Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாவாக உதவிய ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

அப்பாவாக உதவிய ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
, ஞாயிறு, 14 ஜூன் 2015 (11:05 IST)
மாற்று உறுப்பு அறுவைச் சிகிச்சை மூலம் கொடையாக பெற்றுக் கொண்ட ஆண்குறியின் உதவியுடன் அப்பாவான மகிழ்ச்சியில் இருக்கிறார் 21 வயது தென் ஆப்பிரிக்க வாலிபர் ஒருவர். இது போன்ற சிகிச்சை முறையால் உலக அளவில் முதன் முதலில் பயன்பெற்று தந்தையானவர் இவர் என்கிறார் இவருக்கு இந்த சிகிச்சை செய்த மருத்துவர்.

 
உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக ஆண்குறியை பெற்றுக் கொண்ட 21 வயதான தென் ஆப்பிரிக்கருக்கு அவர் மேற்கொண்ட சிகிச்சைக்கு தற்போது உரிய பலன் கிடைத்துள்ளது.
 
தென் ஆப்ரிக்காவின் சில இனக்குழுக்கள் மத்தியில் ஆணுறுப்பின் முன் தோலை அகற்றுதல் என்பது பழங்கால முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் நவீன மருத்துவ வசதிகள் எவையும் இல்லாமல், அது ஒரு ரகசியமானதொரு மதரீதியிலான சடங்காக, மறைவாக மேற்கொள்ளப்படும்.
 
தோராயமாக பதினெட்டாவது வயதில் சிறுவன் ஒருவன் இளைஞனாக/ஆணாக ஆளாகும் சடங்காக, இது தென் ஆப்ரிக்காவின் சில இனக்குழுமங்கள் மத்தியில் கடைபிடிக்கப்படுகிறது.   
 
சடங்கால் விளைந்த சங்கடம்
 
அப்படியானதொரு சடங்கின்போது இந்த இளைஞரின் ஆண்குறி அறுந்துபோனதாகவும், ஒரே ஒரு செண்டீமீட்டர் அளவு மட்டுமே அவரது ஆணுறுப்பு எஞ்சியிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவருக்கு இது நடந்தபோது 18 வயது.
webdunia

 
அப்படிப்பட்டவருக்கு, அவரது 21ஆவது வயதில் இறந்தபோன வேறொருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஆண்குறி அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது. அதன் பிறகு அவரால் தனது காதலியுடன் உறவு கொள்ள முடிந்துள்ளதாக, இவருக்கு ஆண்குறி மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அறுவை சிகிச்சை மருத்துவர், அன்ட்ரே வான்டர் மெவா பிபிசிக்கு தெரிவித்தார்.
 
இவர் ஒருநாள் அப்பா ஆவார் என்பதில் தாம் உறுதியாகவே இருந்ததாக தெரிவித்த அண்ட்ரே வான்டர் மெவா, அவருடைய காதலி கருத்தரித்து நான்கு மாதங்களாவதாகவும், இது ஆண்குறி மாற்றுச் சிகிச்சை வெற்றியடைந்துள்ளதை காண்பிப்பதாகவும் கூறினார்.
 
இதேபோன்ற சிகிச்சையை இனி மற்றவர்களுக்கும் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தற்போது நம்புகின்றனர்.
 
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண்குறியைப் பெற்றுக் கொண்ட 21 வயதான வாலிபர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
 
அடையாளத்தை வெளியிட விரும்பாத "அப்பா"
 
இதில் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையால் பலன்பெற்ற கணவரின் கரு தான் அவரது மனைவியின் வயிற்றில் வளர்கிறதா என்பதை உறுதி செய்யக்கூடிய பரிசோதனைகளை தான் மேற்கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தினார் மருத்துவர் அண்ட்ரே வான்டர் மெவா.
 
“அந்த கணவர் தனது மனைவியை சந்தேகிப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்னும்போது கருவில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்வதற்கான தேவை எழவில்லை,” என்றார் மருத்துவர் அண்ட்ரே வான்டர் மெவா.
webdunia
 
உதாரணமாக, சிறுநீரக மாற்று சிகிச்சை போன்ற மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது. அப்படி உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக்கொண்டவர்கள் நல்லபடியாகவே வாழ்கிறார்கள்.
 
அதேபோல வெற்றிகரமாக ஆண்குறி மாற்று சிகிச்சை பெற்றுக் கொண்ட இவருக்கு உடலின் செயற்பாடுகள் அனைத்தும் இயல்பு நிலையிலேயே உள்ளதாலும், இவர் மிக இளவயது என்பதாலும், இவருக்கு மிக குறைவான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களே உள்ளது என்றும் விளக்கினார் மருத்துவர் அண்ட்ரே வான்டர் மெவா.
 
உடல் உறுப்பு தானம் தான்; ஆனால் உளவியல் தாக்கம் நிறைந்தது
 
இந்த இளைஞருக்கு பொருத்தப்பட்ட இந்த ஆண்குறியானது இறந்த பிறகு பல உடல் உறுப்புக்களை தானம் செய்த கொடையாளி ஒருவரிடமிருந்தே பெறப்பட்டதாகவும், மரணமடைந்த ஒருவரது குடும்பம், அவரது இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை தானம் செய்ததோடு அவரது ஆண்குறியையும் கொடையாக வழங்கியதாகவும் அவரது மற்றைய உடல் உறுப்புக்கள் வழங்கப்பட்ட வழியிலேயே இந்த ஆண்குறியும் வழங்கப்பட்டது என்றும் மருத்துவர் தெளிவுபடுத்தினார்.
 
அதேசமயம், மற்ற உறுப்புகளைப் போலன்றி ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை என்பது உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான் என தெரிவித்த மருத்துவர் அண்ட்ரே வான்டர் மெவா ஆண்குறி மாற்று சிகிச்சை பெற்ற வாலிபர் மிக இள வயதானவர் என்பதோடு மன உறுதியுடன் திடமாக நடந்துகொள்வதாகவும் கூறினார்.
webdunia
 
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆபிரிக்காவில் உள்ள ஸ்டெலன்போச் பல்கலைக்கழகம் மற்றும் டைஜபேர்க் மருத்துவமனையில் ஒன்பது மணி நேரம் நடத்திய மாற்று அறுவை சிகிச்சை வைத்தியர்கள் மற்றும் குழுவினர் இவருக்கு கொடையாக கிடைத்த ஆண்குறியை மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக பொருத்தி அறிவியல் துறையில் புதிய சாதானி நிகழ்த்தியிருந்தனர்.
 
பழமையானமுறையில் சிறுவர்களின் ஆண்குறியின் முன் தோல் நீக்கும் சடங்குகள் மூலம் தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் சிறார்கள் இப்படி பாதிக்கப்படுவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
 
இதில் ஆண்டுதோறும் சிறுவர்கள் இறந்து போவதாகவும் தெரிவிக்கும் மருத்துவர்கள், தென் ஆப்ரிக்காவில் தான் உலகிலேயே அதிகமான ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழல் நிலவுவதாகவும் கூறுகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil