Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரெவி புயல்: நாளை குமரிக் கடல் பகுதிக்கு வருவதால் பலத்த மழை எச்சரிக்கை

Advertiesment
புரெவி புயல்: நாளை குமரிக் கடல் பகுதிக்கு வருவதால் பலத்த மழை எச்சரிக்கை
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் நாளை குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  செவ்வாய்க் கிழமை இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தப் புயல் இன்று பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர்  தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில்  இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய அதி கன மழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை வியாழக்கிழமையன்று சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய அதி கன மழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய  மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
இந்த புரெவி புயலால் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55  கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் இன்று மாலை முதல் நாளை காலை வரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்யுள்ளது.
 
தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நினைச்சதை விட ஸ்பீடா இருக்கே.. இன்றே கரையை கடக்கும் புரெவி!