இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெருமளவு அமைதியாக நடந்துவருவதாக கூறப்படும் இன்றைய வாக்குப்பதிவில் வாக்களிப்பதற்காக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஹபக்ஷ இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதவியை இழந்த ராஜபக்ஷ, தற்போதையத் தேர்தலில் தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக பிரதமர் பதவியைக் கைப்பற்ற முயல்கிறார்.
அதேசமயம், மகிந்த கட்சியைச் சேர்ந்தவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன, தனது கட்சி வெற்றி பெற்றால் மகிந்த பிரதமராவதை தான் தடுப்பேன் என்று எச்சரித்திருக்கிறார். ஒரு மாதகாலம் நீடித்த தேர்தல் பிரச்சாரத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் நான்குபேர் கொல்லப்பட்டனர். அதேசமயம், முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்தத்தேர்தலில் வன்முறைகள் குறைவாக இருந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் திங்களன்று இரவு முதலே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிடும்.
தேர்தல்: சில புள்ளிவிவரங்கள்
இன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இந்தத் தேர்தலில் 6 ஆயிரத்து 124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். 29 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிறார்கள்.
தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி 1 இலட்சத்து 95 ஆயிரம் அரச பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 75 ஆயிரம் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகம் கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் , காமன்வெல்த் நாடுகள் அமைப்பு , தெற்காசியத் தேர்தல் மேற்பார்வை ஒன்றியம் உட்பட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இந்தத் தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர கஃபே, பெஃப்ரல் உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.