Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரியில் நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணை

காவிரியில் நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணை
, திங்கள், 5 செப்டம்பர் 2016 (18:16 IST)
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
அதே நேரத்தில், இடைக்கால உத்தரவாக, அடுத்த 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
 
கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகாமல், உச்சநீதிமன்றத்துக்கு வந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
 
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வும், தமிழகத்திடம் அதே கேள்வியை எழுப்பியது.
 
இதையடுத்து, மேற்பார்வைக் குழுவை அணுக ஒப்புக்கொண்ட தமிழகம், இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
 
மூன்று நாட்களுக்குள் மேற்பார்வைக் குழுவை தமிழகம் அணுக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதற்கடுத்த மூன்று நாட்களில் கர்நாடக அரசு பதில் மனுவைத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கடுத்த நான்கு நாட்களில், கர்நாடக அரசு எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பதை மேற்பார்வைக் குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
அதற்கு முன்பு, இடைக்காலமாக தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம், பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, ஒழுங்காற்று வாரியம் அமைக்கும் முன்னதாக, இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறைச் செயலர் தலைமையிலான இந்தக் குழுவில், தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மந்திரியின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது