Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் புதிய திருத்தத்தை கோரும் சஜித் பிரேமதாஸ

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (09:42 IST)
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
 
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 19ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய விடயங்களை பாதுகாத்து 19 பிளஸ் உருவாக்கப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
 
19 பிளஸ் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் காணப்படுகின்ற மிக மோசமான விடயங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்  வகையில் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்து, அதற்கு பதிலாக சர்வதிகாரம் கொண்ட திருத்தமொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதன்படி, 19ஆவது திருத்தத்திலுள்ள ஊழல் ஒழிப்பு விடயங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், சிறந்த அரச நிர்வாக முறைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள்  தற்போது பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் அவர் கூறியிருந்தார்.
 
அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தமானது, நாட்டு மக்கள் மீதான தாக்குதல் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
 
19 பிளஸ் அரசியல் தலையீடுகள் இருக்காத வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
 
அத்துடன், இந்த விடயத்திற்கு தாம் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டு என்னவென ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி  எழுப்பியிருந்தனர்.
 
13ஆவது திருத்தம் காட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதிலுள்ள மாகாண சபை முறை தற்போதுள்ளதை விடவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.
 
நாட்டில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
எனினும், புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது தொடர்பிலான வரைவு வெளியானதை அடுத்தே, அது தொடர்பிலான மேலதிக விபரங்களை தம்மால் கூற முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.
 
எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்திலுள்ள போலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பிலான தமது நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என சஜித்  பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

டங்ஸ்டன் விவகாரம்.. வெட்ட வெளிச்சமானது திமுக அரசின் பொய்: எடப்பாடி பழனிசாமி

110 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments