பெர்செவரென்ஸ் ரோவர் - ஹெலிகாப்டர் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள்
அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, வெற்றிகரமாக ஒரு சிறிய ஹெலிகாப்டரை செவ்வாய் கோளில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி, வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை, இப்போது இன்று பறக்கவிடப்பட்டதே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
"இன்ஜெனியூட்டி" என்றழைக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டர், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே செவ்வாய் கோளில் பறந்தது. ஆனால் அதை நாசா பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இன்ஜெனியூட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் செவ்வாய் கோளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது செவ்வாய் கோளின் ஜெசெரோ க்ரேடர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் தரையிறங்கியது.
மூன்று மீட்டர் உயரத்துக்கு மட்டுமே இன்ஜெனியூட்டி தரையில் இருந்து மேலே எழும்பி பறக்கும். சுமார் 30 விநாடிகள் வரை பறக்கும் எனக் கூறப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
ஆனால், செவ்வாய் கோளில் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் 3 மீட்டர் உயரத்துக்கு மேலே எழும்பி, மிதந்து, சுழன்று, பிறகு மெல்ல தரையிறங்கியது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் கிட்டத்தட்ட 40 நொடிகளுக்கு நடந்தது.
ரைட் சகோதரர்களின் விமானம் கூட முதலில் வெறும் 12 நொடிகளுக்குத் தான் பறந்தது என்பது நினைவுகூரத்தக்கது
புவிக்கும், செவ்வாய் கோளுக்கும் இடையிலான தொலைவு சுமார் 289 மில்லியன் கிலோமீட்டர். அதாவது ரேடியோ அலைவரிசைகள் சென்று சேரவே கோள்களின் அமைவிடத்தைப் பொருத்து பல நிமிடங்கள் ஆகும். எனவே இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரை ஜாய் ஸ்டிக் மூலம் புவியில் இருந்து இயக்குவது கிட்டத்தட்ட நடக்காத காரியம்.
இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டரின் கீழ் ஒரு கருப்பு வெள்ளை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமரா வழிகாட்டும் பயன்பாட்டுக்காக பொருத்தப்பட்டது. இந்த கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படம் நாசாவுக்குக் கிடைத்திருக்கிறது. அப்படம் இன்ஜெனியுட்டியின் நிழலைக் காட்டுகிறது.
தனது உருவ நிழலை தாமே படம் எடுத்துக் கொண்டது இன்ஜினியூட்டி
இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் பறந்ததற்கான அதன் தரவுகள், செவ்வாய் கோளில் இருக்கும் ஒரு செயற்கை கோள் மூலம் பூமிக்கு வந்தது.
வருங்காலத்தில் இன்னும் சாகசம் நிறைந்த பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக உறுதியளித்திருக்கிறது நாசா.
இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரை அதிக உயரத்தில் பறக்க வைத்து, அத்தொழில்நுட்பத்தின் எல்லையை சோதிக்கப்போகிறார்கள் பொறியாளர்கள்.
"வேறு கோளில் மனிதர்கள் ஒரு ஹெலிகாப்டரைப் பறக்கவிட்டார்கள் என இனி நாம் கூறலாம்" என கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் புரொபெல்ஷன் லெபாரட்டரியின், இன்ஜெனியூட்டியின் திட்ட மேளாளர் மிமி ஆங் மகிழ்வோடு கூறினார்.
பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்- இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா
1903-ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானத்தைப் பறக்க விட்டதைப் போன்ற தருணம் இது என நாசா விஞ்ஞானிகள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தொடர்பைக் குறிக்கும் வகையில், 117 ஆண்டுகளுக்கு முன், வடக்கு கரோலினா பகுதியில் ரைட் சகோதரர்களின் ஃப்ளயர் 1 விமானத்தின் இறக்கையில் இருந்த ஒரு சிறு பகுதி இன்ஜெனியூட்டில் இருக்கிறது.
ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்த செய்தியைக் கேட்ட உடன் கலிஃபோர்னியாவில் இருக்கும் ஜெட் புரொபெல்ஷன் லெபாரட்டரியில் மகிழ்ச்சி வெள்ளம் பீறிட்டது.
செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் அடர்த்தி குறைந்தது. எனவே அக்கோளில் ஹெலிகாப்டரைப் பறக்க விடுவது அத்தனை எளிதான காரியமல்ல. பூமியில் இருப்பதில் வெறும் ஒரு சதவீத அளவுக்கு தான் செவ்வாய் கோளின் வளிமண்டல அடர்த்தி இருக்கும். அதனால் ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தேவையான காற்று கிடைக்காது.
இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இன்ஜெனியூட்டி வெறும் 1.8 கிலோகிராமில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிகக் குறைந்த எடையிலேயே ஹெலிகாப்டரை உருவாக்கி இருக்கிறார்கள். அதோடு அந்த ஹெலிகாப்டரின் இறக்கைகள் ஒரு நிமிடத்துக்கு 2,500 முறை சுழலும் அளவுக்கு சக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பெர்செவெரென்ஸ் ரோவர், இன்ஜெனியூட்டியை சோதனைக்காக இறக்கிவிட்ட இடத்தை 'ரைட் சகோதரர்கள் ஃபீல்ட்' என பெயர் சூட்டி அறிவித்திருக்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா.