Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்

'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
, புதன், 29 டிசம்பர் 2021 (08:54 IST)
ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது. இது இணையத்தில் ஈலோன் மஸ்க் மீது கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா.
 
ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி முகமையிடம் கொடுக்கப்பட்ட புகார் மற்றும் அதற்கு பின்னுள்ள சம்பவங்கள் குறித்து சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.
 
உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வரும் ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான், ஸ்டார்லிங்க் என்கிற செயற்கை கோள் இணைய நெட்வொர்க்கை இயக்கி வருகிறது.
 
ஏற்கனவே ஈலோன் மஸ்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, சீன நெறிமுறையாளர்களால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.
 
ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரு தேதிகளில் அச்சம்பவங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகளின் 'ஆஃபீஸ் ஃபார் அவுட்டர் ஸ்பேஸ் அஃபயர்ஸ்' என்கிற அமைப்பிடம் சீனா சமர்பித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"பாதுகாப்பு காரணங்களைக் கருதி, சீன விண்வெளி நிலையம் மோதலைத் தவிர்க்கும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தியது" என சீனா தன் முகமையின் வலைதளத்தில் பிரசுரித்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் கருத்து கேட்ட பிபிசிக்கு உடனடியாக பதில் ஏதும் கிடைக்கவில்லை.
 
சீனாவின் புகார் பொதுவெளியில் வந்த பின், ஈலோன் மஸ்க், அவரது ஸ்டார்லிங்க் திட்டம், அமெரிக்கா என பல தரப்பினரும் சீனாவின் டுவிட்டர் என்றழைக்கப்படும் வைபோவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
 
ஸ்டார்லிங்க் விண்வெளி குப்பைகளின் குவியல் என ஒரு பயனர் விமர்சித்திருந்தார்.
 
இந்த செயற்கை கோள்கள் அமெரிக்காவின் விண்வெளிப் போர் ஆயுதங்கள் என்றும், மஸ்க் அமெரிக்க அரசாலும் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட புதிய ஆயுதம் என்றும் மற்றொருவர் விமர்சித்துள்ளார்.
 
"ஸ்டார்லிங்கின் அபாயங்கள் மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளன, அவர்களின் வணிக நோக்கிலான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மனித இனமே பெரிய விலை கொடுக்கும்" என மற்றொரு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அமெரிக்கா விண்வெளி உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மறுப்பதன் மூலம், விண்வெளி வீரர்களை அபாயத்தில் ஆழ்த்துகிறது என சீனா குற்றம்சாட்டியது.
 
அமெரிக்கா பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்துவதாக சீனாவின் வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் கூறினார்.
 
விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பூமியைச் சுற்றி வரும் சுமார் 30,000 செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளிக் குப்பைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள உலக நாடுகளுக்கு விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 1,900 செயற்கைக் கோள்களை ஸ்டார்லிங்க் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது, மேலும் 1,000 செயற்கைக் கோள்களை ஏவ உள்ளது.
 
கடந்த மாதம் நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்த வேண்டிய விண்வெளி நடைப்பயணத்தை, விண்வெளிக் குப்பைகள் காரணமாக திடீரென ஒத்திவைத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவாவில் ரொனால்டோவுக்கு சிலை; அப்செட்டில் மெஸ்சி ரசிகர்கள்!