Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை

Advertiesment
காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை
, வெள்ளி, 30 ஜூலை 2021 (10:55 IST)
1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது.
 
இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது.
 
அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova).
 
கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறிதல் (Discuss Throw) அவரை வெகுவாக ஈர்க்க, அதை தன் பாணியில் வீசத் தொடங்கினார்.
 
நல்ல உடல் வலுவும், திறனும் இருப்பதை அவரது பயிற்றுநர் அடையாளம் கண்டார். ஆனால் அவரிடம் வட்டு எறியும் ஒரு ரிதம் மட்டும் சரியாக அமையவில்லை. வட்டு எறிதலுக்கோ அந்த ரிதம் தான் அத்தனை அவசியமானது.
 
அதையும் ஓல்கா மெல்ல சரி செய்து கொண்டார். 1955ஆம் ஆண்டில் அவர் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவரை மேற்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்ய, ரஷ்யாவின் முன்னாள் ஒலிம்பிக் வட்டு எறிதல் வீராங்கனையே களமிறங்கினார்.
 
ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சிய சீடராக உருவெடுத்தார். அப்படியே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றார். 1956 ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றார்.
 
கட்டுரை அவ்வளவு தானா? அதான் ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயித்துவிட்டாரே என கேட்கிறீர்களா?
 
இனி தான் கதையே ஆரம்பம்.
webdunia
தங்க மங்கை ஓல்கா ஃபிகொடோவாவுக்கு, மெல்பர்னில் ஒலிம்பிக் போட்டிகளில் ஹேமர் த்ரோ போட்டியில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற ஹரால்ட் கானொலி உடன் காதல் ஏற்பட்டது.
 
மெல்பர்ன் முழுக்க காதலோடு சுற்றித் திரிந்தனர். செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஓல்கா மழலை ஆங்கிலத்தில் பேசி காதல் செய்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.
 
மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இருவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தருணம் வந்தது.
 
ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை?
தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
 
இவர்களது காதலை, அவர்களது வீட்டார் எதித்தார்களோ இல்லையோ, செக்கோஸ்லோவாக்கியா கடுமையாக எதிர்த்தது.
 
ஹரால்டை திருமணம் செய்து கொண்டால், இனி தன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக விளையாடவே முடியாது என ஓல்கா ஃபிகொடோவாவை அச்சுறுத்தியது.
 
பல கட்ட பிரச்சனைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, ஓல்கா ஃபிகொடோவா, ஹரால்ட் கானொலியை மணந்து அமெரிக்காவில் குடியேறினார்.
 
செக்கோஸ்லோவாக்கியாவும், ஓல்காவை அச்சுறுத்தியதோடு நிற்காமல், அவர் மீண்டும் செக்கோஸ்லோவாக்கியாவுக்காக விளையாட முடியாத படி செய்தது.
 
பிறந்த நாடான செக்கோஸ்லோவாக்கியா கைவிரித்தாலும், மாப்பிள்ளை கொடுத்த புகுந்த நாடான அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. அதோடு தன் நாட்டின் சார்பாகவும் விளையாட அனுமதித்தது அமெரிக்கா.

webdunia
1956-க்குப் பிறகு 1960, 1964, 1968, 1972 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக விளையாடினார். தேசங்களைக் கடந்து நட்பும், அமைதியும் பரவ வேண்டும் என்பது தானே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நோக்கமும். அதை தன் வாழ்கை வழி நடத்திக் காட்டியவர் ஓல்கா ஃபிகொடோவா.
 
இதை எல்லாம் விட 1972 ஒலிம்பிக் போட்டிகளின் போது, அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி, அமெரிக்க அணியை வழிநடத்திச் செல்லும் பெருமையை ஓல்காவுக்கு வழங்கி கெளரவித்தது அமெரிக்கா.
 
இப்போது ஒரு முழு அமெரிக்கராகவே வாழ்ந்து வருகிறார் ஓல்கா. அவரது மகன் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒரு பெரிய ஈட்டி எறிதல் வீரராகவும், அவரது மகள் அமெரிக்காவின் கைப்பந்து அணியில் ஒரு வீராங்கனையாகவும் வளர்ந்தனர் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் என்கிற வலைதளம்.
 
'தி ரிங்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்கிற பெயரில் தன் காதல் கதை குறித்து ஒரு புத்தகமே எழுதியுள்ளார் ஓல்கா கானொலி ஃபிகடோவா.
 
இன்று வரை எத்தனையோ காதல் கதைகள் ஒலிம்பிக் போட்டிகளைச் சுற்றி நிகழ்ந்தாலும், அத்தனை காதல் கதைகளுக்கும் முத்தாய்ப்பாய் மணி மகுடமாய் திகழ்வது, ஓல்கா - ஹரால்ட் காதல் கதை தான் என்றால் அது மிகையல்ல.
 
அன்பை அளவிட பதக்கங்கள் உண்டா என்ன?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!