ரஷ்யா காச்சட்டுர்யன் சகோதரிகள்: தந்தையை கொன்ற மகள்களுக்கு ரஷ்ய மக்களின் ஆதரவு ஏன்?

புதன், 28 ஆகஸ்ட் 2019 (21:19 IST)
நினா நசரோவா
 
தந்தையைக் கொன்ற சமயத்தில் ஏஞ்சலினாவுக்கு (இடது) 18 வயது, மரியாவுக்கு (நடுவில்) 17 வயது, கிரெஸ்டினாவுக்கு 19 வயது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் தங்கள் அடுக்குமாடி வீட்டில், தூக்கத்தில் இருந்த தங்களின் தந்தையை அடித்தும், கத்தியால் குத்தியும் பதின்ம வயதில் இருந்த மூன்று சகோதரிகள் கொன்றுவிட்டனர்.
 
இந்த பதின்ம வயது பெண்களின் தந்தை அவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்திருக்கிறார் என்பதை புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
 
கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த சகோதரிகள் பற்றியும், அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதும் ரஷ்யாவில் சூடான விவாதத் தலைப்புகளாக மாறியுள்ளன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் 3,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
 
தந்தைக்கு என்ன நடந்தது?
 
2018 ஜூலை 27 ஆம் தேதி மாலையில் 57 வயதான மிகையீல் காச்சட்டுர்யன், தனது மகள்கள் கிரெஸ்டினா, ஏஞ்சலினா ஆகியோரையும், அப்போது மைனராக இருந்த மரியாவையும், ஒவ்வொருவராக தனது அறைக்கு அழைத்திருக்கிறார். வீட்டை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று அவர்களைத் திட்டியதுடன் மிளகு ஸ்பிரேவை அவர்களுடைய முகத்தில் அடித்திருக்கிறார்.
 
பின்னர் அவர் தூங்கிய பிறகு, இந்த சகோதரிகள் கத்தி, சுத்தியல் மற்றும் மிளகு ஸ்பிரே கொண்டு அவரை தாக்கியுள்ளனர். மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவருக்குத் தலை, கழுத்து மற்றும் மார்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் அவருடைய உடலில் இருந்தன.
 
சகோதரிகள் பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர், தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
அதிகாரிகள் விசாரணை செய்தபோது, குடும்ப வன்முறை வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவ்வப்போது தனது மகள்களை அடித்தும், துன்புறுத்தி சிறை வைத்ததுடன், அவர்களிடம் பாலியல் அத்துமீறலிலும் தந்தை ஈடுபட்டிருக்கிறார்.
 
தந்தைக்கு எதிராக சகோதரிகள் அளித்த ஆதாரங்கள், குற்றச்சாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 
குடும்ப வன்முறை குறித்து கவனம்
 
இந்த வழக்கு ரஷ்யாவில் வேகமாக பிரபலமானது. இந்தச் சகோதரிகள் குற்றவாளிகள் அல்ல என்றும், பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர். அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு எந்த வகையிலும் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
இருந்தபோதிலும், குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்க ரஷ்யாவில் சட்டங்கள் ஏதும் கிடையாது.
 
இந்த சகோதரிகளுக்கு ஆதரவாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த ஆதரவு பேரணியில், ``காச்சட்டுர்யன் சகோதரிகளுக்கு விடுதலை தர வேண்டும்'' என்று பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
 
2017ல் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களின்படி, குடும்ப உறுப்பினரை முதன்முறையாகத் தாக்கிய, ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மோசமான அளவுக்கு இல்லாமல் தாக்கிய குற்றத்துக்கு ஆளானவருக்கு அபராதம் அல்லது இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
 
குடும்ப வன்முறையை ``குடும்பப் பிரச்சனையாகவே'' ரஷ்ய காவல்துறை கருதுகிறது. எனவே இந்த விஷயத்தில் சிறிதளவே உதவி கிடைக்கும் அல்லது உதவியே கிடைக்காது.
 
சகோதரிகளின் தாயாரும் கடந்த காலத்தில் காச்சட்டுர்யனால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார். அவர் முன்பே காவல் துறை உதவியை நாடியுள்ளார். அவரால் அதிக அச்சமடைந்த பக்கத்து வீட்டினரும் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். ஆனால் இந்த புகார்கள் தொடர்பாக எந்தவித உதவியும் அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
2015 ஆம் ஆண்டில் அடுக்குமாடி வீட்டில் இருந்து தம்மை மிகையீல் வெளியேற்றிவிட்டார் என சகோதரிகளின் தாயார் ஆரெலியா டுன்டுக் தெரிவித்துள்ளார்.
 
மிகையீல் கொல்லப்பட்டபோது, சகோதரிகளின் தாயார், அங்கு வசிக்கவில்லை. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மகள்களை காச்சட்டுர்யன் தடுத்து வைத்திருந்தார்.
 
சகோதரிகள் தனிமையில் வாழ்ந்தனர் என்றும், மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தார்கள் என்றும் உளவியல் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
 
புலனாய்வின் போது என்ன நடந்தது?
 
