Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை

Advertiesment
இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை
, சனி, 10 ஏப்ரல் 2021 (15:45 IST)
தன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் அவர்.
 
ஆகவே இரு-பரிமாணச் சித்தரிப்புகளை மட்டுமே நாம் எடின்பரோ கோமகனை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. கடுமையான சொற்களை வீசும் நாவையும், முன்கோபத்தையும் கொண்டவர். எரிச்சலூட்டும் ஜோக்குகளைக் கூறிய மனிதர், அரசியல் ரீதியாகத் துல்லியமற்ற கருத்துகளைக் கூறியவர். எங்கும் எப்போதும் இருக்கும் விசித்திரமான பெரிய மனிதர். அவர் மீது மக்களுக்கு எப்போதும் பாசம் உண்டு. தன்னையும் சுற்றியிருக்கும் பிறரையும் சங்கடப்படுத்தியவர். இவைதான் அவை.
 
அவரது மரணம், இவை அனைத்தையும் மறு பரிசீலனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஏனென்றால் இளவரசர் ஃபிலிப் தனிச்சிறப்பாக வாழ்ந்த, அசாதாரணமான மனிதர். கரடுமுரடான சம்பவங்கள் நிறைந்த இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மாற்றங்களுடன் தொடர்புடைய வாழ்க்கை அவருடையது. தனிமையையும் முரண்களையும் கொண்டது. அவர் ஓர் ஆழமான, புத்திசாலித்தனமான, உள்ளுக்குள் நீடித்த அமைதியில்லாத மனிதர்.
 
அவரது அன்னையும் தந்தையும் 1901-ஆம் ஆண்டு விக்டோரியா அரசியின் இறுதிச் சடங்கில் சந்தித்துக் கொண்டார்கள். அது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் முடியாட்சியின் கீழ் இருந்த காலம். ஐரோப்பாவின் அரச குடும்பங்களில் அவரது உறவினர்கள் பரவியிருந்தார்கள். முதலாம் உலகப் போரில் பல அரச குடும்பங்கள் அழிந்து போயின. ஆயினும் இளவரசர் பிலிப் பிறந்த உலகம் முடியாட்சியைக் கொண்டது. அவரது தாத்தா கிரீஸ் நாட்டின் மன்னர். அவரது பாட்டி எல்லா ரஷ்ய ஜார் மன்னருடன் போல்ஸ்விக்குகளால் கொல்லப்பட்டார். அவரது தாயார் அரசி விக்டோரியாவின் கொள்ளுப் பேத்தி.
 
இளவரசர் பிலிப்பின் நான்கு மூத்த சகோதரிகளும் ஜெர்மானியர்களை மணந்து கொண்டவர்கள். பிரிட்டனுக்காக கடற்படையில் சேர்ந்து இளவரசர் ஃபிலிப் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது மூன்று சகோதரிகள் நாஜிக்களுக்கு ஆதரவளித்து வந்தனர். அவரது மணவிழாவுக்கு யாரும் அழைக்கப்படவில்லை.
 
அமைதி திரும்பி, உலகம் பொருளாதார ரீதியாக மீட்சியடைந்து கொண்டிருந்தபோது, பிரிட்டனின் மறுகட்டமைப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசர் ஃபிலிப். அறிவியல் முறைகளை கடைப்பிடிக்கவும், தொழில், திட்டமிடல், கல்வி, பயிற்சி ஆகியவற்றை பொலிவாக்கவும் வலியுறுத்தினார். தொழில்நுட்பப் புரட்சி பற்றி ஹரோல்ட் வில்சன் கூறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தனது உரைகளிலும் நேர்காணல்களிலும் நவீனத்துவத்தை வலியுறுத்தியவர் ஃபிலிப். சுற்றுச்சூழல் பற்றிப் பேசுவது இப்போது நாகரிகம். ஆனால் உலகத்தில் பணம் செழித்து, நுகர்வு அதிகரித்தபோதே சுற்றுச்சூழல் பற்றி ஃபிலிப் எச்சரித்தார்.
 
ஃபிலிப் வாழ்வின் முதல் பத்தாண்டுகள் கலக்கமானவை. பள்ளியில் அவரது வாழ்வு புதிய வடிவு பெற்றது. அவரது பிறந்த பூமி அவரை வெளியேற்றியது. குடும்பம் சிதறியது. தனக்குச் சொந்தமே இல்லாத ஒவ்வொரு நாடாக குடிபெயர்ந்தார். சொந்த ஊரான கிரீஸ் நாட்டின் கோர்ஃபு தீவில் அவரின் தாத்தா கொல்லப்பட்டபோது, பிரிட்டனின் போர்க்கப்பல் ஒன்று அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்போது அவருக்கு ஒரு வயது. இத்தாலியில் கொண்டுபோய் விடப்பட்டார். ரயில் பெட்டியின் தரையில் தவழ்ந்தபடியே அவரது முதலாவது சர்வதேசப் பயணங்களுள் ஒன்று அமைந்தது. "பிரிந்திசி நகரின் இரவு நேரத்தில் பாழடைந்த ரயிலில் அழுக்கான குழந்தையாக மீட்கப்பட்டார்" என்று அந்தச் சம்பவம் குறித்து அவரது சகோதரி சோஃபியா பின்னாளில் நினைவுகூர்ந்தார்.
 
பாரிஸ் நகரில் உறவினர் ஒருவரால் கடனாகப் பெறப்பட்ட வீட்டில் ஃபிலிப் வாழ்ந்தார். ஆனால் அது அவரது வீடாக நீண்டகாலம் இருக்கவில்லை. ஓராண்டில் பிரிட்டனில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அவரது தாயார் இளவரசி அலைஸின் மனநலம் மோசமடைந்து கொண்டிருந்தது. மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தந்தை இளவரசர் ஆண்ட்ரூ தனது இணையருடன் மான்டி கார்லோவுக்குப் போய்விட்டார். நான்கு சகோதரிகளும் திருமணம் செய்து கொண்டு ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார்கள். கிரீஸ் நாட்டின் இளவரசராக இருந்தவர், பத்தே ஆண்டுகளில் வீதிகளில் சுற்றித் திரியும், வீடற்ற, காசில்லாத, கவனிப்பதற்கு ஆளற்ற சிறுவனாக மாறிப்போனார்.
 
"எனக்கு ஒரு தந்தை இருந்தார் என்றே யாரும் நினைக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்" என்று ஒரு முறை ஃபிலிப் கூறினார். தந்தை ஆண்ட்ரூ போரில் இறந்துபோனார். அவரது உடைமைகளை பெறுவதற்காக மான்டி கார்லோவுக்கு ஃபிலிப் சென்றார். அங்கு சில ஆடைகளையும், பிரஷ்களையும் தவிர வேறெதுவும் இல்லை.
 
ஸ்காட்லாந்தில் உள்ள கோர்டன்ஸ்டவுன் பள்ளியில் அவர் சேர்ந்தபோது, ஒரு முரடான, சுதந்திரமான, தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் திறன் கொண்டவராக மாறியிருந்தார். இந்தப் பண்புகளை சமூக சேவை, குழுப் பணி, பொறுப்பு, மரியாதை என பொலிவேற்றியது கோர்டன்ஸ்டவுன். அவரது வாழ்வின் மற்றொரு மாபெரும் வேட்கையையும் அது வெளிக்கொண்டுவந்தது. அது கடல் மீதான தீராக் காதல்.
 
தனது மகன் சார்லஸ் எந்த அளவுக்கு பள்ளி மீது வெறுப்புக் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு காதல் கொண்டிருந்தவர் ஃபிலிப். அவர் மாபெரும் விளையாட்டு வீரர். பள்ளியின் நிறுவனரான கர்ட் ஹான் வகுத்தளித்த விளையாட்டுகளுக்கான நெறிமுறைகளே ஃபிலிப்பை வீரராக்கின.
 
ராயல் நேவியில் இளம் வயதில் முதல் லெஃப்டினென்டாக இருந்தவர் இளவரசர் ஃபிலிப்
 
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அவர் தனது பணியை விடுத்து தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்தார்.
 
கர்ட் ஹானின் நெறிகள் ஃபிலிப்பின் வாழ்வில் முக்கியத்துவம் கொண்டவையாக மாறின. வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தின. பின்னாளில் அவரது உரைகள் வழியாக இவை வெளிப்பட்டன. "ஒழுக்கமும் சுய கட்டுப்பாடுமே விடுதலையின் சாரம்" என 1958-ஆம் ஆண்டில் உரையாற்றியபோது ஃபிலிப் கூறினார். உலகப் போர்கள் முடிந்த பிறகான சொகுசு வாழ்க்கையிலேயே மனித மனங்கள் ஊறிவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் பள்ளிகளுக்கான அமைப்பில் பேசினார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தனிமனிதருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே சமூகத்தை வழிநடத்தும் கொள்கை" என்று இப்ஸ்விச் பள்ளியில் பேசினார்.
 
பிரிட்டன் மற்றும் லிபரல் ஜனநாயகம் கொண்ட நாடுகளையும் சர்வாதிகார நாடுகளையும் வெவ்வேறாகப்பார்த்தார் கர்ட் ஹான். அவர் தனிமனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தினார். அதைப் பின்பற்றிய ஃபிலிப் தனது கொள்கையின் மையமாகவே அதை மாற்றிக்கொண்டார்.
 
கடற்படையில் பணியாற்றியபோதும், பல ஆண்டுகாலம் அரண்மணை வாழக்கையின்போதும் மரபுகளுக்கும், அதிகார வரிசைக்கும் உறுதியான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்.
 
1939-ஆம் ஆண்டு டார்ட்மவுத் கடற்படைக் கல்லூரியில் அவரது வாழ்க்கையின் இரண்டு பெரிய வேட்கைகள் மோதிக்கொண்டன. கோர்டன்ஸ்டவுனில் அவர் கடற்பயணத்தைக் கற்றுக்கொண்டார். வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையே அவரைப் பற்றிக் கொண்டது. டார்ட்மவுத்தில் அவர் தலைமையேற்கக் கற்றுக் கொண்டார். கல்லூரியில் பல கடற்படை வீரர்களுக்குப் பிறகே சேர்ந்தாலும் 1940ஆம் ஆண்டில் படிப்பை முடித்தபோது தனது வகுப்பில் முதலாவதாக வந்தார். பிரிட்டன் கடற்படையில் இளம் லெப்டினென்ட்களுள் ஒருவராக உருவெடுத்தார்.
 
மன்னர் ஆறாம் ஜார்ஜ் கடற்படை கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டபோது தன்னுடன் இளவரசி எலிசபெத்தையும் அழைத்துவந்தார். இளவரசியைக் கவனித்துக் கொள்ளும் பணி ஃபிலிப்புக்கு வழங்கப்பட்டது. ஃபிலிப்புக்கு மணிமுடி இல்லை. ஆனாலும் அரச குடும்பத்து ரத்தம் அவருடையது. தன்னம்பிக்கை கொண்டவராகவும் கவரக்கூடியவாகவும் இருந்தார். அழகாகவும், கொஞ்சம் தீவிரச் சிந்தனை கொண்டவராகவும் இருந்த இளவரசி எலிசபெத் கவரப்பட்டார்.
 
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் எச்எம்எஸ் சர்ச்சிலில் இளவரசர் ஃபிலிப்
 
தனக்கு ஆர்வமுள்ள பல துறைகளில் வருடத்திற்கு 60 - 80 உரைகள் வரை நிகழ்த்தினார் இளவரசர் ஃபிலிப்
 
அது இளவசர் ஃபிலிப்பின் பெரு வேட்கைகள் இரண்டும் மோதிக்கொண்ட நேரம். காதல் கொண்ட கடலையும், இளம் பெண்ணையும் ஒரு சேரக் கைக்கொள்ள இயலுமா என்ற கேள்வி எழுந்தது. 1948-ஆம் ஆண்டு அவர்களது திருமணம் முடிந்த சில காலத்தில் இரண்டும் அவருக்குக் கிடைத்திருந்தது. புதுமணத் தம்பதிகள் மால்டாவுக்குச் சென்றபோது அங்கு கப்பலை வழிநடத்தும் பணி ஃபிலிப்புக்கு கிடைத்தது. சில ஆண்டுகள் மகிழ்ச்சியாகக் கழிந்தன. மன்னர் ஆறாம் ஜார்ஜின் உடல் நலக்குறைவும் மரணமும் அந்த மகிழ்ச்சியை சட்டென முடிவுக்குக் கொண்டு வந்தன.
 
ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தம்பதிகள் கென்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள். அப்போதுதான் மன்னரின் மரணச் செய்தி அவர்களுக்கு எட்டியது. அதன் பொருள் அவருக்குப் புரிந்தது. மன்னரின் இடத்தில் இளவரசி எலிசபெத் இருக்கப் போகிறார். செய்தியைச் சொன்ன உதவியாளர் மைக் பார்க்கரிடம் எல்லாம் இடிந்து தலையில் விழுவது போல் இருப்பதாகச் சொன்னார். நாற்காலியில் சோர்ந்து உட்கார்ந்தார். அவரது இளவரசி இப்போது அரசி. அவரது உலகம் மீட்சியடைய முடியாதபடி மாறிப்போனது. கடற்படை பணியை கைவிட்டது ஃபிலிப்புக்கு மிகப்பெரிய இழப்பு என்று கடற்படையின் முன்னாள் தலைவரான லார்ட் வெஸ்ட் ஒரு முறை கூறினார்.
 
