Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஆண்' கொரில்லா திடீரென குட்டி ஈன்றதால் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி - தந்தையை கண்டறிய மரபணு சோதனை

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (21:21 IST)
அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது.
 
கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
 
இது குறித்து ஒரு ப்ளாக்கில் பதிவிட்டுள்ள மிருகக்காட்சி சாலை ஊழியர்கள், கொரில்லா குட்டி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அதன் தாய் அதன் கடமையை சிறப்பாக நிறைவேற்றிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
சல்லி எப்போதும் நல்ல உடல்நலத்துடன் இருந்ததால் அதை இதுவரை யாரும் பிடித்து அதன் பாலினம் குறித்து கூட சோதிக்கவில்லை என்பதால் தான் அதன் பாலினம் குறித்த குழப்பம் ஏற்பட்டதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"இந்த புதிய கொரில்லா குட்டியின் வரவு முழுக்கமுழுக்க எதிர்பாராதது. இருப்பினும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தைக் காப்பதில் இந்த புதிய வரவு ஒரு முக்கிய பங்காற்றும்," என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த கொரில்லா தனது குட்டியை பராமரித்து வந்ததைக் காணும் வரை அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை என்றும், "இளம் கொரில்லாக்களின் பாலினத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்," என்றும் மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சல்லிக்கு தற்போது எட்டு வயதாகும் நிலையில், அது ஒரு குட்டியை ஈணும் திறனைப் பெற்றிருக்கிறது என்றாலும், தற்போதைய நிலையில், அது ஒரு இளம் கொரில்லாவாகத் தான் இருக்கிறது, அதனால் அது அதன் பாலினத்தை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபடவில்லை.
 
"எட்டு வயதாகும் வரை ஆண் மற்றும் பெண் கொரில்லாக்கள் சமமான உருவ அளவைத் தான் பெற்றிருக்கின்றன. அதுவரை அவற்றிற்கு வெளியில் எளிதாகத் தெரியும் வகையில் இனப்பெருக்க உறுப்புக்கள் வளர்ச்சியடைந்தவையாக இருப்பதில்லை. ஆண் கொரில்லாக்கள் 12 வயதுக்குப் பின்னர் தான் பாலினத்தை வெளிப்படுத்தும் செயல்களைத் தொடங்குகின்றன," என்கின்றனர் மிருகக்காட்சி சாலைப் பணியாளர்கள்.
 
 
கொரில்லாக்களின் அடிவயிறு இயல்பாகவே மிகப்பெரிதாக இருப்பதால், அவை கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் இருக்கும் குட்டிகள் மனிதக் குழந்தைகளை விடவும் மிகவும் சிறியவையாக இருப்பதால் அவற்றை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை.
 
"அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தில் புதிதாக மேலும் ஒரு குட்டி பிறந்திருப்பதால் பெரும் வியப்பு ஏற்பட்டது," என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் கூறியுள்ளது.
 
"1956ம் ஆண்டில் முதன்முதலாக கொலம்பஸ் பூங்காவில் ஒரு கொரில்லா குட்டி பிறந்த நிலையில், இதுவரை 34 குட்டிகள் பிறந்திருக்கின்றன. இந்த மாபெரும் விலங்கை பாதுகாப்பது எங்களுக்கு ஒரு மிகமுக்கியமான பணி என்பதே உண்மை."
 
புதிதாகப் பிறந்துள்ள இந்த கொரில்லா குட்டியின் தந்தையை அடையாளம் காண்பதற்காக மரபணு சோதனை நடத்த பூங்கா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
 
புதிதாகப் பிறந்து குட்டியானது தாய் மற்றும் கொரில்லாக்கள், 39 வயதான மேக், 10 வயதாக கமோலி, 6 வயதான ஜேஜே ஆகிய கொரில்லாக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகிறது.
 
மேலும், சல்லியின் பாலினத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாததைப் போல் இல்லாமல் புதிதாகப் பிறந்த குட்டியின் பாலினம் குறித்து தெளிவாக அறிந்துகொண்டதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
"அது ஒரு பெண் கொரில்லா குட்டி. அதைப் பார்த்து, புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததன் மூலம் அதன் பாலினத்தைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி மேலும் தெளிவாகத் தெரிந்துகொள்ள மற்றொரு மிருகக்காட்சிப் பூங்காவுக்கு அந்த புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன," என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்