Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழ்வை முடக்கிய நோய் பாதிப்பை வெல்லும் கவிஞர் யாழினிஸ்ரீ

வாழ்வை முடக்கிய நோய் பாதிப்பை வெல்லும் கவிஞர் யாழினிஸ்ரீ
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:32 IST)
(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் முதலாவது கட்டுரை இது.)

"அந்த அறையில்

நிசப்தத்துடன் பதுங்கியிருக்கும்

வெறுமையின் இருப்பை

துல்லியமாய் காட்டிக்கொடுத்தது

கிழிக்கப்படாத நாட்காட்டித் தாள்கள்"

'மரப்பாச்சியின் கனவுகள்' என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இந்த கவிதையில் உள்ள வெறுமையையும், தனிமையின் வலியையும் ஒவ்வொரு நொடியும் மெல்லிய புன்னகையோடு கடந்து செல்கிறார், கவிஞர் யாழினிஸ்ரீ.

கைஃபோஸ்காலியாஸிஸ் (Kyphoscoliosis) எனும் முதுகுத்தண்டு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது இரண்டு கவிதைத்தொகுப்புகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

தனது பத்தாவது வயதில் திடீரென கால் மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கம், வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக கூறுகிறார் யாழினிஸ்ரீ.

"நான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில்தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதலே எனக்கு விளையாட்டுத்தனம் அதிகம். அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டே இருப்பேன். வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் பெற்றோர்களின் செல்லமும் அதிகம். எனது பத்தாவது வயதில், பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென கால்மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னதும் மருந்து போட்டுவிட்டார். அப்போது பெரிய பாதிப்பாக இல்லை. அடுத்த சில நாட்களில் கால் வலி அதிகமானது. ஓடுவதை நிறுத்திக்கொண்டு நடக்கத் துவங்கினேன். ஒருகட்டத்தில் நடக்கவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது முடக்குவாத பாதிப்போடு, முதுகுத்தண்டு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது."

"பொருளாதார வசதி இல்லாததால் உயர் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை. அடுத்தடுத்த நாட்களில் நோயின் தாக்கம் தீவிரமடைந்தது, ஒரு கட்டத்தில் பிறரின் உதவி இல்லாமல் எதுவுமே செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால், பள்ளிப்படிப்பு நின்றுபோனது. மலைப் பிரதேசங்களில் குளிர் அதிகமாக இருப்பதால், நோய் பாதிப்போடு என்னால் அங்கு வசிக்க முடியவில்லை. எனவே, குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்திற்கு குடிபெயர்ந்துவிட்டோம். துள்ளித்திரிந்த எனது வாழ்க்கை நோய் பாதிப்பினால் கடந்த இருபது ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் முடங்கியது" என கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் யாழினிஸ்ரீ.

முப்பது வயதாகும் இவருக்கு, வாசிப்பும் எழுத்தும்தான் உலகம். வீடு முழுவதும் புத்தகங்கள் நிரம்பிக்கிடக்கின்றன. கண்ணில் பார்ப்பதையும், மனதில் தோன்றுவதையும் அழகான கையெழுத்துக்களால் எழுதிவைத்துக் கொள்கிறார். கணினி பயன்படுத்த தெரிந்த பின்னர் புத்தகங்கள் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கிறார் இவர்.

"என்னால் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க முடியாது, படுத்திருக்கவும் முடியாது. கழுத்துக்கு கீழ் எதுவும் செயல்படாது. எனது விரல்களை மட்டுமே என்னால் அசைக்க முடியும். விரல்களின் உதவியோடுதான் எனது வாசிப்பும், எழுத்தும் துவங்கியது. பத்தாம் வகுப்பை முடிக்க முடியாமல் பள்ளிப்படிப்பு நின்றது. எனது நிலை இதுதான், இனிமேல் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என உணர்ந்த பின்பு, எதாவது செய்ய வேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது."

"கிடைத்த புத்தகங்களை படித்துக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். அப்போதுதான் கணினி தட்டச்சு பயிற்சி பற்றி தெரியவந்தது. எனது நோய் பாதிப்பு மற்றும் உடல்நிலை குறித்து பயிற்சியாளர்களிடம் விளக்கினேன். எனது ஆர்வத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தனர். கணினியும், இணையமும் எனக்கு அறிமுகமான பின்னர், எனது வாசிப்புப்பழக்கம் விசாலமானது. மனதில் தோன்றும் கவிதைகளை தட்டச்சு செய்து முகநூலில் பகிரத்தொடங்கினேன். எனது கவிதைகளுக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. எழுதி வைத்த கவிதைகளை புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனையும் அப்போதுதான் வந்தது" என்கிறார் யாழினிஸ்ரீ.

இவர் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பை திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் குட்டிரேவதி வெளியிட்டார். 'வெளிச்சப்பூ' எனும் தனது இரண்டாவது கவிதைத்தொகுப்பை இம்மாதம் இவர் வெளியிட்டுள்ளார்.

"கவிதைகளை புத்தகமாக வெளியிடலாம் என முடிவுசெய்த பின்னர் பொருளாதார உதவிகள் தேவைப்பட்டது. முகநூலில் அறிமுகமான நண்பர்களும், வாசிப்பாளர்களும் நிதி உதவு செய்து எனது எழுத்துகளை புத்தகமாக அச்சிட்டு வெளியிட பேருதவி செய்தனர். முதல் நூலுக்கு கிடைத்த பாராட்டுகளும், அனுபவங்களும் அடுத்த கவிதைத்தொகுப்பை புத்தகமாக வெளியிட வழிசெய்தது. குறிப்பிட்ட பாராட்டுக்கள் என எதையும் கூறமுடியாது, எனக்கு கிடைத்த எல்லா பாராட்டுகளுமே மதிப்புமிக்கவை. முகம் தெரிந்த நண்பர்களின் அன்பும், தெரியாத பல நண்பர்களின் ஆதரவும் தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது" என பெருமையுடன் கூறுகிறார் கவிஞர் யாழினிஸ்ரீ.

இவர் தனது தாய் சுந்தரியோடு தற்போது வசித்து வருகிறார். எல்லா நிலையிலும் தன்னோடு உடன் இருக்கும் தனது தாய் குறித்தும், அவருடனான பிணைப்பு பற்றியும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் யாழினிஸ்ரீ.

"அம்மாவும் நானும் தோழிகளாகத்தான் பழகிக்கொள்வோம். அவரைத் தவிர என்னை வேறு யாரும் தூக்க முடியாது. எனக்காக மட்டுமே என்னோடு இருப்பவள் என் அம்மா. இருவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொள்வோம், விவாதிப்போம், அடிக்கடி சண்டையிடுவோம். அம்மாவிடம் நான் வாங்கும் திட்டுகளை முகநூல் பதிவாக பகிர்வேன். அதற்கும் திட்டு வாங்குவேன். எங்களின் சோகங்களையே நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டு சிரித்துக்கொள்வோம். இப்படி தோழியாகவும், தாயாகவும் இருந்து என்னை கனிவோடு பார்த்துக்கொள்பவள் என் அம்மா" என கூறியவாறு தனது தாயைப் பார்த்து புன்னகைக்கிறார் இவர்.

உடல் ரீதியான தடைகள் பல இருந்தபோதும், தனது எழுத்துப் பயணத்தில், பல இலக்குகளை முன்வைத்து தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார் யாழினிஸ்ரீ.

"இரண்டாவது கவிதை நூலை படித்தவர்கள் பாராட்டுக்களையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். இணையதளங்களில் புத்தகங்களை தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறேன். நாவல் எழுதும் பணிகளைத் துவங்கியுள்ளேன். நினைத்தவாறு நாவலை எழுதி முடிக்க வேண்டும். அதை புத்தமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்."

"சவால்களும் தடைகளும் பல வந்தபோதும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும். மன உறுதியும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மையும் இருந்தால் மட்டுமே தடைகளை எதிர்கொள்ள முடியும். உடல்ரீதியாக ஏராளமான தடைகள் உள்ளபோதும், எதையும் இயல்பாக என்னால் கடக்க முடியும் என நம்புகிறேன். எந்த தடைகள் வந்தாலும் எழுத்தும், வாசிப்பும் என்றென்றும் தொடரும்," என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் கவிஞர் யாழினிஸ்ரீ.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடை – அமெரிக்காவில் இருந்து வருகை!