இளவரசி அரசியான நொடியில் ஃபிலிப்பின் வாழ்க்கையில் மற்றொரு முரண் வெளிப்பட்டது. ஃபிலிப் பிறந்ததும் வளர்ந்ததும் ஆண்கள் நிறைந்திருந்த சூழலில். சார்லஸ் பிறந்தபோதுகூட ஆண்மையைப் போற்றிப் பேசியிருந்தார். ஆனால் அடுத்த 65 ஆண்டுகள் மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
மனைவிக்குப் பின்னால் நடக்க வேண்டும். வேலையை விட்டுவிட வேண்டும். மணிமுடி ஏற்கும் நிகழ்வின்போது அரசியின் முன் மண்டியிட வேண்டும். குழந்தைகள் தனது குடும்ப பெயரான மவுண்ட்பேட்டன் என்பதை வைத்துக் கொள்ள முடியாது. "நான் ஒன்றுமில்லை, வெறும் அமீபா" என்று ஃபிலிப் கூற நேர்ந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாது. அவர் அரசி. ஃபிலிப் அவரது கணவர்.
 
அரண்மனை வாழ்க்கையில் நடந்த மாற்றம் கருணையற்றது. புறக்கணிப்பு, கண்ணியக்குறைவு போன்றவையெல்லாம் அவருக்கு நேர்ந்தன. மாற்றத்தை அவரால் ஏற்றுற்கொள்வது கடினமாக, அசௌரியமாக உணர்ந்தார். நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பதைப்போலப் பலரும் பார்த்தார்கள்.
 
ஆனால் ஃபிலிப்பின் எதிர்வினை வேறுமாதிரியாக இருந்தது. அரசி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் துணையாகச் சென்றார் ஃபிலிப். சில நேரங்களில் தன்னுடைய விருப்பத்துக்காக பயணங்களை மேற்கொண்டார். அப்போதெல்லாம் அரசி அவருக்குத் துணையாகச் சென்றார். வேறு சில நேரங்களில் ஃபிலிப் தனியாகப் பயணம் மேற்கொண்டார். 1950-களிலும் 1960-களிலும் காலனி நாடுகளுக்கு விடுதலை அளிக்கும் முடிவை எடுத்தது அரசி அல்ல. ஃபிலிப்.
 
கிரிக்கெட், ஸ்குவாஷ், போலோ விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் ஃபிலிப். நீச்சல், படகு, குதிரையேற்றம் ஆகியவற்றிலும் திறமையானவர். விமானங்களை இயக்கப் பயிற்சி பெற்றார். புகைப்படங்களை எடுப்பதில் வல்லவர்.
 
அரண்மணைக்குள் அவர் ஒரு நவீனவாதி. முற்றத்தில் இருந்து நிலவறை வரைக்கும் சென்று வருவார். யார் என்ன செய்கிறார் என்பதைக் கண்டறிய முனைவார். சண்டிரிங்ஹாம் எஸ்டேட்டின் நிர்வாகத்தை கையிலெடுத்து, அதைக் கணிசமாக மேம்படுத்தினார்.
 
இளமையானவர், கவரக்கூடியவர். புன்னகையுடன், நகைச்சுவையாகப் பேசுவார். கேமராக்கள் முன்னிலையில் எளிமையாகத் தோன்றுவார். 1950-ஆம் ஆண்டில் சிறுவர்கள் கிளப் ஒன்றுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படத்தில் அகன்ற சிரிப்பைக் கொண்டிருந்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள அவரது படிக்கும் அறை தோட்டத்தை நோக்கியிருக்கும். ஆயிரக்கணக்கான புத்தகங்களும் தாம் இயக்கிய எச்எம்எஸ் மேக்பை கப்பலின் மாதிரியும் அங்கு உண்டு. தாமே ஆய்வு செய்து உரைகளைத் தயாரித்துக் கொள்வார். ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு வகையான தலைப்புகளில் 60 முதல் 70 இடங்களில் உரையாற்றுவார்.
 
