Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது

Advertiesment
Srilanka
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:49 IST)
''எங்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னதான் இருந்தாலும் தோட்டக்காட்டான் என்ற பெயரைத்தான் வாங்கியுள்ளோம். பிள்ளைகள் போறதுக்கு பாடசாலை இல்லை. எங்களுக்கும் படிக்க வசதி இல்லை. சரி பிள்ளைகளை படிக்க வைக்கலாம்னு பார்த்தால், அதுக்கும் வசதி இல்லை" - கவலைப்படும் இலங்கை மலையக தமிழர்களின் குமுறல்கள் இந்த வரிகள்.
.
 
"முன்னேற்றம் ஒன்று இருந்தால் தானே பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் முடியும். யார் போனாலும் தோட்டக்காட்டன்னுதான் அழைக்கிறாங்க. அந்த பெயரை வாங்க எங்களுக்கு விருப்பம் இல்லை," என்கிறார் மலையகத்தின் பெருந்தோட்ட தொழிலாளியான சிவகுமார்.

 
இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, சுமார் 200 வருடங்களாகவுள்ளன. இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகிறது.
 
 
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர், 1867ம் ஆண்டு கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் எல்லை பகுதியான லூல்கந்துர தோட்டத்தில் முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்தார்.
 
 
தேயிலை செய்கைக்கு முன்னதாக கோப்பி உள்ளிட்ட செய்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன.
 
 
கோப்பி உள்ளிட்ட செய்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே, தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

 
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு மலையக மக்கள் 1822ம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 
இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வரிசையாக அமைக்கப்பட்ட சிறிய அறைகளை கொண்ட லயின் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

 
இவ்வாறு 1822ம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்ட லயின் அறைகளில் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற நிலைமைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
 
 
சுமார் 100 வருடங்கள், 150 வருடங்கள், 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட லயின் அறைகள் இன்றும் காணப்படுகின்றன.

 
மலையக மக்கள்
 
உடைந்த நிலையில், தகரங்கள் அற்ற நிலையில், சுவர்கள் இடிந்த நிலையில், இந்த லயின் அறைகள் காணப்படுகின்றன.

 
அன்று முதல் இன்று வரை தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் இந்த மலையக சமூகம், எந்தவித முன்னேற்றத்தையும் அடையாது அதே நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
 
 
இலங்கையின் மலையக பகுதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அந்த மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே உண்மை.

 
இந்த நிலையில், மலையக மக்களின் இன்றைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக பிபிசி தமிழுக்காக கேகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாம் சென்றோம்.
 
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில், மலைத்தொடர் உச்சியில் அமைந்துள்ள தோட்டமே தோத்தல்ஓயா.
 
 
குறிப்பிட்ட தூரத்திற்கு மாத்திரமே போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றாலும், அதை அடுத்துள்ள இந்த தோத்தல்ஓயா பகுதிக்கு செல்வதற்கு வீதி வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ கிடையாது
 

 
குறிப்பிட்ட தூரத்திற்கு மாத்திரமே போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றாலும், அதை அடுத்துள்ள இந்த தோத்தல்ஓயா பகுதிக்கு செல்வதற்கு வீதி வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ கிடையாது

 
பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்றால், சுமார் 14 கிலோமீற்றர் தூரத்துக்கு மாணவர்கள் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 
நாளொன்றிற்கு சுமார் 28-க்கும் அதிகமான கிலோமீற்றர் இந்த மாணவர்கள் நடந்து சென்று வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
நாளொன்றிற்கு 22 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா என்ற தினக்கூலி கிடைக்கும் என கூறுகின்ற அந்த பிரதேச மக்கள், அதை விட குறைவாக தேயிலை பறிக்கப்படும் பட்சத்தில் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபா வழங்கப்படும் என குறிப்பிடுகின்றனர்.
 
 
''4 மணி வரை பறிக்கனும். 22 கிலோகிராம் பறித்தால் 1000 ரூபா கிடைக்கும். அதற்கு குறைவாக எடுத்தால், ஒரு கிலோவிற்கு 40 ரூபா கணக்கில் கொடுப்பார்கள். கடந்த மாதங்களில் கிலோவுக்கான சம்பளத்தையே பெற்றோம். முழு நாள் சம்பளத்தை பெறவில்லை. இல்லையென்றால், அரை பெயர் (அரை நாள் சம்பளம்) ஆக 500 ரூபா கொடுப்பார்கள்" என மைதிலி தெரிவிக்கின்றார்.

