Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

Advertiesment
Ranil Wickramasinghe
, வியாழன், 12 மே 2022 (23:37 IST)
இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு பேசினார் ரணில். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.
 
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த அவர், திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் எனவும் ரணில் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் தீவிரமாகி வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த ரணில், போராட்டத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்ல இடமளிப்பதாக தெரிவித்தார்.
 
மஹிந்த ராஜபக்ஷ வசிக்க திருகோணமலை கடற்படை தளத்தை தேர்வு செய்தது ஏன்?
தனியொரு எம்.பி, ஆனாலும் இலங்கை பிரதமரான ரணில் - யார் இவர்?
மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை
''கோட்டா கோ கம மீது நான் கை வைக்க மாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். போலீஸாரும் அதற்கு எதையும் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்" என்றும் ரணில் கூறினார். இதைத்தொடர்ந்து ரணிலிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம்:
 
ரணில் விக்ரமசிங்க
கேள்வி:- ரணில் கோ கம என்ற ஒரு போராட்ட வடிவம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து உங்களின் கருத்து என்ன?
 
பதில் :- ரணில் கோ கம என்று ஒன்று உருவாக்கவில்லை. ரணில் கோ ஹோம் கம என்ற உருவாக்கி, எமது வீட்டிற்கு முன்பாக இருந்தனர். அது பிரச்னையாகியது. இந்த இடத்தில் ஒன்று மாத்திரமே உள்ளது. கோட்டா கோ கம என்ற அமைப்பு மாத்திரமே உள்ளது. ஏனையோருக்கும் கோ ஹோம் என கூற முடியும் அல்லவா?"
 
கேள்வி:- நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்குமா?
 
பதில் :- ஆம்... ஆம்..
 
கேள்வி:- பெரும்பான்மை தொடர்பில் ஏதாவது பிரச்னை வருமா?
 
பதில் :- இல்லை. இல்லை.. பெரும்பான்மை தொடர்பில் பிரச்னை இல்லை. பெரும்பான்மை காண்பிக்கின்றேன்.
 
கேள்வி:- நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு பெரும்பான்மையை காண்பிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து பெரும்பான்மை கிடைத்துள்ளதையா நீங்கள்
 
கூறுகின்றீர்கள்?
 
பதில்:- எனக்கு இரண்டு பக்கங்களிலும் பெரும்பான்மை உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இன்று துன்பங்களை அனுபவித்து வருவதை நிறுத்த வேண்டுமா? இல்லையா? நீங்கள் கூறுகின்றீர்கள், குறுகிய அரசியலை நடத்துவதற்காக மூன்று வேளைகளிலும் உணவு உட்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எமக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு டீசல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு மின்சாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொடுப்பேன், நாடாளுமன்றத்திலுள்ள அனைவரது ஆதரவுடனும் இதனை நான் பெற்றுக்கொடுப்பேன்.
 
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. இவற்றைத் தடுக்க ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியாகக் கூறி பொதுமக்கள் இலங்கையின் பல நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த வேளையில், மஹிந்த மட்டும் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை நடத்தினார்.
 
இதன் தொடர்ச்சியாக ஒரே ஒரு உறுப்பினர் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 73 வயதான ரணில் விக்ரமசிங்கவுடனும் கோட்டாபய ராஜபக்ஷ பேசினார்.
 
இந்த நிலையில், ரணில் இன்று நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
 
நாட்டின் பிரதமராக ஐந்து முறை பதவி வகித்த விக்ரமசிங்க, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறிசேனவால் மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார்.
 
ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவுடன் அவர் பிரதமராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவி ஏற்க வறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஜனாதிபதி பதவி விலகினால், அந்த வாய்ப்பை ஏற்பதாக சஜித் கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த அவகாசம் காலாவதியான நிலையில், நியமன உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இலங்கை பிரதமராகியிருக்கிறார்.
 
அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில், 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகவும் 1994, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கிறார் ரணில்.
 
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் பலம் உளளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில்லறை விகித பணவீக்கம் 7.79 அக அதிகரிப்பு…