இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது.
இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார்.
தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் பல போராட்டங்களை நடத்த தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.