Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா ஆடியோ: கார் எரிப்புக்குப் பின்னணியில் யார்?

சசிகலா ஆடியோ: கார் எரிப்புக்குப் பின்னணியில் யார்?
, புதன், 23 ஜூன் 2021 (09:06 IST)
அ.தி.மு.கவில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கார் எரிப்பு, உருவ பொம்மை எரிப்பு என அடுத்தகட்டத்தை நோக்கி மோதல் நகர்வதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சசிகலாவின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
 
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 66 இடங்களோடு சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க அமர்ந்தது. `இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு தன்னை நோக்கி வருவார்கள்' என எதிர்பார்த்திருந்த சசிகலாவின் கனவும் பொய்த்துப் போய்விட்டது.
 
இந்நிலையில், அண்மைக்காலமாக அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். அந்தவகையில் இதுவரையில் அறுபதுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகிவிட்டன. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதை உணர்ந்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, `அ.ம.மு.க தொண்டர்களுடன்தான் அவர் பேசி வருகிறார். இதனால் எந்தவிதக் குழப்பத்தையும் ஏற்படுத்திவிட முடியாது' என்றார்.
 
அதிகாலையில் காரை எரித்தது யார்?
webdunia
இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்ட அதேநேரம், சசிகலாவுடன் பேசியவர்களில் 15 பேர் நீக்கப்பட்டனர். கூடவே, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட பெங்களூரு புகழேந்தியும் நீக்கப்பட்டார்.
 
 
ஆடியோ பேச்சு, வார்த்தைப் போர் என நீண்டு கொண்டிருந்த சசிகலா விவகாரம், தற்போது மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகக் கவலைப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
 
இதற்கு உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜாவின் கார் எரிக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
 
சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தை அ.தி.மு.க தலைமை கண்டு கொள்ளாததால் மிகுந்த அதிருப்தியில் வின்சென்ட் ராஜா இருந்துள்ளார். இதனைக் கேள்விப்பட்டு அவரிடம் சசிகலா பேசியுள்ளார்.
 
இதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 15 பேரில் வின்சென்ட் ராஜாவின் பெயரும் இருந்தது. ``என்னை நீக்கியதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருக்கிறார் என ஊடகங்களில் பேட்டியளித்த காரணத்துக்காகவே எனது கார் எரிக்கப்பட்டது" என்கிறார் வின்சென்ட் ராஜா.
 
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில தகவல்களைப் பட்டியலிட்டார். ``கடந்த 8 ஆம் தேதி சின்னம்மா (சசிகலா) எனக்குப் போன் செய்து பேசினார். அப்போது, `கட்சி எந்த நிலையில் உள்ளது?' என்பதைப் பற்றி அவரிடம் விவரித்துவிட்டு, ` நீங்கள் தலைமையேற்றால் தான் அனைத்தையும் சரிசெய்ய முடியும். ஒருவர் தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்கக் கூடிய தலைமை வேண்டும். தவறுகளை ஏற்றுக் கொண்டு எடப்பாடி பதவிகளைத் தருகிறார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மற்றவர்கள் செய்யக் கூடிய தவறுகளை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதனால் நீங்கள் பதவியேற்றால் மட்டுமே அம்மா கண்ட கனவு நனவாகும்' எனக் கூறினேன்.
 
எடப்பாடி ஏன் வரவில்லை?
 
அவரிடம் பேசும்போது, `உங்களிடம் பேசியது தெரிந்தால் என்னைப் பதவியை விட்டே நீக்கிவிடுவார்கள், அப்படி பதவி போனாலும் பரவாயில்லை. நான் பதவிக்காக வாழவில்லை. இந்தக் கட்சி காப்பாற்றப்பட வேண்டும்' எனக் கூறினேன். இதனை தொண்டர்களின் வெளிப்பாடாகத்தான் நான் பேசினேன். இதன் தொடர்ச்சியாக என்னைக் கட்சியில் இருந்தே தலைமைக் கழகம் நீக்கியது. இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்று விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அப்போதும், `சின்னம்மாவின் மீதான பிடிப்பில் நான் அவ்வாறு பேசவில்லை. இந்த இயக்கத்தின் அடிமட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்காக பேசினேன். சட்டமன்றத் தேர்தலில் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம் என்பதை விவரிப்பதற்காகவே பேசினேன்' எனக் கூறினேன். அது ஆர்.பி.உதயகுமாரின் கோபத்தைக் கிளறிவிட்டுவிட்டது" என்கிறார்.
 
மேலும், ``சட்டமன்றத் தேர்தலில் இந்த மண்டலத்துக்கு பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்தனர். அவருக்கு இந்தத் தொகுதி மட்டுமல்லாமல் தென்மாவட்டத்தில் 21 தொகுதிகளுக்கும் அவர்தான் பொறுப்பாளராக இருந்தார்.
 
ஆனால், அந்த 21 தொகுதிகளிலும் அவர் எந்த வியூகத்தையும் வகுக்கவில்லை. எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் கண்டுகொள்ளவில்லை. அதேநேரம், முதுகுளத்தூரில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், அந்தத் தொகுதியைத் தவிர மற்ற 3 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இதுதவிர, வேறு சில மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். அவர் ஒரு வேட்பாளராக இருந்தாலும் மற்ற தொகுதிகளின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.
 
