பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஹர்த்தால் போராட்டமொன்று நேற்றைய தினம் (பிப்ரவரி 05) முன்னெடுக்கப்பட்டது.
(இலங்கை மதிப்பில் 1000 ரூபாய் என்பது இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பில் சுமார் 376 ரூபாய்க்கு நிகரானது.)
மலையகத்தில் உள்ள பெருத்தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சந்ததிகள் இவர்கள்.
அரசாங்கத்தின் பங்காளி கட்சி முன்னெடுக்கும் போராட்டம்
அரசாங்கத்தின் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சுமார் கடந்த 6 வருடங்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பளத்தை வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்தும் தோல்வியடைந்து வந்திருந்தது.
இந்த நிலையில், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்க் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
அதேபோன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என பலரும் இந்த பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தன.
இந்த நிலையில், நேற்றைய தினம் மலையகம் முழுவதும் பூரண கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மலையகத்தை முடக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் போராட்டம்
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், தொழிலாளர்கள் நேற்றைய தினம் தொழிலுக்கு செல்வதனை புறக்கணித்திருந்தனர்.
அதேபோன்று, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள், சுகயீன விடுமுறை பெற்றுக்கொண்டமையினால், பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
தலைநகர் கொழும்பிலும் மலையக மக்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், கடையடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றியடைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடையடைப்பு போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''தொழிலாளர்களுக்கான சம்பள உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சர்வமதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், தோட்டத்தொழிலில் அல்லாமல் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டுவந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்" என ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
அத்துடன், திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகள் நடுங்கியுள்ளதாக கூறிய ஜீவன் தொண்டமான், சாதகமான தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.