Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டுப் போராடும் பெற்றோர் - என்ன சிக்கல்?

இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டுப் போராடும் பெற்றோர் - என்ன சிக்கல்?
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:03 IST)
தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓர் இளைஞனின் பெற்றோர் விசித்திரமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இறந்து போன தனது மகனின் விந்தணுவை வழங்க சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஆனால், கங்காராம் மருத்துவமனை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இறந்த திருமணமாகாத ஆணின் விந்தணுவை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான அஸிஸ்டட் ரீப்ரொடக்டிவ் சட்டம், (ART ACT), வாடகைத் தாய் மசோதா அல்லது ICMR வழிகாட்டுதல்களில் எதுவும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி மருத்துவமனையால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
 
என்ன நடந்தது?
அந்த இளைஞர் ஜூன் 2020 ஆம் ஆண்டு, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அவருக்கு திருமணம் ஆகவில்லை. சிகிச்சையின் போது கதிர்வீச்சு உடலில் எதிர்மறையான விளைவுகளையும் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பதால், கீமோதெரபிக்கு முன் நோயாளியின் விந்துவைப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது விந்தணு பாதுகாக்கப்பட்டது. பின்னர் நோயாளி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.
 
இந்த நோயாளி செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு, சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். நோயாளியின் மரணத்திற்குப் பிறகு, சர் கங்கா ராம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விந்தணுவைத் திருப்பித் தருமாறு அவரது பெற்றோர் கோரினர். ஆனால் மருத்துவமனை மறுத்துவிட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 
இந்த வழக்கில், வழக்கறிஞர் குல்தீப் சிங், "இறந்தவரின் ஒரே அடையாளமாக இருக்கும் அந்த விந்தணுவைத் தர, மருத்துவமனை மறுப்பது, மனுதாரரின் உரிமைக்கு எதிரானது" என்ற வாதத்தை முன்வைத்தார். மேலும், மனுதாரர் இறந்த தனது மகனின் உயிரணுவைக் கொண்டு தனது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில், டெல்லி அரசு மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டிருந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் குல்தீப் சிங் கூறும்போது, "நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக டெல்லி அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சர் கங்கா ராம் மருத்துவமனை விந்துவை வழங்க இயலாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 
ART ஒழுங்குமுறைச் சட்டம் 2021, ICMR வழிகாட்டுதல்கள் மற்றும் வாடகைத் தாய்மை மசோதா ஆகியவற்றில் திருமணமாகாத ஒருவரின் உயிரணுவின் சட்டப்பூர்வமான உரிமை யாருக்கு இருக்கிறது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று சர் கங்கா ராம் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.
 
ART(செயற்கைக் கருத்தரிப்பு) வழிமுறைகளில், IVF, intracytoplasmic sperm injection, அதாவது, கருமுட்டைக்குள் விந்தணுவை செலுத்துவதன் மூலம் கருத்தரித்தல், விந்து மற்றும் கருமுட்டை ஆகியவற்றிலிருந்து ஆய்வகத்தில் கருவை உருவாக்கிப் பெண்ணின் உடலில் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
 
அதேசமயம் வாடகைத் தாய் என்ற முறையில் குழந்தை இல்லாத அல்லது குழந்தை பிறக்க முடியாத தம்பதியினர், வாடகைத் தாய் என்று அழைக்கப்படும் மற்றொரு பெண்ணின் உதவியை நாடுகின்றனர். இந்த வாடகைத் தாய் IVF தொழில்நுட்பம் மூலம் தம்பதியருக்குக் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.
 
இந்த விந்தணுவை அவரது மனைவி அல்லது நன்கொடையாளரால் பரிந்துரைக்கப்பட்ட பெண் பயன்படுத்தலாம். இந்த விந்தணு சேமிப்பிற்கு விந்தணு வங்கி, கட்டணம் வசூலிக்கும். நன்கொடையாளர் உயிருடன் இருக்கும் போது சேமிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், விந்து மாதிரியை அழிக்க அல்லது ஆராய்ச்சிப் பணிக்காகத் தகுதியுடைய நிறுவனங்களுக்குக் கொடுக்க இந்த வங்கிக்கு உரிமை உண்டு.
 
மேலும் நன்கொடையாளர் இறந்துவிட்டால், அவரது சட்டப்பூர்வமான உரிமை பெற்றவருக்கோ அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கோ அந்த விந்தணு உரித்தாகிறது. மாதிரியைக் கொடுக்கும்போது அவர் யாருடைய பெயரை உரிமையாளர் என்று பதிவு செய்திருந்தாரோ அவருக்கே அந்த உரிமை செல்கிறது. ஆனால் இந்த விந்தணுவை அவர், தான் விரும்பிய பெண்ணுக்குக் கொடுத்து இந்த நபர் பயன்படுத்த முடியாது. இறந்த பிறகு விந்தணுவுக்கு உரிமை கோருபவர் இல்லை என்றால், வங்கி அதை அழித்துவிடலாம் அல்லது ஆராய்ச்சிக்காக ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கலாம்.
 
உயர்நீதி மன்றத்தில் வந்த இந்த வழக்கு உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை. பெற்றோர் தங்கள் இளம் மகனை இழந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மருத்துவப் பிரச்சனைகள் காரணமாக, பெற்றோர் ஆக முடியாத அல்லது ஒற்றைப் பெற்றோராக மாற விரும்பும் தம்பதிகள்- இவர்களுக்கு ART சட்டம் அல்லது வாடகைத் தாய் மசோதாவில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
 
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ART சேவைகளைப் பெற வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 வயதாகவும் இருக்க வேண்டும், இருவரும் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
 
மேலும், 21-55 வயதுடைய ஆண்களிடமிருந்து மட்டுமே விந்தணுவைப் பெற முடியும் என்றும், 23-35 வயதுடைய பெண்களிடமிருந்து முட்டைகளைச் சேகரிக்க முடியும் என்றும் மசோதா கூறுகிறது.
 
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சோனாலி கர்வாஸ்ரா கூறும்போது, "இந்தப் பெற்றோருக்கு இது எதிர்கால வாழ்க்கையின் நம்பிக்கை பற்றிய விஷயம். ஆனால் இப்போது மகனே இல்லாதபோது, பேரக் குழந்தைகள் குறித்த நம்பிக்கையும் அற்றுப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில், இறந்த மகனின் விந்தணுவைப் பெற்று, வாடகைத் தாய் அல்லது ஏஆர்டி மூலம் குடும்பத்தைப் பெருக்கக் கூட இந்த தம்பதியினர் நினைத்தாலும், குழந்தை பிறந்த பிறகு அதன் நலனுக்கான உரிமை யாரைச் சாரும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
 
இந்த விவகாரத்தை மேலும் முன்னெடுத்துச் சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராதிகா தாப்பர், இந்த வழக்கில் விந்தணு கிடைத்துவிட்டால் கூட, மனுதாரர்கள் மீண்டும் பெற்றோராகும் நிலை ஏற்படுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
 
"நீதிமன்றமும் விந்தணுவைக் கொடுக்க அனுமதி அளித்தால், அது மிகவும் முன்னேற்றகரமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால், மனுதாரர் விந்தணுவைப் பெற்றுக் கொண்டு, தாத்தா பாட்டி ஆவதற்கு பதில், அவர்களே பெற்றோராக முடிவு செய்துவிட்டால், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பிறக்கும் குழந்தையை வளர்ப்பது குறித்த ஐயம் ஏற்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில், 20 வயது வரையிலான குழந்தையின் நிதி மற்றும் பாதுகாப்பு பெற்றோரின் பொறுப்பாகக் கருதப்படுகிறது." என்று அவர் விவரிக்கிறார்.
 
2018 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் இதேபோன்ற வழக்கு பதிவாகியுள்ளது, அங்கு மருத்துவர்கள் பிரதமேஷ் பாட்டீலின் விந்தணுவை அவரது தாயார் ராஜ்ஸ்ரீ பாட்டீலிடம் ஒப்படைத்தனர். அவர் வாடகைத் தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குப் பாட்டியானார். தில்லி உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ள இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 13ஆம் தேதியன்று நடைபெறும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, நிவாரண நிதி எங்கே? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி