Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் கேள்வி: "ஓய்வு வயது குறைப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?"

Advertiesment
Srilanka
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (22:06 IST)
இலங்கை அரசாங்கம்
 
இலங்கையில் ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை குறைப்பதற்கு அரசாங்கம் சமீபத்தில் எடுத்துள்ள தீர்மானம், தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 
அரசு ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறும் வயது 65 என காணப்பட்ட நிலையில், அந்த வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
 
2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்திருந்தார். இந்த இடைகால வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

 
அரசுத் துறைகளில் 60 வயதுக்கு அதிகமான வயதை கொண்டவர்கள் பணியாற்றுவார்களாயின், அவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி கட்டாய ஓய்வூதியம் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறித்தார்.
 
 
இந்த அறிவிப்பானது, தற்போது பாரிய விமர்சனங்களை தோற்று வித்துள்ளது.
 
 
''77 வயதுடைய சபாநாயகர் முன்னிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக்கிய அறிவிப்பை, 73 வயதுடைய பிரதமரை அருகில் வைத்துக்கொண்டு அறிவித்தார் 73 வயதுடைய ஜனாதிபதி." என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
 
 
இந்த நிலையில், ஓய்வூயம் பெறும் வயதெல்லை குறித்து, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்தார்கள்.
 
 
 
''வயது வரம்பை நிர்ணயிக்கக் காரணமே, ஒருவர் தனது வாழ்நாளில் 20 வயதில் வேலைக்கு சேருவான். 20 வயதுல இருந்து, குறைந்தது 60 - 65 வயது வரை அவன் அரசாங்கத்தில் வேலை பார்ப்பான். ஓய்வு பெற்ற பிறகு அவனாக பேர பிள்ளைகளோட விளையாடிட்டு, பேப்பர் பார்த்திட்டு இருக்கனும் என்ற வகையில் தான் அந்த வரும்பு அமைக்கப்பட்டது," என்கிறார் சமூக செயல்பாட்டாளரான ரஷ்மின்.
 
 
 
"அரசாங்கம் என்ன பார்க்கின்றார்கள் என்றால், வேலையில்லா திண்டாட்டம் நாட்டிற்குள்ள பெரிய தலையிடியா இருக்கின்றது. இளைஞர்களுக்கு வேலை கொடுக்கனும். வேலை கொடுக்கனும்னா, இருக்கின்றவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடியாது. 65 வயது வரை வேலை செய்பவர்களை 60 வயதாக குறைத்தால், அவர்கள் வீட்டிற்கு போக வேண்டி வரும். அரசுப் பணிகளில் 16 லட்சம் பேர் இருக்கின்றார்கள். அவர்களில் 10 லட்சம் பேர் சும்மா தான் இருக்கின்றார்கள் என்று அமைச்சர்கள் பேசக்கூடிய காட்சிகள் எல்லாம் பார்க்கின்றோம்."

 
"ஆனால், மற்றவர்களுக்கு வாய்ப்பை கொடுப்பது தான் இந்த ஓய்வூதியத்திட்டம் என்றால், இந்த சந்தர்ப்பம் அரசு ஊழியர்களுக்கு மாத்திரம் அல்ல கொடுக்கப்பட வேண்டும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நாட்டின் இளம் தலைமுறை தான் மிக ஆழமாகவும், அழகாகவும் சிந்திப்பார்கள். பல நாடுகளில் பார்க்கின்றோம். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கின்றது."

 
"ஆனால் நம்ம நாட்டுல எப்ப வாய்ப்பு கிடைக்கின்றது என்றால், ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்றால், 70 வயது கடக்க வேண்டியிருக்கின்றது. அது சிந்திக்கின்ற வயதா?. கோபம் அதிகமாக வருகின்ற வயது. எங்களுடைய நடவடிக்கைகள் மாறுகின்ற வயதில் தான், தலைவர்கள் பொறுப்பிற்கு வருகின்றார்கள். நம்ம நாட்டு ஜனாதிபதியை எடுத்துக்கொண்டால், அவர் 70 வயதை கடந்துவிட்டார். நம்ம நாட்டு பிரதமர் 70 வயதை கடந்து விட்டார்."

 
"நாட்டின் ஜனாதிபதி 35 பிளஸ் அல்லது 40 பிளஸ் ஆக இருந்தால், அந்த நாட்டின் சிந்தனை தாக்கம் அதிகமாக இருக்கும். ஓடி சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். நம்ம நாட்டுல உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள எடுத்துக்கொண்டால், லிப்ட் இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தில் மேலே போக முடியாது. நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் இவ்வாறான வயதெல்லை கொண்டு வரப்பட வேண்டும். ஜனாதிபதி ஆவதற்கும் வயதெல்லை கொண்டு வர வேண்டும். 35 வயதாகினால், ஜனாதிபதி ஆக முடியும் என வயதை வைத்தவர்கள், இத்தனை வயது கடந்தால், ஜனாதிபதி ஆக முடியாது என்ற வயதெல்லையை வைக்க வேண்டும். தங்களுடைய நலனுக்காகவே அதனை வைக்காது இருக்கின்றார்கள்" என சமூக செயற்பாட்டாளர் ரஷ்மின் தெரிவிக்கின்றார்.
 
 
நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல்வாதிகள், இளையோருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.வீ.லோசன் குறிப்பிடுகின்றார்.
 
 
60 வயதை தாண்டிய 74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சூழ்நிலையில், அரசாங்க உத்தியோகத்தர்கள் 60 வயதுக்கு மேலே வேலை செய்யக்கூடாது என்று இப்போது புதிய வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி சொல்லியிருப்பது, விமர்சன ரீதியாக பார்க்கும் போது ஒன்று வேலையில்லாமல், இலங்கையில் இருக்கின்ற பெருந்தொகையான இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு இந்த திட்டம் என்று சொன்னால், அப்படியும் நாங்கள் இதை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதிய வயதெல்லை ஒன்று வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. இல்லாவிட்டால், பதவிகளை வகிக்க கூடாது என கடுமையாக குரல்களில் இளைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புக்களை வெளியிட்டார்கள். அதிலுள்ள நியாயத்தை பார்க்க வேண்டும். இரண்டாவது, நாங்கள் மறுபக்கம் பார்த்தோம் என்று சொன்னால், 65 வயது வரை கால நீடிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு பணிபுரியும் சந்தர்ப்பம் இருந்தால், அவர்களின் உடலும் ஆரோக்கியமும் அவர்களுக்கு இடம் கொடுக்கும் என்றால், அவர்கள் பணிபுரியலாமே. இதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்ற கேள்வியை மறுபுறம் எழுப்பலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் அனுபவங்களை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்ள போகின்றோம் என்ற கேள்வியை நான் இங்கே முன்வைக்கின்றேன். நாட்டிற்கு சேவை செய்வதற்காக தான் நீங்கள் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வருகின்றீர்கள், அரசியலில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களது அனுபவத்தை நீங்கள் நாட்டிற்கு சேவையாக வழங்குவதை, பதவிகளில் இல்லாமல் வெளியில் இருந்துக்கொண்டு இளையோருக்கு தகுதியான இளையோருக்கு வழங்கலாம் என்பதே எனது சின்ன ஆலோசனை" என பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.வீ.லோசன் தெரிவிக்கின்றார்.
 
 
 
இலங்கை அரசியல் வரலாற்றில் தல என்று வர்ணிக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க, இந்த அறிவிப்பை செய்ததானது, உண்மையிலேயே ஒரு கேலி கூத்ததான விடயமாக இருக்கின்றது" என மௌலவி ஐதர் அலி கூறுகின்றார்.
 
 
 
''அரசு ஊழியர்களுடைய வயது எல்லை 60ஆக குறைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்து விட்டால், கட்டாயம் அவர்கள், தனது பணியை விட்டுச் செல்ல வேண்டும். இதில் என்னவொரு பகிடி என்றால், 77 வயதுடைய சபாநாயகர் முன்னே இருக்கிறார். 73 வயதுடைய பிரதமரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, 73 வயதுடைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிடுவது, மக்களுக்கு ஒரு பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ரணில் விக்ரமசிங்க என்றால், 'அரசியல் தல' என்பார்கள். தமிழகத்தில் ஒரு நடிகருக்கு தல என்று சொல்வது போல. இலங்கை அரசியல் வரலாற்றில் தல என்று வர்ணிக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த அறிவிப்பை செய்ததானது, உண்மையிலேயே ஒரு கேலி கூத்ததான விடயமாக இருக்கிறது" என மௌலவி ஐதர் அலி கூறுகின்றார்.
 
 
வேலைவாய்ப்புக்கு உகந்த வாய்ப்பு
 
அரசியல் கட்சிக்கு பின்னால் செல்லும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுக்கும் நோக்கிலேயே, அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
 
 
 
''60 வயது வரை வேலை செய்ய வேண்டும். 60 வயதோடு ஓய்வூ பெற வேண்டும் என்ற பரிந்துரை நான் நினைக்கின்றேன், இலங்கை அரசாங்கத்துடைய பரிந்துரையாக இருக்க வேண்டும். ஏனென்றால், சர்வதேச நாணய நிதியத்தை பொருத்த வரையிலே அவர்கள் அநேகமாக சொல்லி இருக்கின்றார்கள். 65 வரை அரசு ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என சொல்லியிருக்கின்றார்கள்.

 
அதன் பின்னதான சூழ்நிலையிலே மேலும் 3 ஆண்டுகள் அவர்களுடைய உடல் நிலையை பொருத்து, வேலை செய்ய முடியும் என்ற பரிந்துரையை செய்திருக்கின்றார்கள். இந்த நடைமுறை ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய நாடுகளிலே உண்டு. ஆகவே இலங்கையிலும் அவ்வாறான நிலைமை வர வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் என்னவென்றால், 60 வயதோடு ஓய்வூ பெற்று விட்டால், அதன் பின்னர் அவருக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.

 
அந்த பணம் வீணானது. 65 அல்லது 67 வயது வரை வேலை பெற்று விட்டால், பின்னால் எடுக்கக்கூடியவர்கள் குறைவடைவார்கள். ஆனால், இலங்கை அரசாங்கத்தை பொருத்த வரை, அந்த பரிந்துரையை ஏற்க தயங்கியிருக்கின்றது. ஏனென்றால், 65 வயது வரை வேலை செய்ய அனுமதித்தால், பின்னுக்கு இருக்கக்கூடிய இளைஞர்களை வேலைக்கு அமர்த்த முடியாது. இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கு பின்னால் செல்பவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும்.
 
 
அதுவும் அரசு ஊழியர்களை 65 வயது வரை வைத்திருந்தால், இளைஞர்களை வேலைக்கு எடுக்க முடியாது." என்கிறார் மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டின் பாதுகாப்பில் டுவிட்டர் நிறுவனத்திற்கு கவலையில்லை- மத்திய அரசு