காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டிய மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து இருக்கும் என்றும் தொடர்ந்து மாசுபட்ட சூழல் நீடித்தால் குழந்தையின் வளர்ச்சி தடைபடும் வாய்ப்புள்ளது என்றும் தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குனர் மகிழ்மாறன் தெரிவிக்கிறார்.
சென்னையிலும் சமீப நாட்களில் வழக்கத்துக்கும் அதிகமான அளவு காற்று மாசு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால், காற்றில் உள்ள மாசை உண்டாக்கும் துகள்கள் கலையாமல், மாசை அதிகரிக்கச் செய்கின்றன என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சில ஊடங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் நிலவிவரும் மாசுபாடு ஏற்கனவே நோயாளியாக இருப்பவர்களை மேலும் மோசமாக பாதிக்கும் என்றாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு இந்த மாசுபாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் மகிழ்மாறன்.
டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரத்தில் வசிப்பது ஒரு 'கேஸ் சேம்பரில்' இருப்பதுபோல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிடுகிறார்கள். அந்த நகரத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.
''குழந்தைகளுக்கு உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். தாய் சுவாசிப்பதில் இருந்து தனக்கான காற்றை கருவில் உள்ள குழந்தை எடுத்துக்கொள்ளும். அந்த காற்றில் மாசுபாடு அதிகம் இருந்தால்,அந்த குழந்தைக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால், பிறக்கும் குழந்தையின், அளவு சிறியதாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த குழந்தையின் வளர்ச்சி தடைபடும்,''என்கிறார் அவர்.
முகமூடி அணிந்துகொள்வதாலோ, காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை வீட்டில் வைத்துக்கொள்வதாலோ காற்று மாசுபாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்து நிலவுவது பற்றி கேட்டபோது, ''முகமூடி அணிந்துகொள்வது, வீட்டில் சுத்திகரிப்பு இயந்திரம் வைத்துக்கொள்வது எல்லாம் இரண்டாம் கட்ட உதவியாகத்தான் இருக்கும். முடிந்தவரை வெளியில் அதிகம் செல்லாமல் இருப்பது நல்லது. இயந்திரம் மூலம் முழுமையாக தூய்மையான காற்றை பெறமுடியுமா என்பது சந்தேகம்தான். அந்த இயந்திரம் எவ்வளவு கொள்ளளவு காற்றை சுத்தப்படுத்திக் கொடுக்கும், அது வீட்டு அறையின் அளவுக்கு பொருத்தமானதா என்பதைப் பார்க்கவேண்டும். ஆனாலும்கூட, இயந்திரம் தீர்வல்ல,''என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.
முகமூடி அணிபவர்கள் முகத்தின் அளவுக்கு ஏற்றவாறு அணிகிறார்களா, அதனை தூய்மையாக வைத்திருக்கிறார்களா என்பது முக்கியம் என்கிறார். ''குறைந்தபட்சம் சத்தான உணவுகளை, காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். காரட், முட்டைகோஸ் போல வண்ணமான காய்கறிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்வதை குறைப்பது போன்றவற்றை செய்யலாம். அடுத்த ஆண்டாவது இந்த மாசுபாடு ஏற்படுவதை தடுப்பது மட்டும்தான் ஒரே தீர்வு,''என்கிறார் மகிழ்மாறன்.
காற்றில் தூசியின் அளவானது 100குள் இருந்தால், பிரச்சனை இல்லை என்றும் 100 முதல் 200ஆக இருந்தால், குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ''தற்போது டெல்லியில் மாசுபாட்டின் அளவு 400கும் மேலாக உள்ளது என்பது மோசமான அளவு. அதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாசுபட்ட காற்றில் உள்ள தூசியை தொடர்ந்து சுவாசித்தால், நோயாளியாக இல்லாதவர்களுக்கு கூட, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகவாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் சிரமப்படுவார்கள், வயதானவர்களின் உடல் உறுப்புக்கள் ஏற்கனவே சத்து குறைந்திருக்கும் என்பதால், இந்த ஆபத்தான அளவு அவர்களுக்கு மேலும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும்,'' என்கிறார் மகிழ்மாறன்.