Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

Advertiesment
மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
, செவ்வாய், 4 மே 2021 (11:44 IST)
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
 
ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.
 
இது எப்படி சாத்தியமாயிற்று. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறதா?
 
நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.
 
நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலைவிட ஆறரை மடங்கு. மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு. ஒரு தொகுதியில்கூட வெற்றபெற முடியவில்லை என்றாலும், ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.
 
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
 
அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்துக்கும் சற்று அதிகம். வாக்கு சதவிகிதம் 24.3%. மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் இந்த அளவுக்கு இல்லையென்றாலும், 170-க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
 
இந்தத் தரவுகள் தமிழர் கட்சியின் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.
 
"சிந்தாந்த ரீதியாக தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். திமுகவும் இப்படி வளர்ந்த இயக்கம்தான். அந்த வகையில் கடந்த 3 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்திருக்கிறது " என்கிறார் அவர்.
 
நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்குக்கு தேர்தல் முடிவுகளில் திருப்தியில்லை. "தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்றார் அவர். இருப்பினும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சுமார் 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் மாற்றத்துக்கான விதைகளாகவே கருதுவதாக அவர் கூறுகிறார்.
 
"வரலாற்றில் நாம் தமிழர் கட்சியைப் போல தேர்தல் சமரசம் செய்து கொள்ளாத கட்சி எதுவுமில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்கின்றன" என்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.
 
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் தொடக்கத்தில் இருந்தே பலரையும் கவனிக்க வைத்திருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் இதை "ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கட்டமைப்பை எதிர்க்கும் வாக்கு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு வாக்களிப்போரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
 
இதேபோன்றதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சேரன், வேட்பாளர்கள் தோல்வி கண்டாலும் கட்சி வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நாம் தமிழர் கட்சி வாக்கு விகிதங்களில் வளர்ந்து வந்தாலும் அந்தக் கட்சிக்கு பலவிதமான சவால்களும் நெருக்கடிகளும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கணபதி கூறுகிறார்.
 
"சீமானின் பேச்சுக்கு இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அவரை நம்பி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து விலகினால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். அதேபோல கூடிய விரைவில் அரசியல் பதவிகளைப் பிடிக்க வேண்டும்." என்கிறார் கணபதி.
 
"தற்கால அரசியல் சூழலில் கொள்கை மட்டுமே அரசியலில் வெற்றிபெறப் போதுமானது இல்லை. காலத்துக்குத் தக்கபடி நவீன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிற கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால் கட்சி அரசியல் ரீதியான ஆற்றல் கிடைக்கும். அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் தொடக்க காலம் இப்படிக் கட்டமைக்கப் பட்டதுதான்." என்று குறிப்பிடுகிறார் கணபதி.
 
"அரசியல் அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சல்" என்று தங்களது தேர்தல் உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் இலக்கு அதுதான் என்கிறார். திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் மக்களின் எதிர்ப்பு வாக்கு மனநிலையே தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஆயினும் தற்போது அமையும் திமுகவின் ஆட்சியால் இரு திராவிடக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும் அவற்றுக்கு மாற்றாக நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள் என்றும் இடும்பாவனம் கார்த்திக் நம்புகிறார்.
 
"2024 மக்களவைத் தேர்தலிலும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்" என்கிறார் அவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளி! – விமானம் அனுப்பிய சோனுசூட்