Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் ஹஸ்ஸன் டியாப் அரசு கூண்டோடு விலகல்

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை துறைமுக ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசு கூண்டோடு பதவி விலகியிருக்கிறது.
 
இது தொடர்பாக பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை கூடி விவாதித்தது.
 
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
முன்னதாக, லெபனான் நீதித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் உள்பட அனைவரும் முறைப்படி பதவி விலகும் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்தனர்.
 
இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார்.
 
இதற்கிடையே, லெபனான் விவகாரம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் காணொளி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், லெபானனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குச் சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
மக்கள் போராட்டம்
 
பெய்ரூட் துறைமுக பகுதியில் 2,750 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம், ஆறு ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில், ஆளும் அரசு அலட்சியமாக இருந்ததும் ஊழல் நடந்ததாகவும் கூறி மக்கள் கடந்த ஆறு நாட்களாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
 
பல இடங்களில் அரசுத்துறை அலுவலகங்கள், அமைச்சகங்களுக்குள் புகுந்த பொதுமக்கள், அவற்றின் வளாகங்களை சேதப்படுத்தினார்கள். தலைநகர் பெய்ரூட்டில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையாக மோதல்கள் நடந்தன.
 
இந்த நிலையில், பிரதமர் ஹஸ்ஸன் டியாபின் அரசு கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை இரவு வெளிவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments