Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலிபன்களின் உளவுத் திறன்கள்: சந்தேக நபர்களை கண்டறிவது எப்படி?

தாலிபன்களின் உளவுத் திறன்கள்: சந்தேக நபர்களை கண்டறிவது எப்படி?
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (13:23 IST)
ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான கந்தஹாரின் தலைநகரான கந்தஹார் நகரத்திலிருந்து காபூலுக்கு செல்லும் சாலையைச் சுற்றியுள்ள பெரும்பகுதி இப்போது தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கந்தஹாரில் வசிப்பவரான தாவூத் (பெயர் மாற்றப்பட்டது) சமீபத்தில் கந்தஹாரிலிருந்து காபூலுக்கு சாலை மூலம் பயணம் செய்து பிபிசி உருதுவுக்கு தனது பயணத்தின் கதையைச் சொன்னார்.

கந்தஹார் நகரை விட்டு வெளியே வந்தவுடனேயே தாலிபன்களின் வெள்ளைக் கொடிகள் பறப்பதை பார்க்க முடிகிறது. சாலையின் இருபுறமும் தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிற்பது தெரிகிறது.

பல இடங்களில், ஆப்கன் ராணுவத்துடனான சண்டைக்குப் பிறகு கைபற்றப்பட்ட வாகனங்களும் காணப்படுகின்றன. அவற்றில் மூன்று வண்ண ஆப்கன் கொடிக்கு பதிலாக வெள்ளை கொடி அசைந்தாடுகிறது.

கந்தஹார் நகரத்திலிருந்து சாபுல் மாகாணத்தின் தலைநகரான கலாத் நகரம் வரை, சாலையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதுபோலத் தோன்றின. கந்தஹாரை விட்டு வெளியே வந்தபிறகு முதல் முறையாக கலாத் நகரத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் காணப்பட்டது.

கலாத் முதல் காபூல் வரையிலான முழு பாதையிலும், சில நகரங்களில் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரம் இருந்தது, அதே நேரத்தில் நகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தொலைதூர கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தாலிபன்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

முன்பு ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் கோட்டைகள் இருந்த அனைத்து நிலைகளிலும் தாலிபன் போராளிகள் தங்கள் கொடிகளை நாட்டியிருந்தனர்.

தாலிபன்கள் எல்லா வாகனங்களையும் வழியில் நிறுத்துவதில்லை, எல்லா வாகனங்களையும் சோதனையிடுவதில்லை. ஆனால் தாலிபனின் உளவு நெட்வொர்க் முன்கூட்டியே அளித்த தகவல்களின் அடிப்படையில் வாகனம் நிறுத்தப்பட்டு அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தாலிபனின் உளவு நெட்வொர்க்

தாலிபன் உளவாளிகள் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும், கந்தஹார் மற்றும் காபூலின் முக்கியப்பகுதிகள் உட்பட வழியில் உள்ள எல்லா இடங்களிலும் காணப்படுகின்றனர். இந்த வழியில் பயணம் செய்யும் அனைவரையும் அந்தக் குழுவினர் கண்காணிக்கிறார்கள் என்றும் தாவூதும், அந்த வழியில் பயணித்த வேறு இரண்டு நபர்களும் தெரிவித்தனர்.

அவர்கள் சந்தேகிக்கும் ஒரு நபரை எங்கு பார்த்தாலும் அவரைப் பின்தொடர்ந்து, அந்த நபர் பயணம் செய்யும் வாகனத்தின் வகை, வாகன எண் மற்றும் சந்தேக நபரின் தோற்றத்தை தொலைபேசி மூலம் வழியில் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

தாலிபன்கள் விசாரணை செய்ய யாரை வண்டியிலிருந்து இறக்குகிறார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள், ஆப்கானிஸ்தான் ராணுவம் அல்லது காவல் துறையுடன் தொடர்புள்ளவர்கள் என்று தாவூத் கூறுகிறார். தாலிபனின் எதிரி என்று சந்தேகிக்கப்படுபவர்களிடமும் விசாரணை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட்போன் இல்லாமல் பயணம்

கந்தஹாரில் இருந்து காபூல் அல்லது காபூலில் இருந்து கந்தஹாருக்கு இந்தப் பாதையில் செல்லும் பெரும்பாலானவர்கள் தங்களுடன் ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்வதில்லை. தாவூத்தும் தனது ஸ்மார்ட்போனை பெட்டியில் மறைத்து வைத்து விட்டு எளிய தொலைபேசி செட்டோடு பயணத்தைத் தொடங்கினார்.

தாலிபன்களிடம் பிடிபட்டால், அவர்கள் தொலைபேசியின் எல்லா தரவையும் சரிபார்த்து, தொலைபேசியில் உள்ள படங்களை பற்றியும் விசாரிப்பார்கள் என்பதால், இந்த வழியில் செல்லும் நபர்கள் தங்களுடன் ஸ்மார்ட் போன்களை எடுத்துச் செல்வதில்லை என்று தாவூத் கூறுகிறார்.

