Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு
, சனி, 8 நவம்பர் 2014 (06:19 IST)
ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது.



வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.
 
ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். 
 
இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறது.
 
13 வயது வரும் வரைக்கும் பிள்ளைகள் முப்பரிமாண படங்களை குறைவாகவே பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என உணவு, சுற்றுச்சூழல், வேலையிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான இந்த பிரஞ்சு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சிறார்களுக்கான படங்கள் அதிக அளவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் வெளிவருகின்ற ஒரு காலகட்டம் இது. வீடியோ கேம்கள், தொலைக்காட்சிகள், கணினித் திரைகள் என்று எல்லாவற்றிலும் முப்பரிமாணத் திரை வந்துவிட்டது.
 
தற்போது கூடுதலான நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றன.
 
ஆப்பிள் நிறுவனம் கண்ணாடி அணியாமலேயே முப்பரிமாணப் படங்களைப் பார்க்க உதவுகிற திரை ஒன்றை உருவாக்கி வருவதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
முப்பரிமாணப் படங்கள் கண்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றி குரல்கள் ஒலிப்பது இது முதல் முறை என்றில்லை.
 
ஏற்கனவே இத்தாலியில் இளம் பிள்ளைகள் முப்பரிமாணப் படங்களைப் பார்ப்பதற்குரிய கண்ணாடிகளை அணிவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாட்டின் சுகாதார கண்காணிப்பு நிறுவனம் எச்சரித்ததை அடுத்து இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
 
நிண்டெண்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010ல் ஒரு புதிய முப்பரிமான கருவியை அறிமுகப்படுத்தியபோது, ஆறு வயதுக்கும் குறைவானப் பிள்ளைகள் அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம் என எச்சரித்திருந்தது.
 
அதேநேரம் முப்பரிமாணப் படங்களைப் பார்த்ததன் விளைவாக பார்வைத் திறன் கெட்டுப்போனதாக தங்களிடம் புகார்கள் வந்ததில்லை என அமெரிக்க கண்திறன் சங்கம் கூறியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil