சமூக ஊடகமான ஃபேஸ்புக் வழியாக காதலிப்பதாக கூறி, ஆண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்கப் படங்களை வெளியிடாமல் இருக்க பணம் பறிக்கும் கும்பலைத் தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள், கைம்பெண்கள் போன்றவர்களை குறிவைத்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரங்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவேண்டும் என சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
போலி ஃபேஸ்புக் கணக்கு வழியாகத் தொடர்பு கொள்ளும் நபர் படித்த, நல்ல சம்பளத்துடன் இருக்கும் தனி நபர்களை குறிவைப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, ''மருத்துவர், பேராசிரியர் போன்ற நிலையான நல்ல வருமானம் பெறும் நபர்களை குறிவைக்கும் நபர்கள், அவர்கள் ஃபேஸ்புக்கில் பகிரும் கருத்துகள் மற்றும் படங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்கள். ஃபேஸ்புக் நண்பராக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் தினமும் மெசேஜ் அனுப்புவார்கள். மிகுந்த அக்கறை கொண்ட நபராக, அடிக்கடி புகைப்பட ஆதாரங்கள் போன்றவற்றை அனுப்புவார்கள். ஒரு கட்டத்தில் காதலிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி ஏமாற்றத் தொடங்குவார்கள்,''என்கிறார்.
'எங்களிடம் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட நபர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் இருப்பவர். நல்ல வருமானம் உள்ள நபர். ரமேஷிடம் பழகி ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டதாகக் கூறி, ஒரு பெண்ணின் அந்தரங்கப் படம் ஒன்றை ஒருவர் அனுப்பியுள்ளார். ஒரு பெண் தன்னுடன் பேசுவதாக எண்ணி ரமேஷ் தொடர்ந்து அவரிடம் பேசியுள்ளார். வீடியோ கால் செய்யுமாறு அந்த நபர் கூறியதும், ரமேஷ் கால் செய்துள்ளார். ரமேஷை நிர்வாணமாக இருக்குமாறும், சுய இன்பத்தில் ஈடுபடுமாறும் அந்த நபர் கூறி, அதைப் பதிவு செய்துவிட்டார். அடுத்த வீடியோ காலில் பணம் கொடுக்காவிட்டால், ரமேஷின் அந்தரங்கக் காணொளியை ஃபேஸ்புக்கில் அவரது நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்,'' என்கிறார் தேன்மொழி. புகார் கொடுக்கவந்த சமயத்தில் மிகவும் தயக்கம் காட்டிய ரமேஷ், தனது வீட்டாரிடம் கூற முடியாமல், நண்பர்களிடமும் பேசமுடியாமல் சிரமப்பட்டதாக கூடுதல் ஆணையர் தேன்மொழி கூறினார்.
''அந்தரங்கப் படங்கள், காணொளிகளை பதிவு செய்து மிரட்டி, ஏமாற்றுவது தொடர்பாக எங்களுக்கு தற்போது மூன்று புகார்கள் வந்துள்ளன. இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் பலர் ஏமாந்திருப்பார்கள். பலரும் புகார் கொடுக்க தயங்குகிறார்கள். ரமேஷை போல ஒரு சிலர் மட்டுமே பணம் கேட்டதும் எங்களிடம் புகார் கொடுக்க வருகிறார்கள். சிலர் பணம் கொடுத்து ஏமாந்திருக்கலாம். புகார் கொடுக்கும் நபர்களின் தகவல்களை யாரிடமும் பகிரமாட்டோம் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரவேண்டும்,'' என்றார் அவர்.
''பெண்களை ஏமாற்றும் நபர்கள், காதலர் தினம் அல்லது ஏதாவது சிறப்பு தினத்திற்குப் பரிசு பொருள் அனுப்பியுள்ளதாகக் கூறி பணம் பறிப்பார்கள். ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றும் நபர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர் என்றும் ஒரு சிலர் தமிழகத்திலும் உள்ளனர்.''
'சுங்கக் கட்டணம் செலுத்தி பரிசு பொருளை பெற்றுக்கொள் என கூறி பணம் பறிக்கிறார்கள். எங்களிடம் புகார் கொடுத்த ஒரு பெண்ணிடம் சுமார் ரூ.15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார்கள். ஒரு வழக்கில், அமெரிக்காவிலிருந்து பேசுவதாக கூறிய நபர், தாம்பரத்தில் உள்ள வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறியிருக்கிறார். அந்த வங்கிக் கணக்கை வைத்துதான் அந்த ஏமாற்று நபரைக் கண்டுபிடித்தோம். ஒரு சிலரை அலைபேசி எண்ணை வைத்து கண்டறிகிறோம். பல சமயங்களில், பணம் கிடைத்ததும், அந்த அலைபேசி எண் மற்றும் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிவிடுகிறார்கள் என்பதால் கண்டுபிடிப்பது சிரமம்,'' என்றார் தேன்மொழி.
தினமும் சென்னை நகரத்தில் மட்டும் 50 புகார்கள் சைபர் குற்ற பிரிவில் பதிவாவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொது மக்கள் புகாரளிக்க முன்வந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.