்திகளை பாரபட்சமின்றி வெளியிட வேண்டும்," என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்