Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது?

Advertiesment
Paluvetaraiyarkal
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:04 IST)
பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட்.

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் என்ற இரு கதாநாயக பாத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் இரண்டு பாத்திரங்கள் பழுவேட்டரையரின் பாத்திரங்கள்தான். சின்னப் பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் என இந்த பாத்திரங்கள் நாவலில் குறிப்பிடப்படுகின்றன.

பழுவேட்டரையர் என்ற சிற்றரச வம்சத்தினர், நீண்ட காலமாகவே சோழ வம்சத்தினருக்கு யுத்தங்களில் துணையாக இருந்ததாக கல்கி தனது நாவலில் குறிப்பிடுகிறார். பிற்காலச் சோழ வம்சத்தைத் துவக்கிவைத்த விஜயாலயச் சோழன் திருப்புறம்பியத்தில் போரிட்டபோது, அவருக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவராக ஒரு பழுவேட்டரையர் கல்கியால் குறிப்பிடப்படுகிறார்.

விஜயாலயச் சோழனுக்கு அடுத்த வந்த ஆதித்த சோழன், முடிசூட்டும்போது தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். அந்த ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ மன்னனான அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர் என்கிறார் கல்கி.


அதேபோல, பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்களாகவும் அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்களாகவும் பழுவேட்டரையர்கள் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்கள் சோழ வம்சத்தோடு நெருங்கிய திருமண உறவும் கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் ஒருவரின் மகளை பராந்தகச் சோழன் திருமணம் செய்திருக்கிறார். அதேபோல, ராஜராஜ சோழனுக்கு முன்பிருந்த உத்தம சோழனும் பழுவேட்டரையர் ஒருவரின் மகளை மணந்திருக்கிறார்.
webdunia

பொன்னியின் செல்வனில் சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில் இரு பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் பெரிய பழுவேட்டரையர் எனப்படும் கண்டன் அமுதனார்.

இவர் சோழ நாட்டுத் தனாதிகாரியாகவும் சுங்க வரி விதிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளைய ராணியாக்கியதாக நாவல் கூறுகிறது.

அடுத்தவர், காலாந்தகக் கண்டர் எனப்படும் சின்ன பழுவேட்டரையர். இவர் தஞ்சாவூர் கோட்டையின் தளபதியாக இருந்தார். தஞ்சை அரண்மனை பொக்கிஷமும், தானிய அறையும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. பாதாளச் சிறை ஒன்றையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் அவர் நிர்வகித்து வந்தார் என்கிறது நாவல்.

ஆனால், உண்மையில் பழுவேட்டரையர்கள் எனப்படும் சிற்றரசர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்?

பழுவேட்டரையர்களைப் பற்றி அறிய அன்பில் செப்பேடுகளும் பழுவூரில் உள்ள கோவில்களில் இருந்து கிடைக்கும் ஆதித்த சோழன் காலத்து கல்வெட்டுகளும் உதவுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும் வேறு சில லால்குடி, திருப்பழனம், திருவையாறு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இந்தப் பழுவேட்டரையர்கள் முதலாம் ஆதித்த சோழனின் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரையில் தற்போதைய அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியினை பழுவூர் நாடு என்ற பெயரில் சிற்றரசர்களாக இருந்து ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.

தற்போது இந்தப் பழுவூர் நாடு, அரியலூரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் தெற்கிலும் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் சுமார் 54 கி.மீ. தூரத்திலும் மேலப் பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என மூன்று சிறு பகுதிகளாக அமைந்திருக்கிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் சோழப் பேரரசில் செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர்களின் அரண்மனை, மாளிகை எனக் குறிப்படக்கூடிய எதுவும் இந்தப் பகுதியில் தற்போது இல்லை.
webdunia

ஆனால், பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் காலத்து கோவில் கட்டடக் கலைக்கு இந்தக் கோவில்கள் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றன.

