Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைகோவ்-டி தடுப்பு மருந்து: கொரோனாவுக்கு எதிரான முதல் டி.என்.ஏ. தடுப்பு மருந்து!

Advertiesment
சைகோவ்-டி தடுப்பு மருந்து: கொரோனாவுக்கு எதிரான முதல் டி.என்.ஏ. தடுப்பு மருந்து!
, சனி, 3 ஜூலை 2021 (16:16 IST)
இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சைடஸ் கேடிலா தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் குழந்தைகளுக்காகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
'சைகோவ்-டி'-யின் அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (டி.ஜி. சி.ஐ) அனுமதி கோரப்பட்டுள்ளது.

webdunia
இந்தத் தடுப்பு மருந்து, அடுத்த சில வாரங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் ஒப்புதலைப் பெறலாம். இதன் மூலம் சைகோவ்-டி உலகின் முதல் டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்து என்ற பெருமையைப் பெறக்கூடும்.
 
கடந்த சனிக்கிழமையன்று இந்தத் தடுப்பு மருந்து வெளியாவது தொடர்பான தரவுகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தபின், ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சைகோவ்-டி தடுப்பு மருந்து கிடைக்கும் என்று இந்திய அரசு தெரிவித்தது.
 
இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், மொத்தம் 131 கோடி தடுப்பு மருந்து டோஸ்கள் இந்திய அரசிடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அரசாங்கம் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
 
இதில் 50 கோடி கோவிஷீல்ட், 40 கோடி கோவாக்சின், 30 கோடி பயோ-இ சப்யூனிட் தடுப்பூசி, 10 கோடி ஸ்பூட்னிக் வி மற்றும் 5 கோடி சைடஸ் கேடிலா டோஸ்கள் அடங்கும்.
 
கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் உள்ளிட்ட மூன்று தடுப்பூசிகளுக்கு தற்போது இந்திய அரசு அவசரகாலப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் அளித்துள்ளது.
webdunia
ஆனால் சைகோவ்-டி-க்கு ஒப்புதல் கிடைத்தால், நம்மிடம் நான்கு வகை தடுப்பு மருந்து கிடைக்கும். இவற்றில் இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தத் தடுப்பு மருந்தின் சிறப்பு என்ன?
டி.சி.ஜி.ஏ ஒப்புதல் பெறும் பட்சத்தில், சைகோவ்-டி தடுப்பு மருந்து, டி.என்.ஏ அடிப்படையிலான உலகின் முதல் தடுப்பு மருந்து என்ற பெருமையைப் பெறும். இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டுத் தடுப்பு மருந்தாகவும் இது இருக்கும்.
 
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷர்வில் படேல் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுடனான உரையாடலில் கூறியதாவது:
 
இது, 28000 தன்னார்வலர்களுக்கு அளித்து மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனையாகும்.
 
 இந்த மருத்துவப் பரிசோதனையில் 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினரும் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
· முக்கியமாக, இதைச் செலுத்த, ஊசி தேவையில்லை. இது ஒரு அடித்தோல் தடுப்பு மருந்து. தசைகளுக்கு ஊடாக இதைச் செலுத்த ஊசி தேவையில்லை. இதை செலுத்த ஸ்பிரிக் வைத்த ஒரு கருவி இருக்கும். அந்தக் கருவி மருந்தை சீராக தோலுக்கடியில் செலுத்தும்.
 
· இந்த தடுப்பூசியை 2 முதல் 8 ° C வரை அதிக காலத்துக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். 25 ° C வெப்ப நிலையில், நான்கு மாதங்களுக்கு வைத்திருக்கலாம்.
 
· புதிய திரிபு வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும்படி இதைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
· ஆரம்ப நாட்களில், ஒரு மாதத்தில் 1 கோடி டோஸ்கள் தயாரிக்கும் திட்டம் உள்ளது.
 
டி என் ஏ அடிப்படையிலான மருந்து?
சைகோவ்-டி என்பது டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்தாகும். இது உலக அளவில் மிகவும் பயனுள்ள தடுப்பு மருந்து தளமாகக் கருதப்படுகிறது.
 
ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி.எல் ஷெர்வால், இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையை விளக்குகிறார்.
 
"மனித உடலில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகிய இரண்டு வகையான வைரஸ்களின் தாக்குதல்கள் பற்றி பேசப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும், இது ஒற்றை இழை( Single Stranded) வைரஸ் ஆகும். டி.என்.ஏ இரட்டை இழையுடையது. ஒரு மனித உயிரணுவுக்குள் டி.என்.ஏ உள்ளது. எனவே நாம் அதை ஆர்.என்.ஏவிலிருந்து டி.என்.ஏவாக மாற்றும்போது, ​​அதன் நகலை உருவாக்குகிறோம். இதற்குப் பிறகு இது இரட்டை இழைகளாக மாறி, இறுதியாக அது டி.என்.ஏ வடிவத்தில் வடிவமைக்கப்படுகிறது.
 
டி.என்.ஏ வகை தடுப்பு மருந்து மிகவும் சக்திவாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பெரியம்மை முதல் ஹெர்பெஸ் போன்ற பிரச்சினைகளுக்கு இப்போது வரை டி.என்.ஏ தடுப்பூசி தான் வழங்கப்படுகிறது.
 
மூன்று டோஸ்கள் எதற்காக?
நிறுவனம் அளித்த தகவல்களின்படி, இந்தத் தடுப்பு மருந்து 28 நாட்கள் இடைவெளியில் மூன்று டோஸ்களில் வழங்கப்படும். இப்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் தான் வழங்கப்படுகின்றன.
 
இந்தியாவில் கொரோனா வைரஸ்: 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்
கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்? - சந்தேகங்களும், பதில்களும்
எனவே, இந்தத் தடுப்பு மருந்துக்கு இரண்டு டோஸ்களில் போதுமான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் திறன் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
 
மூன்று டோஸ்கள் பரிந்துரைக்கப்படுவதாலேயே, இதன் திறனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று டாக்டர் ஷெர்வால் கூறுகிறார்.
 
"தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு, அந்த நபருக்கு எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி கூடியுள்ளது என்பதைக் கண்டறிந்து, போதுமான திறன் உருவாகாத பட்சத்தில், இரண்டாவது மற்றும் மூன்றாவது அளவுகள் வழங்கப்படுகின்றன." என்று அவர் விளக்குகிறார்.
 
"முதல் டோசுக்குப் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்கள் பூஸ்டர்களாகச் செயல்படுகின்றன. இதனால் ஆண்டிபாடிகள் எனப்படும் எதிர்ப்பான்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். இதனால் நீண்ட காலத்திற்கு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது என் கருத்து" என்று அவர் விவரிக்கிறார்.
 
எப்போது கிடைக்கும்?
 
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் தேர்வுகளுக்கும் இடையிலான சிக்கலான சூழலில் பல கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடி வரும் நேரத்தில் இந்தத் தடுப்பு மருந்து வருகிறது.
 
பட்டய கணக்கியல் தேர்வில் தனிப்பட்ட வகையில், மாணவர்களின் அல்லது குடும்பத்தாரின் கோவிட் பாதிப்புக்கேற்ப, விலக்களிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
 
ஆனால் இதற்கு முன்னர், சிபிஎஸ்இ உள்ளிட்ட பல கல்வி வாரியங்களும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் கூட, கோடிக்கணக்கான குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளையே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
 
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இல்லாதது இதற்கு ஒரு காரணம். இது மட்டுமல்லாமல், இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 14 கோடி என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த வயதினருக்கான தடுப்பூசி எப்போது வரும் என்ற கேள்வி எழுகிறது.
 
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. உடன் பேசிய, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, இந்தத் தடுப்பூசியின் சோதனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
 
"சைடஸ் கேடிலாவின் சோதனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக நாங்கள் அறிகிறோம். அதன் முடிவுகளை சேகரித்து அவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கும் செயல்முறை, நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். ஜூலை இறுதிக்குள் அல்லது ஆகஸ்டு மாதத்தில், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார்கோள் தடுப்பணை… இந்திய கம்யுனீஸ்ட் கட்சி கண்டனம்!