ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்க சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
எனினும், இது சிறையில் இருக்கும் வேறு கைதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ காவல் முடிந்து செப்டம்பர் 5 முதல் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலும் அக்டோபர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் கோளாறுகள் காரணமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள அனுமதி வேண்டி சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு வழங்குவதில் தங்களுக்கு ஆச்சேபனை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்டு 21 அன்று சிபிஐ சிதம்பரத்தை, அவரது டெல்லி இல்லத்தில் கைது செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் தனக்கு, திங்களன்று பிணை மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். இடைக்கால நிவாரணம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அனுகினார்.
உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து அவர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டிருந்த தொழில் அதிபர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி சிதம்பரத்துக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜீ ஆகியோர் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
இந்திராணியின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளை கொலை செய்தது தொடர்பான வேறொரு வழக்கில் அவர்கள் இருவரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.