Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க இன்னும் வாய்ப்பு உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Advertiesment
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க இன்னும் வாய்ப்பு உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
, புதன், 16 பிப்ரவரி 2022 (09:52 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.யுக்ரேன் எல்லையில் ரஷ்யா 1,50,000 படையினரை குவித்திருப்பதாக ஜோ பைடன் கூறுகிறார். கொஞ்சம் படையினரை தற்போது வாபஸ் பெற்றிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
 
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார் ஜோ பைடன். "(ரஷ்யப் படைகள்) உண்மையில் வெளியேறுவது நல்லது. ஆனால் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்ய ராணுவப் பிரிவுகள் தங்கள் தளங்களுக்குத் திரும்பும் தகவலை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை" என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
 
"உண்மையில், ரஷ்ய படைகள் தற்போதுவரை அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாகத்தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்."ரஷ்யாவின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறிய சில மணி நேரங்களில் ஜோ பைடன் இவ்வாறு பேசியுள்ளார். ரஷ்யா ஊடுருவ முயல்வதாக கூறும் தகவலை விளாதிமிர் புதின் எப்போதுமே மறுத்து வந்துள்ளார். ஐரோப்பாவில் இன்னொரு போரை ரஷ்யா விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், நவம்பர் முதல் பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சோவியத் ஒன்றியத்தில் யுக்ரேன் இருந்த காலத்தில் இருந்தே, ரஷ்யா - யுக்ரேன் இடையே ஆழமான கலாசார, வரலாற்று உறவுகள் இருந்துவருகின்றன. மேற்கத்திய நேட்டோ கூட்டணியில் யுக்ரேன் சேரப்போவதில்லை என்ற உத்தரவாதம் வேண்டும் எனவும், ஏனென்றால் நேட்டோ ராணுவ விரிவாக்கம் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக‌ உள்ளது எனவும் ரஷ்யா கருதுகிறது. ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் நேட்டோ ராணுவம் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று அது கூறுகிறது.
 
அமெரிக்க மக்களுக்கு பைடன் கூறியது என்ன?
யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், அதனால், அமெரிக்காவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
 
"ஜனநாயகத்துக்கும், விடுதலைக்கும் பாதுகாப்பாக நிற்கும்போது அதற்கு ஒரு விலை தரவேண்டியிருக்கும் என்பதை அமெரிக்க மக்கள் உணராதவர்கள் அல்ல. இது வலியில்லாமல் நடக்கும் என்று நான் பாசாங்கு செய்யமாட்டேன்," என்றும் பைடன் கூறியுள்ளார்.
 
அமெரிக்க நிர்வாகம் தற்போது, விநியோக பிரச்னை வராமல் இருக்க, ஆற்றல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் உடன் வருங்கால திட்டத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது, என்று கூறினார்.மேலும் பைடன் கூறுகையில், யுக்ரேன் ஆக்கிரமிப்பு நடந்தால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் நோர்ட்ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் நடக்காது என்றும் அவர் கூறினார்."ரஷ்ய குடிமக்களுக்கு நான் கூற விரும்புவது: நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல, அதே சமயத்தில் ஒரு அழிவு நிறைந்த போரை நீங்கள் யுக்ரேனில் நிகழ்த்த விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்", என்று தெரிவித்துள்ளார் பைடன்.
 
நேட்டோ என்ன சொன்னது?
தங்கள் படைகளில் ஒரு பகுதியை திரும்ப அழைத்துக் கொண்டதாக செவ்வாய்க்கிழமை ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்தியிருந்தது நேட்டோ.
 
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் பேசியபோது, "போர்ப்பதற்றம் தனிவது என்பது சரிபார்க்கும் வகையில், நம்பகமான வகையில், பொருளுள்ள வகையில் நிகழவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது" என்று தெரிவித்தார்.
 
முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்வீட்டில், "ரஷ்யாவிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் கலவையாக உள்ளன. ஏனெனில், யுக்ரேன் எல்லை அருகே ரஷ்யா கள மருத்துவமனைகளை அமைத்து வருவதாக பிரிட்டன் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. இதை ஆக்கிரமிப்பிற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்க முடியும்," என்று கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரின் கட்சி தாவும் அமைச்சர் தேமுதிக வருவார்..! – செந்தில் பாலாஜியை பகடி செய்தாரா பிரேமலதா?