Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் அமைச்சர் தங்கமணி - வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் தங்கமணி -  வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
, புதன், 15 டிசம்பர் 2021 (23:38 IST)
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் இதுவரை கிடைத்தது என்ன என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இந்த சோதனையில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய் பணம், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்ககளின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில், இன்று காலை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறை சோதனையைத் தொடங்கியது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் இந்த சோதனை தொடங்கப்பட்டது. இந்த 69 இடங்களில் 66 இடங்கள் தமிழ்நாட்டிலும், இரு இடங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும், ஓரிடம் ஆந்திர மாநிலம் சித்தூரிலும் உள்ளன.
 
சில இடங்களில் சோதனை முடிந்து ஆவணங்கள், நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வேறு சில தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 
ஏற்கனவே அ.தி.மு.கவைச் சேர்ந்த, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகிய நான்கு முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை சோதனைகளை நடத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் ஐந்தாவதாக தங்கமணி இணைந்துள்ளார்.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
 
Twitter பதிவின் முடிவு, 1
தங்கமணி,மனைவி, மகன் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
 
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சராக இருந்தவர் பி. தங்கமணி.
 
தங்கமணி 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த போது தமது பெயரிலும் தமது குடும்பத்தின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கூறுகிறது.
 
தங்கமணி சொத்துகளைக் குவிக்க, அவரது மனைவி சாந்தி, அவரது மகன் தரணிதரன் ஆகியோர் உதவியதாக இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தியதன் மூலம் இதனைச் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா?
ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா?
முருகன் எர்த் மூவர்ஸ் எந்த தொழிலையும் செய்யவில்லை என்றும் தங்கமணி சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை சட்டபூர்வமான வருமானமாகக் காட்டவே இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தங்கமணி அமைச்சராக பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1,01,86,017ஆக இருந்த நிலையில், அவர் பதவி முடிவுக்கு வந்தபோது சொத்து மதிப்பு ரூ. 8,47,66,318ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கமணி, சாந்தி, தரணிதரன் ஆகிய மூவரும் சட்டபூர்வமாக சம்பாதித்த தொகை ரூ. 5,24,86,617ஆக உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இவர்களது சேமிப்புகள், செலவுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, தங்கமணி ரூ. 4,85,72,019ஐ தனது வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தங்கமணியும் அவரது மகனும் தங்களது வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சம்பாதித்த சொத்துகளை தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் முதலீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சம்பாதித்த சொத்துகளை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாகவும் எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தங்கமணி, அவரது மனைவி சாந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் பி தங்கமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும், அதற்கு தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு ஆளாவோரை என்றைக்கும் அதிமுக கைவிடாது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடுக்கும் வழக்குகளை சட்டப் படி எதிர்கொண்டு வெற்றி கொள்வோம் என்றும் அக்கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு-துரைமுருகன்