நவீன சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் அவர் ஒரு கன்சர்வேட்டிவ். நகரமயமாக்குதலை விமர்சிப்பவர். அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். "இயற்கையை அறிவற்ற முறையில் சுரண்டுவது" குறித்து எச்சரித்தவர். இன்று அதிகமாகப் பேசப்படும் கார்பன் வெளியேற்றம், பசுமை இல்ல விளைவு குறித்து 1982-ஆம் ஆண்டிலேயே பேசினார் ஃபிலிப்.
 
பெரும்பாலான நேரங்களில் தம்மைத் தாழ்த்திக் கொள்வார். பல உரைகள் சுவாரஸ்யமற்ற வெற்று மரபு என்பது அவருக்குத் தெரியும். அதனால் பார்வையாளர்கள் தம் மூலமாகச் சிரித்துக் கொள்ள அனுமதிப்பார்.
 
அவரது வாழ்க்கை மற்றொரு முரண்பாட்டைக் கொண்டது. பிறர் எப்படி வாழ வேண்டும், நெறிகொண்ட வாழ்வை எப்படி அடைவது, மக்களின் விருப்பங்களை அரசும் சமூகமும் எப்படி முறைப்படுத்த வேண்டும் என்பனவற்றில் அக்கறை கொண்ட ஒருவர், சுவாரஸ்யமற்ற மனிதராக சித்தரிக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.
 
அவர் கரடு முரடானவராகவும் அதிர்ச்சியளிப்பவராகவும் இருந்திருக்கலாம். இரட்டை வேகத்தில் எல்லாம் நடந்து முடிய வேண்டும் என்ற பொறுமையின்மை அதில் ஒன்று. செவித்திறன் குறைபாடு மற்றொன்று. அது அவரது தாயிடம் இருந்து வந்தது. ஆனால் மற்றவையெல்லாம் கண்மூடித்தனமாக அவர் மீது கொட்டப்பட்டவை.
 
கடந்த பல தசாப்தங்களில் இரு முக்கிய வேறுபாடுகள் தென்படுகின்றன. அமைதியான தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அனைவருக்கும் தெரியும் பொதுவாழ்க்கைக்கும் இடையிலானது முதல் வேறுபாடு. உறவினர்கள், பள்ளிகள், நாடுகள் என அலைக்கழிக்கப்பட்ட ஒரு சிறுவன் திடீரென தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளிக்கு மறைக்கக் கற்றுக்கொணடான். ஆனால் அரண்மனையில் நடக்கும் அனைத்தும் உலகத்தின் பார்வைக்குத் தெரியக்கூடியது.
 
மற்றொரு முரண் அவரது விறுவிறுப்பாக இயங்கும் பொது வாழ்க்கைக்கும் தனிமைக்கும் இடையிலானது. அவருக்கு குடும்பம் இருந்திருந்தாலும், யாரும் அவருடன் இருக்கவில்லை. மிகக் குறைவான நண்பர்கள். அதிக நண்பர்கள் வாய்க்கவில்லை என சுயசரிதையை எழுதிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வெளியாட்களை அனுமதிக்காத வகையிலான கூண்டு போன்றது அரண்மனை.
 
அவரது தனிமை விருப்பம், அவரது பதவி, அவரையறிந்த பெரும்பாலானவர்கள் இல்லை ஆகிய காரணங்களால் அவரைப் பற்றிய புரிதல் என்பது எப்போதும் நிறைவடையாது. ஆனால் இப்படிப்பட்ட மனிதர் என்பதால்தான் முரண்களும் வேறுபாடுகளும் வந்திருக்கின்றன.
 
கடந்த காலங்களில் இளவரசரின் மூத்த மகனுடனான அவரின் உறவு மேம்பட்டது
 
உங்களது வாழ்க்கை எதற்கானது என்று அவரிடம் ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அரசிக்கு உதவியாக இருக்கவா, நிச்சயமாக, நிச்சயமாக என்று பதலளித்தார் ஃபிலிப். தாம் தலைவராக உருவெடுக்கும் திறன் இருந்தும், ஒருபோதும் தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. தன்னுடைய சாதனைகளைப் பற்றியும் அதிகமாகப் பேசியதில்லை.
 
1948-ஆம் ஆண்டு லண்டனின் விடுதலை விருதைப் பெற்றுக்கொண்டு அவர் பேசியது இதுதான். "நாம் எதை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதோ அதையே செய்தோம். நம்மால் முடிந்த அளவுக்கு. தொடர்ந்து அதையே செய்கிறோம்"

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் காதலியைப் புகைப்படம் காட்டி மிரட்டிய மாணவர்… பதிலுக்கு மாணவி என்ன செய்தார் தெரியுமா?