ஆனால், அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரவே இல்லை. தனக்கு வாக்கு கேட்டு அவரும் வரவில்லை. ஓ.பி.எஸ்ஸும் வரவில்லை. யாரும் வராததால் நிராயுதபாணியாக நின்றோம். இதனால் பல காலமாக வெற்றி பெற்று வந்த பரமக்குடியில் தோற்றோம். இதற்கு என்ன காரணம் எனக் கேட்டால், `10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு கொடுத்ததால் முக்குலத்தோர் சமுதாயம் கோபத்தில் இருந்ததால் முதல்வர் வரவில்லை' என்றார்கள். அப்படியானால், ஆட்சியை இழந்ததற்கு அ.தி.மு.க தலைமைதான் காரணம்" என்கிறார்.
 
சசிகலாவின் சமாதானம்!
 
``சசிகலாவுடன் பேசினால் நீக்குவார்கள் எனத் தெரிந்தே பேசியது சரியா?" என்றோம். `` அ.தி.மு.க தலைமையை நேரில் அணுகி புகார் சொல்வதற்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஏன் தோற்றோம் என்பதை ஒரு கட்சி பரிசீலனை செய்ய வேண்டும் அல்லவா.. அதைச் செய்வதற்கு ஏன் மறுக்கிறார்கள்? இது இன்று மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றபோதும் கட்சி பரிசீலனை செய்யவில்லை. ஆனால் சசிகலாவுடன் பேசியதற்காக கடந்த 21 ஆம் தேதி அதிகாலை என்னுடைய காரை எரித்துள்ளனர். அரசியல்ரீதியாக என்னை அச்சுறுத்திப் பார்க்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆர்.பி.உதயகுமார் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்" என்றார்.
 
``கார் எரிக்கப்பட்ட பிறகு சசிகலா பேசினாரா?" என்றோம். `` ஆமாம். அப்போது பேசிய அவர், ` இந்த மாதிரியெல்லாம் நமது கட்சியில் நடக்காது. ஆளை வெட்டுவது, காரை கொளுத்துவது என்பது புதிதாக நடக்கிறது. சற்று பொறுத்திருங்கள். கொரோனா முடிந்ததும் சுற்றுப்பயணம் வருவேன். உங்கள் மாவட்டத்துக்கு வரும்போது வீட்டுக்கு வருகிறேன். எல்லாம் நல்லதே நடக்கும்' என ஆறுதல் கூறினார். அவர் வெறும் ஆடியோவில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க மாட்டார். அவர் தெளிவாக இருக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் அம்மா சமாதிக்குச் சென்ற பிறகு ஒவ்வொரு கிராமம்வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளார். அதன் பிறகு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்" என்கிறார்.
 
சீனியர்களின் மனநிலை!
இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 19 ஆம் தேதி அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வநாதன், ``இந்தக் கட்சியில் தாயையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது என சசிகலா கூறுகிறார். அவர் தாய் இல்லை, பேய். அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ். அதனை சுமந்து செல்ல நாங்கள் தயாராக இல்லை' எனப் பேசியதாகத் தகவல் வெளியதானது. இதனால் கோபப்பட்ட அ.ம.மு.கவினர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
மேலும், சசிகலாவை எதிர்த்து மாவட்டக் கழகங்களில் அ.தி.மு.கவினர் தீர்மானம் நிறைவேற்றி வந்தாலும் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் வைத்திலிங்கமும் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலா எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பதும் அ.தி.மு.க வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவில் உள்ள சீனியர்கள் பலரும், `இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்கே இருப்போம்' என்ற மனநிலையில் உள்ளதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
 
வின்சென்ட் ராஜாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த விவகாரம் குறித்து இப்போது பேச விரும்பவில்லை. பிறகு பேசுகிறேன்" என்றார்.
 
தஞ்சை, தேனியில் ஏன் எதிர்ப்பு இல்லை?
webdunia
இதையடுத்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதுபோன்ற அராஜக செயல்களில் அ.தி.மு.க தொண்டர்கள் ஈடுபட மாட்டார்கள். எதையும் அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அவர்களுக்கு வேறு எதாவது வகையில் விரோதங்கள் இருந்திருக்கலாம். கார் எரிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது. அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதிலும் அரசியல் லாபம் பார்க்க வேண்டும் என நினைத்தால் அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்களைக் கட்சியில் இருந்து நீக்கியதோடு எங்கள் பணி முடிந்துவிட்டது. அதன் பிறகு காரை எரிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?" என்கிறார்.
 
``தஞ்சை, தேனியில் ஏன் சசிகலா எதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேறவில்லை?" என்றோம். ``சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். சொந்த ஊருக்குச் சென்றதும் தீர்மானங்களை நிறைவேற்றலாம். இதை செய்தாக வேண்டும் எனத் தலைமை யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அந்தந்த மாவட்டங்களில் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. இது நிர்வாகிகளும் தொண்டர்களும்தான் முன்னெடுக்கிறார்கள். விரைவில் அந்த மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேறும்" என்கிறார்.
 
கொரோனா ஊரடங்கு தளர்வுக்காக சசிகலா காத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் போயஸ் கார்டனில் அவருக்காக தயாராகியுள்ள புது வீட்டுக்கு ஓரிரு தினங்களில் அவர் குடியேற உள்ளதாகவும் இதன்பிறகு கார்டனில் இருந்தபடியே தனது அரசியல் நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்க உள்ளதாகவும் மன்னார்குடி உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: டெல்லியில் ஒருவர் கைது!