தாவூத், தனது நண்பருக்கு நடந்தது பற்றி விளக்கினார்.
webdunia

தாலிபன்கள் நண்பரின் மொபைல் போனில் ஒரு பெண்ணின் படத்தை பார்த்துவிட்டு அவரிடம் , இந்த பெண் யார் என்று கேட்டனர். தனது மனைவி என்று அந்த நபர் பதிலளித்தபோது, தாலிபன்கள் அவரை அறைந்தது மட்டுமல்லாமல், "பெண்களின் புகைப்படங்களை எடுப்பது ஆபாசத்தையும் நிர்வாணத்தையும் பரப்புகிறாயா" என்று கூறி அவரது செல்பேசியை உடைத்து விட்டனர்.

ஒரு பயணியின் தொலைபேசியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அல்லது ஆப்கானிஸ்தான் போலீஸ் அதிகாரியின் படம் காணப்பட்டால், அவரை வண்டியிலிருந்து இறக்கி, அந்த படம் பற்றிய முழு தகவலும் அவரிடம் இருந்து பெறப்படுகிறது என்றும் தாவூத் கூறினார்.

தாலிபன்கள் அத்தகைய நபர்களை ஆப்கானிஸ்தான் ராணுவம் அல்லது போலீஸ்காரர்கள் என்று சந்தேகிக்கிறார்கள், அத்தகைய சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை கடத்திச் சென்று விடுகிறார்கள்.

தாலிபன்களின் விசாரணை செய்யும் விதம் மற்றும் தனித்துவமான முறைகள் பற்றி தாவூத் பிபிசியிடம் தெரிவித்தார்.

தனக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றி குறிப்பிட்ட தாவூத், "சில ஆப்கானிஸ்தான் அதிகாரிகளின் புகைப்படங்கள் அவரது செல்பேசியில் காணப்பட்டதாகவும், அதன் பிறகு தாலிபன்கள் அவரை கீழே இறக்கி அருகில் உள்ள சோதனைச்சாவடிக்கு அழைத்துச் சென்றதாகவும்" கூறுகிறார்.

தாலிபன்கள் அந்த நபரின் செல்பேசியில் கடைசியாக அழைத்திருந்த ஒரு எண்ணை அழைத்தனர். அழைப்புக்கு பதில் கிடைத்ததும், தாலிபன்கள் தங்களை ஆப்கானிஸ்தான் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, செல்பேசி உரிமையாளரின் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், உதவி செய்வதற்காக அவரைப் பற்றிய விவரங்களை தருமாறும் கேட்டனர்.

தாலிபன்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு காவல்துறை அல்லது ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர்களுக்குக் கிடைத்த பதில் தெளிவுபடுத்தியது. இருப்பினும், அவரை விடுவிப்பதற்கு முன்பு தாலிபன்கள் அவரது செல்பேசியை உடைத்து விட்டனர் என்று தாவூத் கூறினார்.

"சிம் கார்டை மென்று சாப்பிட வற்புறுத்துவர்"

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டைப் வைத்திருந்தால் அதை 'மென்று சாப்பிட வேண்டும்'

காபூல் மற்றும் கந்தஹார் இடையே இந்த வழியில் பயணிக்கும் போது பலர் ஸ்மார்ட்போனுடன் கூடவே, ஆப்கானிஸ்தான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டையும் எடுத்துச் செல்வதில்லை என்று தாவூத் பிபிசியிடம் கூறினார்.

ஏனென்றால் இந்த சிறப்பு சிம் கார்டை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த சிம் கார்டை மென்று சாப்பிடும்படி தாலிபன் அவரை கட்டாயப்படுத்துவார்.

ஆப்கானிஸ்தான் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான 'சலாம்' நீண்ட காலமாக தாலிபன்களின் எதிரிகள் பட்டியலில் உள்ளது.

கடந்த காலங்களில் தாலிபன்கள், நாட்டின் பல மாகாணங்களில் இயங்கும் செல்பேசி நிறுவனங்களை இரவில் சிக்னலை அணைக்குமாறு மிரட்டினார்கள். அதன் பிறகு அவற்றில் பல இதை ஏற்றுக்கொண்டன.

ஆனால் சலாம் டெலிகாம் ஒரு அரசு நிறுவனமாக இருந்ததால், தாலிபன்களின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை இன்றுவரை இந்த செலேப்சி நிறுவனத்திற்கு எதிராக தாலிபன் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

தாலிபன்கள் இரவில் பல பகுதிகளில் செல்பேசி சிக்னல்களை அணைக்க அழுத்தம் கொடுத்தனர். ஏனெனில் தங்கள் போராளிகள் இரவு நேரத்தில் செல்பேசிகளால் உளவு பார்க்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு ஆப்கான் படைகள் தங்கள் நிலைகள் மீது வான்வழி அல்லது தரைத் தாக்குதல்களைத் நடத்தும் என்றும் அவர்கள் கருதினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மைக்கு புறம்பானதுன்னு ஒத்துக்கோங்க! – பா.ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை நோட்டீஸ்!