Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பேஸ்எக்ஸ்: விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து சென்று தனியார் நிறுவனம் சாதனை

ஸ்பேஸ்எக்ஸ்: விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து சென்று தனியார் நிறுவனம் சாதனை
, ஞாயிறு, 31 மே 2020 (15:33 IST)
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

தனியார் விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

இனி நாசா தனது விண்வெளி வீரர்களை சொந்த விண்கலத்தில், விண்வெளி ஓடத்தில் அனுப்பாது; மாறாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் 'டாக்சி' சேவையை பயன்படுத்திக்கொள்ளும்.

இந்த வெற்றியின் மூலம், பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

தனது நிறுவனத்தின் ஏவூர்தி விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்வதை பார்த்து தான் உணர்ச்சிவசப்பட்டதாக எலான் மஸ்க் கூறினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.
webdunia

மிகவும் ஆவலோடு எதிர்நோக்கப்பட்ட இந்த விண்வெளி ஓடம் பூமியிலிருந்து விண்வெளியை நோக்கி சீறிப்பாய்வதை பார்ப்பதற்காக ஃ புளோரிடாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க அதிபர்கள் நமது விண்வெளி வீரர்களை சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்புவதற்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால், அது இனி நடக்காது. இன்று மிகச் சிறந்த விண்வெளி ஓடத்தின் மூலம் அமெரிக்க மண்ணில் இருந்து அமெரிக்கர்களை பெருமையுடன் விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 3:22 மணிக்கு, டிராகன் விண்கலத்தில் இருந்த ஹர்லி மற்றும் பெஹன்கன் ஆகியோரை சுமந்துகொண்டு பால்கன்-9 ஏவூர்தி விண்வெளியை நோக்கி சீறிப்பாய்ந்து.

மோசமான வானிலையின் காரணமாக ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த பயணம், சனிக்கிழமை அன்றும் மோசமான வானிலை நீடிக்கவே ஏவூர்தி திட்டமிட்டபடி புறப்படுவதற்கு 50:50 வீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலையாளர்கள் கணித்திருந்தனர். இந்த நிலையில், ஏவூர்தியை செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நேரத்தில் வானிலை ஒத்துழைக்க, அது விண்வெளியை நோக்கி சீறிப்பாய்ந்தது.
webdunia

பூமியிலிருந்து புறப்பட்ட இரண்டரை நிமிடங்களுக்குப் பிறகு, ஃபால்கான் ஏவூர்தியின் கீழ்நிலை பிரிக்கப்பட்டு அது கடலில் காத்திருந்த ஒரு ட்ரோன் கப்பலை பத்திரமாக வந்தடைந்தது. மேலும் ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, விண்வெளி வீரர்கள் இருக்கும் விண்கலம் பாதுகாப்பாக சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.

இவர்கள் இருவரும் அடுத்த சில மணிநேரங்களில், அதாவது உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள்.

இடைப்பட்ட நேரத்தை விண்கலத்தில் உள்ள கருவிகளை சோதிப்பதிலும், விண்கலத்தை இயக்கி பார்ப்பதிலும் அவர்கள் செலவிடுவார்கள்.

விண்வெளி வீரர்களை சுமந்து சென்றுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் தன்னிச்சையாகவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் திறன் படைத்தது என்றாலும், எதிர்பாராத சமயத்தில் நேரும் சூழ்நிலையை திறம்பட எதிர்கொள்ள விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, இந்த ட்ராகன் விண்கலத்தை இயக்குவதற்கு ஸ்டீயரிங்கெல்லாம் இல்லை, தொடுதிரையை பயன்படுத்தி மட்டுமே இதனை இயக்க முடியும்.

இந்த இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் தோராயமாக ஒன்று முதல் நான்கு மாதங்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வந்தே பாரத்” மூலம் தூத்துக்குடி வரும் வெளிநாட்டு இந்தியர்கள்! – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!