கீழப்பழுவூரின் பிரதானமான பகுதியில் ஆலந்துறையார் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் சுவர்களில் இருந்து இருபத்து மூன்று சோழர் கால கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு நாழி அரிசிக்கு இரண்டு மா நிலம் தரப்பட்டது, திருமஞ்சனத்திற்கு 50 காசு தானம் தரப்பட்டது, நிலக்கிரயம், விளக்குதானம், நித்திய படிதானம், செப்புப் பத்திர தானம், விளக்குக்காக இரண்டு கழஞ்சு தானம் ஆகிய செய்திகளை இந்தக் கல்வெட்டுகள் தருகின்றன.
 

ALSO READ: ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் கதையும், உண்மையும்..!

இந்தக் கோவில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகக் கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் இந்தக் கோவில் பாடப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய காலத்தில் செங்கலால் கட்டப்பட்டிருந்த இந்தக் கோவில் மறவன் கண்டன் பழுவேட்டரையரால் 9ஆம் நூற்றாண்டில் கற்கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது.

கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்டத்தில் அமைந்திருக்கும் சிற்பங்கள் பிற்காலச் சோழர் கால கோவில் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றன.

இதற்கு அருகிலேயே வலதுபுறத்தில் சிதிலமடைந்த நிலையில், மறவனீஸ்வரர் கோவில் காணப்படுகிறது. இதுவும் 9 - 10ஆம் நூற்றாண்டுக் கோவில் கட்டுமானத்தைச் சேர்ந்தது. அந்தக் கோவிலுக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருக்கிறது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. முற்காலச் சோழர் காலத்து கல்வெட்டுகளும் இங்கே கிடைக்கின்றன. இதுவும் பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோவில்தான்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கிறது கீழையூர். இங்குள்ள இரட்டைக் கோவில்கள் பழுவூர் அரசர்கள் காலத்து கட்டடக் கலைக்கு துல்லியமான சாட்சியாக விளங்குகின்றன. அவனி கந்தர்வ ஈஸ்வர க்ருஹம் என அழைக்கப்படும் இந்த இரட்டைக் கோவில்கள், ஆதித்த சோழன் காலத்தில் அவனி கர்ந்தர்பன் என்ற பட்டம் சூட்டப்பட்ட பழுவேட்டரையர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

இவருக்கு கங்க மார்த்தாண்டன், கலியுக நிர்மூலன், மறவன் மாளதளன், அரையகள் அரைவுளி போன்ற பட்டங்களும் இவருக்கு இருந்தன. ஆதித்த சோழனின் காலத்தில் இருந்த குமரன் மறவன்தான் இந்தப் பழுவேட்டரையர் எனக் கருதப்படுகிறது.

இந்த வளாகத்திற்குள் உள்ள இரண்டு கோவில்களில் தென்புறம் உள்ள கோவில் தென் வாயில் ஸ்ரீ கோவில் என்றும் வடபுறம் உள்ள கோவில் வடவாயில் ஸ்ரீ கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தக் கோவிலில் ஆறு பழுவேட்டரையர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

1. மகரிஷி வம்சத்து க்ஷத்ரியன் பொதுகன் பெருமான் டரையன் குமரன் மறவன், 2. பொய்கை குறுவிடத்து வெட்டக்குடி வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன், 3. அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன், 4. அடிகள் பழவேட்டரையன் மறவன் கண்டன், 5. அடிகள் பழவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன், 6. அடிகள் பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

இதில் மறவன் கண்டனுக்கு சத்ரு பயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் இருவர்தான் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கண்டன் அமுதன் மற்றும் காலாந்தக கண்டன் பழுவேட்டரையர்களாக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
webdunia

ஆதித்த சோழன் காலத்திலிருந்து ராஜராஜ சோழனின் காலம் வரை சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த பழுவேட்டரையர்கள் திடீரென காணாமல் போயினர். ராஜராஜசோழரின் காந்தளூர்ச் சாலை யுத்தம், ராஜேந்திர சோழனின் கேரள படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பிறகு இவர்களின் பெயர்கள் எந்தக் கல்வெட்டிலும் காணப்படவில்லை.

சுமார் 150 ஆண்டு காலம் சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர் வம்சம் பிறகு என்ன ஆனது என்று தெரியாவிட்டாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாகவே இவர்கள் கட்டிய கோவில்கள் இப்போதும் அவர்களது கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர் திருப்பம்: காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?