Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?

Qatar World Cup
, வியாழன், 17 நவம்பர் 2022 (22:39 IST)
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்காக விரைவில் கத்தார் வரவிருக்கும் ரசிகர்கள், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கட்டப்பட்ட மைதானங்களில் போட்டியை கண்டுகளிக்க உள்ளார்கள்.
 
இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கத்தார் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
 
உலகக் கோப்பை திட்டத்தில் மொத்தம் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்?
 
இந்த உலகக்கோப்பை தொடருக்காக கத்தார் 7 மைதானங்களை கட்டியுள்ளது. அதேபோல, புதிய விமான நிலையங்கள், மெட்ரோ, தொடர் சாலைகள் மற்றும் 100 புதிய தங்கும் விடுதிகள்வரை கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.
 
மைதானங்களைக் கட்டுவதற்காக மட்டும் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக கத்தார் அரசு தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
 
எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணமடைந்தனர்?
உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றதிலிருந்து இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் தி கார்டியன் நாளிதழ் கூறியது.
 
இந்த எண்ணிக்கை கத்தாரில் உள்ள தூதரகங்கள் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்த எண்ணிக்கை தவறான புரிதலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள கத்தார் அரசாங்கம், இந்த இறப்புகள் அனைத்தும் உலகக் கோப்பை தொடர்பான திட்டங்களில் பணியாற்றியவர்களுடையது அல்ல எனத் தெரிவித்துள்ளது.
 
இறந்தவர்களில் பலர், பல ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்தவர்கள் என்றும், இவர்கள் முதுமை அல்லது பிற இயற்கைக் காரணங்களால் இறந்திருக்கலாம் என்றும் கத்தார் அரசு கூறியுள்ளது.
 
2014 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில், உலகக் கோப்பை மைதானக் கட்டுமான தளங்களில் பணியாற்றிய 37 தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், அதில் மூன்று பேர் மட்டுமே வேலை தொடர்பான விபத்தில் இறந்ததாக விபத்து தொடர்பான பதிவுகள் காட்டுவதாக அரசு கூறியுள்ளது.
 
எனினும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தக் எண்ணிக்கை குறைத்துக்காட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது. மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறினால் ஏற்படும் மரணங்களை வேலை தொடர்பான விபத்தாக கத்தார் அரசு கணக்கிடவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. இவை அதிக வெப்பத்தில் கடினமான வேலைகள் செய்யும் போது ஏற்படக்கூடியவை.
 
கத்தாரில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலகக் கோப்பை திட்டங்களில் நிகழ்ந்த விபத்து தொடர்பான சொந்த புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு தொகுத்துள்ளது.
 
2021ஆம் ஆண்டில் மட்டும் 50 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 37,600 பேர் லேசான மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
புலம்பெயர் தொழிலாளர்களின் மரண எண்ணிக்கையை கத்தார் அரசு குறைவாக பதிவு செய்துள்ளதற்கான சில ஆதாரங்களை பிபிசி அரபு சேவை சேகரித்துள்ளது.
 
புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?
உலகக் கோப்பை நடத்தும் உரிமையை 2010ஆம் ஆண்டு கத்தார் பெற்றது முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்தை மனித உரிமை குழுக்கள் விமர்சித்துவருகின்றன.
 
2016ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் மனித உரிமை அமைப்பு கத்தார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாய வேலையில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டியது.
 
மேலும், பல தொழிலாளர்கள் மோசமான தங்குமிடங்களில் வசிப்பதாகவும், பெரும் தொகையில் ஆட்சேர்ப்பு கட்டணங்கள் செலுத்த கட்டாயப் படுத்தப்பட்டதாகவும், ஊதியம் நிறுத்தப்பட்டதாகவும், அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.
 
புலம்பெயர் தொழிலாளர்களை கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் வேலை செய்வதிலிருந்து பாதுகாப்பதற்கும், வேலை நேரத்தைக் குறைக்கவும், தொழிலாளர் முகாம்களின் நிலைமைகளை மேம்படுத்தவும் கடந்த 2017ஆம் ஆண்டு சில நடவடிக்கைகளை கத்தார் அரசு அறிமுகப்படுத்தியது.
 
 
எனினும், மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் 2021ஆம் ஆண்டின் அறிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தண்டனை மற்றும் சட்டவிரோத ஊதிய பிடித்தத்தால் அவதிப்படுவதாகவும், மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலையை எதிர்கொண்டதாகவும் கூறுகிறது.
 
கத்தார் நிறுவனங்கள் ‘கஃபாலா’ என்ற அமைப்பு முறையில் செயல்படுகின்றன. அதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் கத்தார் வருவதற்கு நிதியுதவி அளித்து, பின்னர் அவர்கள் வேலையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றனர்.
 
ஐஎல்ஓ போன்ற குழுக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கத்தார் அரசு இந்த நடைமுறையை ரத்து செய்தது. ஆனால், தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதைத் தடுக்க இன்னும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.
 
உலகக் கோப்பை பிரசாரம் தலைநகர் தோஹாவை விட்டு வெளியேறிய பிறகு தொழிலாளர் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் நிறுத்தப்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
 
புலம்பெயர் தொழிலாளர் உரிமை குறித்து கத்தார் அரசு என்ன கூறுகிறது?
ஐஎல்ஓ அமைப்புடன் இணைந்து செயல்படும் கத்தார் அரசு, பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஊதிய பாதுகாப்பு திட்டமும் இதில் அடங்கும்.
 
அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசுகையில், இந்த சீர்திருத்த நடவடிக்கை கத்தாரில் உள்ள பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தி வருவதாகக் கூறினார்.
 
சீர்திருத்தங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விதிகளை மீறும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் என்கிறார்.
 
 
கால்பந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என இந்தத் தொடரில் பங்கேற்கும் 32 நாடுகளுக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் சித்தாந்த அல்லது அரசியல் விவகாரங்களுக்குள் விளையாட்டை இழுக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், இதற்குப் பதிலளித்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உட்பட பத்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள், "மனித உரிமைகள் உலகளாவியது மற்றும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்" என்று கூறியுள்ளது.
 
புலம்பெயர் தொழிலாளர்களை தவறாக நடத்தும் கத்தாரை விமர்சித்து ஆஸ்திரேலிய கால்பந்து அணி ஒரு காணொளி வெளியிட்டுள்ளது.
 
கத்தாரின் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக டென்மார்க் வீரர்கள் சிறப்பு ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைவான் மீது தாக்குதல் நடத்தினால்?அமெரிக்கா ராணுவத் தலைமைத் தளபதி முக்கிய தகவல்