மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான ஊழல் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மலேசிய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நஜிப் ரஸாக் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையை நிறுத்தி வைக்க நஜிப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்து விட்டது.
69 வயதாகும் நஜிப் ரஸாக், 1எம்டிபி என்ற மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிடமிருந்து சுமார் $10 மில்லியனை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் என்ற வாதத்தை நஜிப் முன்வைத்திருந்தார். இருந்தபோதும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்திய கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான அமர்வு, நஜிப் ரஸாக் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் ($46.84 மில்லியன்) அபராதமும் விதித்துள்ளது.
"இந்த வழக்கில் நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான அவரது தரப்பு வாதங்கள், இயல்பாகவே சீரற்றதாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தன. சந்தேகத்தின் பலனை அது நஜிப் தரப்புக்குத் தரவில்லை. மேலும், இந்த தண்டனை அதிகமானதாகவும் இல்லை என கருதுகிறோம்," என்றும் நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
மலேசியா: முன்னாள் பிரதமர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த பொருட்கள்
இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது நஜிப் நீதிமன்றத்தின் முன்வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் மூன்று குழந்தைகள் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்று நஜிப் ரஸாக் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் அவரது கடைசி முயற்சியாக இந்த உத்தி பார்க்கப்பட்டது. ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்த நிலையில், தீர்ப்பு வெளிவரும் சில நிமிடங்களுக்கு முன்பாக பேசிய நஜிப், "எனது சார்பில் மேல்முறையீட்டு வழக்கில் வாதிடுவதற்கு புதிய வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க ஏதுவாக மேலும் இரண்டு மாதங்களுக்கு வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தேன். ஆனால், அநீதியால் பாதிக்கப்பட்டவனாகி இருக்கிறேன்," என்று கூறினார்.
"மிகவும் நியாயமற்ற முறையில் எனக்கு எதிராக வலிமை வாய்ந்த நீதித்துறை நடந்து கொண்டதாக கருதுகிறேன். அத்தகைய மிக மோசமான உணர்வு எனக்கு ஏற்படுவதாக உணர்கிறேன்," என்றும் நஜிப் தெரிவித்தார்.
நஜீப் ரஸாக் மீது வழக்கு: அறிய வேண்டிய தகவல்கள்
நஜீப் ரஸாக் மீதான குற்றச்சாட்டு என்ன? 2009ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2018ஆம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக நஜிப் பதவி வகித்தார். அதே ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் 1எம்டிபி (1MDB)எனப்படும் மலேசிய வளர்ச்சி நிதியம். இதன் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி எமரிட்டஸ் ஆலோசகராகவும் அவர் பொறுப்பு வகித்தார். மேலும் மலேசிய நிதி அமைச்சராகவும் அவர் பதவியில் இருந்தார். எஸ்ஆர்சி நிறுவனம் தொடக்கத்தில் 1எம்டிபியின் துணை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டது. எனினும் பின்னர் சில காரணங்களால் அது மலேசிய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
நஜீப் ரஸாக் மீதான எதிர்கட்சிகள் புகார் என்ன? இந்நிலையில் எஸ்ஆர்சி நிறுவனத்தில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மாற்றப்பட்டது. இதுவே அவர் பிரச்சினையில் சிக்க காரணமாக அமைந்தது. இது தொ டர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது அன்றைய அரசுத் தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் 1எம்டிபியின் செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு ஆட்பட்டன. பல பில்லியன் ரிங்கிட் அளவுக்கு மலேசிய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் சாடின.
நஜிப் மீதான வழக்குக்குப் பிறகு என்ன தாக்கம் ஏற்பட்டது? 1எம்டிபி மூலம் நஜிப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து எதிர்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு மகாதீரும் அன்வார் இப்ராஹிமும் தலைமையேற்று மேற்கொண்ட தீவிர பிரசாரத்தை அடுத்து, நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி 2018 பொதுத்தேர்தலில் தோல்வி கண்டது. கடந்த 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய முன்னணி முதன்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்தது.
வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகள் என்ன?
2009இல் நஜிப் ரஸாக் பிரதமராக இருந்த முதல் ஆண்டில் அவரால் இணைந்து நிறுவப்பட்ட 1MDB நிறுவனத்தில் இருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. நஜிப்புடன் தொடர்புடைய கணக்குகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான 1எம்டிபி பணத்தைக் கண்டுபிடித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் உலகின் பல பகுதிகளில் உள்ள அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் பெயர்களை புலனாய்வாளர்கள் சேர்த்திருந்தனர். இதைத்தொடர்ந்து கிளெப்டோகிராசி புலனாய்வு என்ற பெயரில் ஒரு வழக்கை அமெரிக்க நீதித்துறை முன்னெடுத்தது.
நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிட்டாரா நஜிப்?
நஜிப் ரஸாக் மட்டுமல்லாமல், அவர் முன்பு தேசியத் தலைவராக இருந்த அம்னோ கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக அக்கட்சியின் இன்றைய தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான ஸாஹித் ஹமிடியும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, நஜிப், ஸாஹித் ஹமிடி உள்ளிட்ட அம்னோ கட்சியின் முக்ககியத் தலைவர்கள் நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2020ல் மகாதீர் தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு, அம்னோ கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைந்த மொஹைதின் யாசின் அரசாங்கத்துக்கு, இது தொடர்பாக நஜிப் உள்ளிட்டோர் மறைமுக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மொஹைதின் யாசினே இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை நஜிப் உள்ளிட்ட அம்னோ தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.
இதுபோன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் மலேசிய கூட்டரசு நீதிமன்றம், நஜிப்புக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அம்னோ கட்சி நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நஜிப் ரஸாக் வழக்கின் தீர்ப்பு தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை நாட்டின் பிரதமராக நஜிப் பதவியில் இருந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மீது நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
மலேசிய வரலாற்றில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பிரதமர் இவர்தான். மேலும், இத்தீர்ப்பின் மூலம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இன்று ஏராளமான ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். எனினும் தீர்ப்பு பாதகமாக அமைந்ததை அடுத்து அவர்கள் சோகத்துடன் கிளம்பிச் சென்றனர்.து