Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் "நெகட்டிவ்" என வந்தாலும் மறுபரிசோதனை கட்டாயம் - இந்திய சுகாதாரத்துறை புதிய உத்தரவு

Advertiesment
BBC Tamil
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:21 IST)
கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு, ரேபிட் டெஸ்டுகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துவிட்டால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி உள்ளது.

பல பெரிய மாநிலங்கள் ஏற்கனவே இருக்கும் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை என்று இந்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு விஷயங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

1. காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்து, அந்த நபர்களுக்கு ரேபிட் டெஸ்டில் கொரோனா இல்லை (நெகட்டிவ்]) என்று முடிவு வந்தாலும், அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் மூலம் மறுபரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்

2. கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு ரேபிட் டெஸ்ட் எடுக்கப்பட்டு, தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகு, அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இருந்து, ஆனால் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வரும் பட்சத்தில் அவர்கள் வெளியே சென்று நோயை பரப்பும் வாய்ப்பை தவிர்க்க இந்த நடவடிக்கை கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

தவறாக "தொற்று இல்லை" என்று வரும் பட்சத்தில், பிசிஆர் டெஸ்டு எடுக்கப்பட்டால், நோயாளியை கண்டறிந்து அவர்களை முன்கூட்டியே தனிமைப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையை அதிகப்படுத்த, ரேபிட் டெஸ்டுகள் உதவினாலும், பிசிஆர் பரிசோதனை முடிவுகள்தான் சிறந்தது என்றும் ஐ.சி.எம். ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஒரு கண்காணிப்பு அமைப்பு (அதிகாரி அல்லது ஒரு குழு) ஒன்றை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாவா நடந்துக்குவார்னு நினைச்சேன்! மகளை சீரழித்த தந்தை! – தற்கொலைக்கு முயன்ற தாய்!