Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?

கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
, வெள்ளி, 26 மார்ச் 2021 (08:06 IST)
உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம், தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது.
 
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டிருப்பதும்,இந்த விவகாரம் அரசியல் மட்டத்தை எட்டியுள்ளதை உணர்த்துகிறது.
 
இந்த சம்பவத்தை காரணமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்-ஐ இலக்கு வைத்து பிரச்னை எழுப்பி வருகிறார்.
 
"உத்தர பிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மோசமாக நடத்தப்பட்ட விதம், சிறுபான்மையினரை நசுக்கும் பொருட்டு, ஒரு மதத்தை மற்றொரு மதத்துடன் சண்டையிட வைக்கும் சங் பரிவாரின் விஷம பிரசாரத்தின் விளைவு," என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.
 
கடந்த வாரம், இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள் டெல்லி நிஜாமுதீனில் இருந்து ரயிலில் பயணம் செய்தபோது, மத மாற்ற சந்தேகத்தின்பேரில் அவர்களைப பற்றி சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஜான்சி ரயில் நிலையத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறக்கப்பட்டனர்.
 
ஆனால், விரிவான விசாரணைக்குப் பிறகு அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்த சம்பவத்தை எதிர்த்து கேரள முதலமைச்சர், உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். பின்னர் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக விரிவான அறிக்கையை, மாநில ரயில்வே காவல் பிரிவிடம் (ஜிஆர்பி) கேட்டது.
 
முழு அறிக்கை, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜிஆர்பி இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும் ஜான்சி ஜிஆர்பி துணை கண்காணிப்பாளர் நயீம் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
என்ன நடந்தது?
 
மார்ச் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அதே ரயிலின் மற்றொரு பெட்டியில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏபிவிபி) சில தொண்டர்கள் ஜான்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
 
மத மாற்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே ஹெல்ப்லைனில் அந்த ஆர்வலர்கள் புகார் செய்தனர். மேலும் ஜான்சியில் உள்ள தங்கள் அமைப்பிற்கும் தகவல் தெரிவித்தனர்.
 
ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்புப் படை) காவலர்களுக்கு இது பற்றிய தகவல் கிடைத்ததும், ஜி.ஆர்.பி பிரிவைச் சேர்ந்த காவலர்கள், ஜான்சி ரயில் நிலையத்தை அடைந்து சம்பந்தப்பட்ட நால்வரையும் ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். மத மாற்றம் செய்ய முற்பட்டதாக சுமத்தப்பட்ட புகார் தவறானது என விசாரணயில் தெரிய வந்ததால் அவர்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
 
விசாரணைக்குப்பிறகு, நான்கு பேரும் மற்றொரு ரயில் மூலம் ரூர்கேலாவுக்கு அனுப்பப்பட்ட தகவலை ஜிஆர்பி டிஎஸ்பி நயீம் கான் உறுதிப்படுத்தினார்.
 
"ஏபிவிபியின் அஜய் சங்கர் திவாரி, இந்த விஷயம் தொடர்பாக எழுத்துபூர்வ புகாரைக் கொடுத்தார். நாங்கள் அந்த இடத்திற்குச்சென்று விசாரணை நடத்தினோம். ஒடிசாவின் ரூர்கேலாவைச் சேர்ந்த இரு பெண்கள், தீட்சை எடுத்து வருவது விசாரணையில் தெரியவந்தது. நாங்கள் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தோம், இருவரும் பிறப்பிலிருந்தே கிறிஸ்தவர்கள் என்பதை அது காட்டியது. மத மாற்றம் என்ற விஷயம் உண்மையல்ல. யாரும் தவறாக நடத்தப்படவில்லை. நாங்கள் நான்கு பெண்களையும் ஒடிசாவில் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்தோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
கடும் நடவடிக்கை உறுதி
கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் அனுப்பியிருக்கிறது.
 
சம்பவம் நடந்தவுடன் இது அவ்வளவாக யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்றாலும், கேரளாவில் நடந்த ஒரு கூட்டத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது, அவர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உடனடியாக ஜிஆர்பியிடமிருந்து முழு அறிக்கையை கோரினார்.
 
கேரளாவில் புதன்கிழமை நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, "கன்னியாஸ்திரிகள் குழு மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கேரள மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டார்.
 
முதல்வரின் கடிதம்
 
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த விஷயம் தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் மதிப்பையும், மத சகிப்புத்தன்மையின் பண்டைய பாரம்பரியத்தையும் களங்கப்படுத்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
 
"இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கடுமையான கண்டனம் தேவை. அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனி நபர் உரிமைகளின் சுதந்திரத்தை பறிக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதில் உங்கள் தலையீட்டை நான் கோருகிறேன்," என்று விஜயன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 
உத்தர பிரதேசத்தில் என்ன நடந்ததோ அது, இந்த நாட்டில் நடக்கவேகூடாது என்று விஜயன் கூறினார்.
 
இது மிகவும் தீவிரமான விஷயம், இதுபோன்ற விவகாரங்களுக்கு அந்த மாநிலம் பெயர் பெற்றது என்று குறிப்பிட்ட அவர், கேரளாவில் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு சக்தியையும் தனது அரசு வளர அனுமதிக்காது என்று உறுதிபடக்கூறினார்.
 
இந்த சம்பவம் தொடர்பான ஒரு காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்ப்டடு வருகிறது. அதில் காவல்துறையினர் கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கி விசாரணைக்கு அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் முடங்கும் வங்கிகள் சேவை! அதிருப்தியில் பொதுமக்கள்!