Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாகரன் உயிருடன் இல்லை! - பழ. நெடுமாறன் கூற்றை மறுக்கும் இலங்கை ராணுவம்

Prabhakaran
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (14:46 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் முதலில் வாசித்தார்.

"தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஓர் அறிவிப்பை ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

சர்வேதச சூழலும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி, இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்," என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
webdunia

இதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் வெளிப்படுவார். மனைவி, மகள் நலமுடன் இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

இவ்வளவு நாள் கழித்து இதை அறிவிக்க என்ன காரணம் என செய்தியாளர்கள் கேட்டபோது, "சர்வதேச சூழல் தற்போது கனிந்திருக்கிறது. எந்த சிங்கள மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் உட்கார வைத்தார்களோ, அதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்து போராடி அவருடைய ஆட்சியை வீழ்த்தியிருக்கிறார்கள்.

சிங்கள மக்களுக்கு இப்போதுதான் உண்மைகள் புரியத் துவங்கியிருக்கிறது. இதைவிட நல்ல சூழல் என்ன இருக்க முடியும்?" என்றார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் மறுப்பு

ஆனால், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறத்த செய்திகளை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் கேட்டபோது, "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக" தெரிவித்தார்.

மேலும், "2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.

குறித்த தேதியில் பிரபாகரனை கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்களை வெளியிடுகின்றார்கள்.

இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை," என்று பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் சில நாட்களுக்கு முன்பாக தொடர்புகொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இன்று தஞ்சாவூரில், பழ. நெடுமாறன் தலைமையில் ஈழத்திற்கு ஆதரவாக உள்ள தமிழ்நாட்டு தலைவர்களை ஒன்று திரட்டி செய்தியாளர்களைச் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

இந்த ஏற்பாடுகள் ஞாயிற்றுக்கிழமையன்று உச்சகட்டத்தை எட்டின. ஆனால், பிரபாகரன் குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், பல தலைவர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.. எப்புட்றா..? இந்த விமானத்துல பிசினஸ் க்ளாஸே கிடையாதே!? – பயணிக்கு நேர்ந்த குழப்பம்!