Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலான பாட்டி - பேத்தி புகைப்படம்: உண்மை பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (14:02 IST)
ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத செய்தியை ஒற்றை புகைப்படம் விளக்கிவிடும். அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான 'உணர்ச்சிவசப்பட்ட பாட்டி மற்றும் பேத்தி அழும் புகைப்படம்' அந்த வகையைச் சேர்ந்தது.



இந்த புகைப்படமும், அதில் பதிவிடப்பட்டுள்ள வாசகங்களும் பகிரப்பட்டு வைரலானதுடன் உறவுகளிடையேயான பிடிப்பை பற்றிய பல்வேறுவிதமான விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் இருந்து சக மாணவர்களுடன் முதியோர் இல்லத்திற்கு சென்ற பேத்தி, அங்கே தன்னுடைய பாட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

"உறவினர்களின் வீட்டில் பாட்டி இருப்பதாக பேத்தியிடம் பெற்றோர்கள் கூறியிருந்தனர். நாம் எதுபோன்ற சமுதாயத்தை உருவாக்குகிறோம்?'' என்ற கேள்வியுடன் அந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.

பதிவிடப்பட்ட சற்று நேரத்திலேயே வைரலான புகைப்படத்தை மக்கள் மட்டுமல்ல, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் தங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்தனர்.



ஆனால் இந்த புகைப்படமும், அதனுடன் பதிவிடப்பட்டிருந்த தகவலும் உண்மையா? அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையறியும் முயற்சிகளை பிபிசி குழு மேற்கொண்டது.

உண்மை என்ன?

உண்மையில், இந்த புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதல்ல, 11 ஆண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத் நகரின் கோடாசர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

தற்போது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சிறந்த புகைப்படங்கள் பகிரப்பட்டபோது, வார்த்தைகளே தேவைப்படாத உணர்ச்சிகரமான அந்த புகைப்படம் பதிவிடப்பட்டது.

தற்போது புகைப்படத்தின் உண்மையான பின்னணியை கண்டறிய களத்தில் இறங்கிய பிபிசி குழுவினர், புகைப்படம் எடுக்கப்பட்ட அதே முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு தங்கியிருக்கும் பாட்டி தமயந்தியையும், பேத்தி பக்தியையும் கண்டு உரையாடினார்கள்.

பிபிசி நிருபர் தேஜஸ் பக்தியிடம் பேட்டி கண்டார். ''என் பாட்டி அவரது சுயவிருப்பத்திலேயே இங்கு தங்கியிருக்கிறார். யாரும் அவரை வலுக்கட்டாயமாக இங்கே அனுப்பவில்லை. பாட்டி எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பள்ளிச் சுற்றுலாவிற்காக முதியோர் இல்லத்திற்கு வந்தபோது எதிர்பாராமல் அவரை இங்கே பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்'' என்று பக்தி கூறுகிறார்.


''பாட்டிக்கும் எனக்குமான பிணைப்பு மிகவும் ஆழமானது. என் பெற்றோரை விட பாட்டியிடம் எனக்கு நெருக்கம் அதிகம். எதிர்பாராமல் பாட்டியை இங்கே பார்த்ததும் அடக்கமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது'' என்று 11 ஆண்டுகளுக்கு முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பக்தி.

சரி, பாட்டியை ஏன் இன்னும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்று சமூக ஊடகங்களில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கிறார் பக்தி. ''பாட்டியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஏனெனில் இங்கே இருப்பது பாட்டிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கே தன்னுடைய வயது ஒத்தவர்களுடன் இணைந்து தனக்கென ஒரு இசைவான வாழ்க்கையை அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.''

''பாட்டி இங்கே நிம்மதியாக வாழ்கிறார். தினசரி பாட்டியிடம் தொலைபேசியில் பேசுகிறோம். என் பெற்றோர்களை பார்ப்பதற்காக பாட்டி வீட்டுக்கு வருவார். அம்மாவும் அப்பாவும் பாட்டியை முதியோர் இல்லத்திற்கு வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஆனால் உலகம் என்னுடைய தந்தையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது, ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையில் என் பெற்றோர் தவறு செய்திருந்தால் என் பெற்றோர்களுடனான உறவை முறித்திருப்பேன்'' என்று உணர்ச்சி வசப்படுகிறார் பக்தி.



கல்பித் பாட்டி தமயந்தி மற்றும் பேத்தி பக்தியுடன் புகைப்பட கலைஞர் கல்பித்

''திடீரென சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை''

2007 செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியை நினைவுகூர்கிறார் பக்தி. ''பள்ளியில் இருந்து சுற்றுலா வந்திருந்தோம். அன்று 'கிராண்ட் பேரண்ட்ஸ் டே'. பாட்டியை எதிர்பாராத விதமாக பார்ப்பேன் என்றோ, அதுவும் பள்ளிச் சுற்றுலா வந்த இடத்தில் சந்திப்பேன் என்றோ கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. பாட்டி வீட்டை விட்டு போகிறார் என்று தெரியும், ஆனால் எங்கே போகிறார் என்று எனக்கு தெரியாது. அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கு தெரியக்கூடாது என்று பாட்டி விரும்பினார். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் அவரை சந்தித்தபோது நாங்கள் இருவருமே உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கிவிட்டோம்.''

