Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்" - மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

, வியாழன், 23 ஜனவரி 2020 (21:19 IST)
மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டு மியான்மரில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்க தேசத்துக்கு தப்பிச்சென்றனர்.
 
இந்த இனப்படுகொலை நடவடிக்கைகள் மீண்டும் நிகழலாம் என ஐநா விசாரணையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 
ரோஹிஞ்சா மக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
ரக்கைன் மாகாணத்தில் இருந்த தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்கவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியான்மர் தரப்பு கூறி வந்தது.
 
சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சி, அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையங்களை, ரோஹிஞ்சா போராளிகள் தாக்கியதால் தூண்டப்பட்ட 'உள்நாட்டு மோதல்' என்று மியான்மரில் நடந்த வன்முறையை விவரித்திருந்தார்.
 
நீதிமன்றம் என்ன கூறியது?
 
மியான்மர் அரசாங்கத்துக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற அமர்வில் இருந்த 17 நீதிபதிகள் ஒருமனதாக உத்தரவு பிறப்பித்தனர். ரோஹிஞ்சாக்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இந்த உத்தரவை எவ்வாறு அமல் செய்தார்கள் என்பது குறித்து நான்கு மாதங்களுக்கு மியான்மர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அப்துல்கவி அஹமெத் யூசுஃப் தெரிவித்தார்.
 
 
சர்வதேச அளவில் ஆங் சான் சூச்சிக்கு இருந்த சிறியளவு மரியாதையையும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அழித்துவிட்டது.
 
ஆங் சான் சூச்சி
 
நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்று நேரில் ஆஜராக வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. எனினும், அவரே நேரில் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தார். எந்த கும்பல் கொலையும் பாலியல் வல்லுறவும் கலவரமும் நடைபெறவில்லை என்று வாதிட்டார்.
 
இதுவரை சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மியான்மர் பின்பற்றியுள்ளது. இனப்படுகொலை தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்ற உத்தரவும் பின்பற்றப்படுமா?
 
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குழுக்கள் மற்றும் ஐநா விசாரணை அதிகாரிகள் கூறிய "ஆதாரமற்ற விவரிப்புகளை" புறக்கணிக்கும் திறன் சர்வதேச நீதிமன்றத்துக்கு உள்ளதா என்று பிரிட்டன் செய்தித்தாள் ஒன்றில் எழுதிய ஆங் சான் சூச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தொடக்கத்தில் ஐநாவின் நீதிமன்றத்துடன் தொடர்பில் இருந்த ஆங் சான் சூச்சி தற்போது பின்வாங்குவாரா என்பது கேள்விக்குறியே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் நினைவிடம் எப்போது திறப்பு ?