காச்சட்டுர்யன் சகோதரிகளின் வழக்கு விசாரணை மெதுவாக நடைபெற்று வந்தது. அவர்கள் காவலில் இல்லை. ஆனால், அவர்கள் செய்தியாளர்களுடன் பேசக் கூடாது, ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.
 
காச்சட்டுர்யன் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப் பட்டிருக்கிறது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காச்சட்டுர்யன் தூங்கிக் கொண்டிருந்த போது,சகோதரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர், காலையில் கத்தியை எடுத்து வைத்திருந்தனர் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பழிவாங்க வேண்டும் என்பது தான் கொலைக்கான நோக்கம் என்று அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப் படுகிறது.
 
சகோதரிகள் (படத்தில் இருப்பது ஏஞ்சலினா) 2019 ஜூன் மாதம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராயினர்.
 
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சகோதரிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படலாம். ஏஞ்சலினா சுத்தியலால் தாக்கினார், மரியா கத்தியால் குத்தினார், கிரெஸ்டினா மிளகு ஸ்பிரே அடித்தார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
 
இருந்தபோதிலும், தற்காப்புக்காகத் தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சகோதரிகளின் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். சொல்லப்போனால், திடீரென நடக்கும் நிகழ்வுகளில் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப் படுவது போன்ற, `தொடர்ச்சியான குற்றச் செயல்களின் போதும்' தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை ரஷ்ய கிரிமினல் சட்டம் அனுமதிக்கிறது.
 
தொடர்ச்சியான குற்றச் செயல்களால்' பாதிக்கப்பட்டவர்களாக இந்தச் சகோதரிகள் உள்ளனர் என்று வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர். எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதும் அவர்கள் தரப்பு வாதம். 2014 ஆம் ஆண்டில் இருந்தே தன் மகள்களை காச்சட்டுர்யன் துன்புறுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் உறுதி செய்யப் பட்டிருப்பதால், இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.
 
சட்டத்தை மாற்ற வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், ரஷியர்கள் பலரும் இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடத்தும் இல்லங்கள் தேவை, தடுப்பு நடவடிக்கை சட்டங்கள் தேவை, அத்துமீறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆலோசனை மையங்கள் தேவை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
குடும்ப வன்முறை எந்த அளவுக்கு வியாபித்துள்ளது?
 
ரஷ்யாவில் குடும்ப வன்முறையில் எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு தகவல்கள் ஏதும் இல்லை. உத்தேச மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன. ஆனால் நான்கில் ஒரு குடும்பத்தில் இதுபோன்ற பாதிப்பு இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
பொறாமை காரணமாக தன்னுடைய மனைவி மார்கரிட்டா கிரச்செயாவின் கைகளை அவருடைய கணவர் வெட்டியது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.
 
தனது கைகளை கணவர் வெட்டியதைத் தொடர்ந்து, தனக்கு நடந்த துன்புறுத்தல் பற்றி விளக்குகிறார் மார்கரிட்டா கிரச்செயா.
 
ரஷ்யாவில் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிறையில் உள்ள பெண்களில் 80 சதவீதம் பேர், குடும்ப வன்முறையில் தற்காப்புக்காக அதில் ஈடுபட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ரஷ்யாவில் அடிப்படைவாத சமூகத்தில் சில பிரிவினரிடம், காச்சட்டுர்யன் சகோதரிகளுக்கு எதிரான கருத்துகள் உள்ளன. ``தந்தை வழி ஆதிக்கம்'' மற்றும் ``தேசியவாதம்'' ஆகியவை தான் முக்கியமான மாண்புகள் என்று கூறும் மென்ஸ் ஸ்டேட் என்ற அமைப்பு, சமூக ஊடகங்களில் 150,000 க்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு உள்ளதாகக் கூறிக் கொள்ளும் அந்த அமைப்பு, ``கொலையாளிகள் சிறையில் தள்ளப்பட வேண்டும்'' என்று பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்து, காச்சட்டுர்யன் சகோதரிகளை விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியது.
 
இந்த சகோதரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் change.org இணையதள கோரிக்கை மனுவுடன், ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை வாசிப்பு, பேரணிகள் மற்றும் அரங்க நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
 
ஜூன் மாதம் மூன்று நாள் பேரணிக்கு ஏற்பாடு செய்வதில் உதவி செய்தவர் மாஸ்கோவை சேர்ந்த பெண்ணியவாதி டாரியா செரென்கோ. இந்த விவரங்கள் தொடர்ந்து செய்தியில் இடம் பெற வேண்டும் என்பதும், பாதுகாப்பு குறித்து எல்லோரும் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் தான் இந்தப் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதன் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
 
``ரஷ்யாவில் குடும்ப வன்முறை என்பது வாழ்க்கையில் நிதர்சனமானது. அதை நாம் புறக்கணிக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் நமக்கு அந்த அனுபவம் இல்லாவிட்டாலும், அது நமது வாழ்வைப் பாதிக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் - அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்