 
மலையக மக்கள்
 
எங்க பிள்ளைகளுக்கு அட்டை கடித்து, இரத்தம் வருவதை பார்க்க எங்களுக்கு விருப்பம் இல்லை என தோத்தல்ஓயா பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறுகின்றார்.
 
 
''அம்மா, அப்பா கஷ்டப்படுறத பார்த்துதான் நாங்களும் தோட்ட வேலைக்கு போனோம். அவங்களுக்கு படிக்க வைக்க வசதி இருக்கவில்லையே. அவங்களுக்கு படிக்க வைக்க வசதி இருந்தால், நாங்கள் நல்லா படிச்சி இருப்போம். இப்போ படிக்க வசதி இருந்தாலும், கிட்டத்துல பாடசாலை இல்லை. நாங்களும் பிள்ளைகள படிக்க வைக்க முயற்சிக்கிறோம். எங்க நிலைமைக்கு பிள்ளைகள வர வைக்க கூடாது. பிள்ளைகள நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். அதைதான் நாங்களும் பார்க்கின்றோம். நாங்க அட்டையால கடி பட்டு, இரத்தம் போறத பார்த்த, எங்களுக்கு எங்க பிள்ளைகளோட கால்ல இரத்தம் போனால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அந்த நிலைமைக்கு கொண்டு வர விருப்பம் இல்லை" என சிவகுமார் குறிப்பிடுகின்றார்.
 
 
சிவகுமார்
 
''மருத்துவ வசதிக்காக போக வேண்டி வந்தாலும், 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து போகனும். அப்படி போயிட்டு நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். சரியான மருத்துவ வசதி இருந்திருந்தால், காப்பாற்ற கூடிய நிலைமையில் இருந்தவர்கள் கூட இறந்திருக்கிறார்கள்.

 
எனக்கு 33 வயது. நானும் 18, 19 கிலோமீற்றர் நடந்து போயிட்டுதான் படித்தேன். இப்ப படிக்கின்ற பிள்ளைகளும் அதே தூரம் நடந்து போய்தான் படிக்குது. 10, 11 வயசு வரும்போது, படிக்க முடியாமல் பிள்ளைகள் தோட்டத்திற்கு வேலைக்கு போறாங்கள். போறத்துக்கு வசதி இல்ல. நடக்க முடியாது.

 
இலங்கை: வறுமையால் சோற்றுக்குப் பதில் மரவள்ளி - கேள்விக்குறியாகிறதா குழந்தைகளின் உடல்நிலை?
 
வகுப்புக்களுக்கு சரியாக போக முடியலை. ஆன்லையின் பாடம் படிக்கிறதாக இருந்தாலும், இங்க கவரேஜ் இல்ல. இப்படி நிறைய கஷ்டங்களை வைத்துதான் வாழ்ந்துட்டு இருக்கோம். வெள்ளைகாரன் காலத்துல இருந்து, அதாவது 200 வருடமாக நாங்க இப்படிதான் வாழ்ந்து வருகின்றோம்.
 
 
யாரும் வெளியில் போனால், எங்களை பார்த்து 'தோட்டக்காட்டன்னு' சொல்வாங்க. நாங்கள் தோட்டக்காட்டான்தான், அது எங்களுடைய அடையாளம்தான். தோட்டக்காட்டன் என்பது எங்களுக்கு ஒரு குறையாக தெரியல. நாங்கள் தோட்டத்துலயே இருக்கிறோம். அதை பற்றி யோசிக்க மாட்டோம்" என சதாசிவம் தெரிவிக்கின்றார்.
 
சதாசிவம்
 
பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் மலை குன்றுகளிலேயே வாழ்ந்து வருகின்றமையினால், பலர் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
 
 
இவ்வாறு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் பல்வேறு தோட்டங்களின் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
அதேபோன்று, தேயிலை கொழுந்துக்களை பறிப்போர் அட்டை கடி, சிறுத்தை தாக்குதல், குளவி கொட்டு, பாம்பு கடி என பல்வேறு அச்சுறுத்தல்களை நேரடியாக எதிர்நோக்கி வருகின்றனர்.
 
 
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் மக்களின் வாழ்க்கை, 200 வருடங்களாகவே செழிப்பாகவில்லை என்பது கண்களினால் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.

 
இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் தமக்கு, இந்த 200 வருடங்களில் கிடைத்த ஒரே பெயர் தோட்டக்காட்டன் என மலையக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப்பேருந்துகளில் மீண்டும் ஓரம் கட்டப்பட்டு வரும் திருக்குறள் ?