11 ஆண்டுகளுக்கு பிறகு அந்த புகைப்படம் வைரலாவதைப் பற்றி பக்தியிடம் பேசினோம். ''அனைவரின் உணர்வுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், என் பெற்றோர்கள் மோசமானவர்கள் என்று எழுதியிருப்பதை பார்க்கும்போது துயரமாக இருக்கிறது. உண்மையிலுமே என் பாட்டியை யாரும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பவில்லை, அவரே விரும்பித்தான் இங்கு வந்தார்.''


புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த இருவரில் ஒருவரின் கருத்தை தெரிந்துக்கொண்டோம். பாட்டி தமயந்தி பென் என்ன சொல்கிறார்?

''என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தினால்தான் நான் முதியோர் இல்லத்திற்கு வந்தேன். எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான மோதலோ சண்டையோ இல்லை. யாரும் வீட்டை விட்டு என்னை வெளியேற்றவில்லை. வயதான காலத்தை அமைதியாக கழிக்க விரும்பினேன், அதனால்தான் முதியோர் இல்லத்திற்கு வந்தேன்'' என்கிறார் அந்த மூதாட்டி.

''நான் மகன் வீட்டிற்கு செல்கிறேன். மகன், மருமகள் பேரப்பிள்ளைகள் என்னை பார்க்க இங்கே வருகிறார்கள். இங்கு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு காலத்தை அமைதியாக கழிக்கிறேன். இதில் வேறு எந்த விவகாரமும் இல்லை. மகன் தினசரி தொலைபேசியில் கூப்பிட்டு பேசுவான். மருமகளும் நல்லவள், என்னை பார்க்க வரும்போது உணவு சமைத்து எடுத்துவருவாள்'' என்று இன்றைய நிலையை எடுத்துச் சொல்கிறார் தமயந்தி பென்.

சரி, இந்த விவாதத்திற்குரிய புகைப்படத்தை படம் பிடித்த புகைப்பட கலைஞர் கல்பித் என்ன சொல்கிறார்?


11 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம் வைரலாவதற்கு காரணம் சமூக ஊடகங்களே என்று சொல்கிறார் அவர். சரி, புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த நாளில் நடந்தது என்ன? இந்த புகைப்படத்தை எடுத்த, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த புகைப்பட கலைஞர் கல்பித் பசேச்-இடம் கேட்டறிந்தோம்.

''என்னுடைய பிறந்தநாளுக்கு முந்தைய நாளான 2007 செப்டம்பர் 12ஆம் தேதி காலை வீட்டில் இருந்து கிளம்பும்போதே, இரவு சீக்கிரமாக வந்துவிடுங்கள் என்று மனைவி அன்பு கட்டளையிட்டார்.

சுயவிருப்பத்திலேயே இங்கு இருக்கிறேன்'

குழந்தைகள் எழுந்து முதியோர்களிடம் சென்றபோது, ஒரு சிறுமி, திடீரென அழத் தொடங்கிவிட்டாள்.

அந்த சிறுமியை பார்த்தவுடன் ஒரு மூதாட்டியின் கண்களில் இருந்து தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தது. அந்த சிறுமி ஓடிச் சென்று அழுதுக்கொண்டிருந்த மூதாட்டியை கட்டிக்கொண்டார். இதைப் பார்த்த அனைவருக்கும் வியப்பு மேலிட்டது.

அந்த தருணத்தை நான் என் கேமராவுக்குள் அடக்கிவிட்டேன். அவர்களை ஆசுவாசப்படுத்திய பிறகு விசாரித்தபோது, அந்த சிறுமி தனது பேத்தி என்று மூதாட்டி தமயந்தி பென் சொன்னார்.

பாட்டி இல்லாத வாழ்க்கை தனக்கு வெறுமையாக இருப்பதாக சொன்னார் அந்த மாணவி. பாட்டி உறவினர் வீட்டில் இருப்பதாக தந்தை சொல்லியிருந்ததால், பாட்டியை இங்கே பார்த்ததும் பேத்தியால் அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை.

உறவுகள் சங்கமித்தபோது அவர்களின் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர், அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் தொற்றிக் கொண்டது. அங்கு நிலவிய கனமான சூழ்நிலையை சுமூகமாக்கும் முயற்சியில் குழந்தைகளை பக்தி பாடல்கள் பாடச் சொன்னார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அடுத்த நாள் காலையில் வெளியான 'திவ்ய பாஸ்கர்' என்ற பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியானது.

குஜராத் மாநிலத்தில் இந்த புகைப்படம் பலவிதமான சர்ச்சைகளை அன்றே எழுப்பியது. மக்களின் மனதில் பலவிதமான கேள்விகளையும், உறவுகளின் சுமூகத்தன்மையைப் பற்றிய விவாதங்களையும் எழுப்பியது.

என்னுடைய முப்பதாண்டு கால தொழில்முறை வாழ்க்கையில் என் பிறந்தநாளன்று வெளியான அந்த புகைப்படம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததை மறக்கவே முடியாது.

அதற்கு அடுத்த நாள், பிற ஊடக நண்பர்களுடன் முதியோர் இல்லத்திற்கு பேட்டி எடுக்க சென்றபோது, தனது சொந்த விருப்பத்திலேயே அங்கு வந்திருப்பதாக தமயந்தி பென் என்ற அந்த மூதாட்டி சொல்லிவிட்டார், என்று தனது புகைப்படத்தின் பின்னணியையும், அது தற்போது வைரலாவதற்கு சமூக ஊடகங்களே காரணம் என்று கல்பித் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments