Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழுதான செல்போன், லேப்டாப் இரண்டும் குப்பைகள் அல்ல, பொக்கிஷங்கள் - எப்படி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (21:34 IST)
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உங்கள் வசம் இருக்கிறதா?
 
அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின் வரவேற்பறையை அலங்கரிப்பவையாகவும் மட்டுமே இருக்கலாம்.
 
அதாவது இவற்றில் சில மின்னணு சாதனங்கள் பயன்படுத்தும் நிலையிலும், சில பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதாகியும் இருக்கலாம்.
 
பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் மின்னணு சாதனங்களை வெறும் குப்பையாக (e -waste) நீங்கள் கருதினால், உங்களின் எண்ணத்தை மாற்றி கொள்ளச் சொல்கிறது மின்னணு கழிவுகள் குறித்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.
 
அத்துடன் இவற்றை நாட்டின் ‘மிகப்பெரிய பொக்கிஷங்கள்’ என்றும் சொல்ல முடியும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
 
 
மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அவற்றை விற்பனை செய்யும் வணிகத்தில் இந்தியா பெரிய சந்தையாக உருவெடுக்க முடியும்
 
இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்தின் (ICEA) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘அக்சன்சர்’ அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
 
அதில், இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 206 மில்லியன் (20.60 கோடி) மின்னணு சாதனங்கள் பழுதாகி பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உண்மையில், இதுபோன்ற கழிவுகள் தான் ‘மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தின்’ அடிப்படை. இந்த வணிகம் வரும் 2035க்குள் 20 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது மின்னணு கழிவுகள் மறுவடிமைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் மறுவிற்பனை உள்ளிட்ட ஆறு விதமான மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தின் மூலம் 2035க்குள் ஏழு பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்துடன் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த வணிகத்தை முன்னெடுத்தால் அதன் மூலம் 20 பில்லியன் டாலர்கள் வரை இந்த வணிகத்தை பெருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அவற்றை விற்பனை செய்யும் வணிகத்தில் இந்தியா பெரிய சந்தையாக உருவெடுக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்த துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
 
 
மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல் என்பது இந்தியாவில் பெரிய மற்றும் வேகமாக வளரும் துறையாக விரைவில் உருவெடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்த துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
 
மின்னணு, தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. எனவே உலக அளவில், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி வணிகத்தில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
 
அத்துடன் இந்த சாதனங்களை பழுதுபார்ப்பதற்கான செலவு வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவு. எனவே, மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் சந்தையில் உலகின் விருப்பமாக இந்தியா மாறக்கூடும்.
 
“இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் புதிய வர்த்தக வாய்ப்புகளையும் மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி வணிகத்தால் உருவாக்க இயலும்,” என்று ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அஜய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
 
“மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதன் பயனாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இச் சாதனங்கள் பழுதுபார்ப்பதற்காக இந்தியாவுக்கு வருகின்றன. அந்நிய செலாவணியை பெருக்க இந்த வணிகம் ஒரு நல்ல வாய்ப்பு” என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
எபிக் ஃபவுண்டேஷன் மற்றும் வி.எல்.எஸ்.ஐ. சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவரான சத்யா குப்தா, சில ஆண்டுகளுக்கு முன், லிங்க்டினில் ஒரு கணக்கெடுப்பை நடத்தினார்.
 
அதில் பங்கேற்றவர்களிடம் சராசரியாக நான்கு மொபைல் போன்கள் இருப்பதும். அவை நான்கும் வேலை செய்யும் நிலையில் இருந்தும் அவை பயன்படுத்தபடாமல் இருந்ததும் தெரிய வந்தது.
 
“நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒரு கட்டத்துக்கு மேல் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் 30 சதவீதம் மதிப்பை கூட்டுகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் சத்ய குப்தா.
 
அதாவது, “மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல்போனில் சிறு பழுது ஏற்பட்டால் உடனே அதற்கு பதிலாக புதிய மொபைலை வாங்கும் போக்கு மக்களிடம் பொதுவாக உள்ளது.
 
இவ்வாறு இல்லாமல், அதனை பழுது நீக்கி இன்னும் ஒரு வருடம் கூடுதலாக பயன்படுத்தினால், அதன் மூலம் அந்நிய செலாவணியில் 30 சதவீதம் நம்மால் சேமிக்க முடியும். அத்துடன் இது மின்னணு கழிவுகளை 33 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் செய்யும்.
 
ஏனெனில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் இன்றும் இறக்குமதி தான் செய்யப்பட்டு வருகின்றன” என்றும் கூறுகிறார் அவர்.
 
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மொபைல்போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் இறக்குமதி தான் செய்யப்பட்டு வருகின்றன
 
 
கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு அடுத்தபடியாக மின்னணு பொருட்களை தான் இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த இறக்குமதி வர்த்தகம் 550 பில்லியன் டாலர்கள். இவற்றில் மின்னணு சாதனங்களின் பங்கு 62. 7 பில்லியன் டாலர்களாகும்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு, இந்தியாவின் அந்நியச் செலாவணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
இத்தகைய சூழலில், மின்னணு சாதனங்களின் இறக்குமதி நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மொபைல்போன் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் சந்தை இந்தியாவில் அதிகரித்தால், இவற்றின் இறக்குமதி குறைந்து, அதன் பயனாக நாட்டின் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
 
மொபைல்போன் போன்ற சாதனங்கள் 14 உதிரி பாகங்களை கொண்டுள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் உலோகங்கள் பெரும்பாலும் விலைமதிப்பற்றவையாகவும், அரிதானவையாகவும் உள்ளன.
 
இவற்றில் 14இல் எட்டு உதிரிப் பாகங்களை இந்தியா முற்றிலும் இறக்குமதி செய்யும் நிலையில் தான் உள்ளது. இத்ததைய சூழலில், மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் சந்தை இந்தியாவில் வளர்ந்தால், மொபைல்போன் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் உலோகங்களை இறக்குமதி செய்வது குறையும்.
 
மேலை நாடுகளைப் போல, ஒரு பொருளை ஒருமுறை பயன்படுத்திய பின் அதை தூக்கி எறிந்துவிடும் (யூஸ் அண்ட் த்ரோ) கலாசாரம் இந்தியாவில் இல்லை
 
மேலை நாடுகளைப் போல, ஒரு பொருளை ஒருமுறை பயன்படுத்திய பின் அதை தூக்கி எறிந்துவிடும் (யூஸ் அண்ட் த்ரோ) கலாசாரம் இந்தியாவில் இல்லை. மாறாக ஒரு பொருளை பலமுறை பல வழிகளில் பயன்படுத்தும் பழக்கம் இந்தியர்களிடம் இயல்பாக உள்ளது.
 
உதாரணமாக, “பல்துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஸ் (Toothbrush), இந்தியாவில் நான்கு வழிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. முதலில் பல்துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஸ், ஒரு கட்டத்திற்கு மேல் தலைமுடியை டை அடிக்கவும், அதன்பின் குளியலறையை சுத்தம் செய்யவும், குளியலுக்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. பல்துலக்கும் ப்ரஸ்ஸை அதன் ஆயுட்காலத்தில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு உபயோகப்படுத்தும் கலாசாரம் இந்தியாவில் உள்ளது,” என்கிறார் சத்ய குப்தா..
 
“இன்றைய நவீன உலகில், பலரது வீடுகளில் நான்கு அல்லது ஐந்து லேப்டாப்கள் அல்லது மொபைல்போன்கள் உள்ளன. இந்த சாதனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை நீக்கி மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை நமது மாணவர்களுக்கும், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் அளிக்க முடியும். இந்த இலக்கை அடைவதற்கு மின்னணு சாதனங்களை பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்தும் கலாசாரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்றும் கூறுகிறார் அவர்.
 
மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் தொழிலை மேம்படுத்துவது குறித்து அஜய் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பியது பிபிசி.
 
அதற்கு அவர், “நாம் மேற்கத்திய நுகர்வு முறையிலிருந்து விலகி, இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும். இதில் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்துகிறார் அவர்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “தற்போது தயாரிக்கப்படும் மொபைல்போன்களை பழுது பார்க்க முடியாது. பெரும்பாலான மொபைல்கள் பேட்டரியைகூட மாற்ற முடியாத நிலையில் தான் உள்ளன. பல ஸ்மார்ட்போன்களை திறக்கக்கூட இயலாது.
 
இந்த நிலைமையை மாற்றும் விதமாக, பழுதுபார்த்து மேம்படுத்தக்கூடிய தயாரிப்புகளாக மொபைல்போன்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போது அவற்றை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகும்” எனவும் அவர் கூறினார்.
 
இந்திியாவில் மின்னணு சாதனங்களை சரிசெய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் விதத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன
 
இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது?
மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு, எபிக் பவுண்டேஷன் இந்தியாவில் ‘பழுதுபார்க்கும் உரிமை’ பற்றிய அறிக்கையைத் தயாரித்துள்ளது.
 
“ வன்பொருட்கள் துறையில் (ஹார்டுவேர்) ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்பதால், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (MAIT) அறிக்கையை அரசு தயாரித்து வருகிறது.
 
நுகர்வோர் விவகார அமைச்சகம் இதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இதற்கான பணிகள் பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன,” என்று கூறுகிறார் அஜய் சவுத்ரி.
 
“அரசாங்கத்தின் இறக்குமதி - ஏற்றுமதித் துறை மற்றும் சுங்கத் துறையினரும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்தியாவில் மின்னணு சாதனங்களை சரிசெய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் விதத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் விளக்கி உள்ளார்.
 
இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது.
 
லாபகரமான இந்த முயற்சியின் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுடன், இந்தியாவுக்கு புதிய ஏற்றுமதி சந்தையும் உண்டாகும் எனவும் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் பணி, இந்தியாவில் பெரும்பாலும் முறைசாரா தொழிலாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
'முறைசார்ந்த தொழிலாக மாற்ற வேண்டும்'
“மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் பழுதுபார்க்கும் பணி, இந்தியாவில் பெரும்பாலும் முறைசாரா தொழிலாகதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை ஒழுங்கமைத்து, முறைசார்ந்த தொழிலாக மாற்றினால், அதன் மூலம் பெரும் பலன் கிடைக்கும்” என்கிறார் சத்ய குப்தா
 
இந்தியாவில் தற்போது இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள்தான், மின்னணு சாதனங்களை பழுதுபார்க்கும் துறையில் முறைசார்ந்து இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மின்னணு முறையில் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம் இருந்து பணியை பெற்று அவற்றை மேற்கொண்டு வருகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மின்னணு பழுதுபார்க்கும் நிறுவனங்கள் இருப்பதால், இந்தியாவில் இந்த துறையில் நிறுவனங்களை தொடங்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
 
முறைசாராமல் இயங்கிவரும் மின்னணு சாதனங்கள் பழுதுபார்க்கும் துறையை முறைசார்ந்த துறையாக மாற்றினால், இந்ச சாதனங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதி அளிக்கும் வசதியை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
 
இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களை அவற்றின் உத்தரவாத காலத்தில் பழுதுபார்ப்பதற்கான அனுமதியை பெறலாம்.
 
வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் மற்றும் விவசாய கருவிகளை அவற்றின் உத்தரவாத காலத்தில் பழுதுபார்க்கும் அனுமதியை அளிக்கும் நோக்கில் இந்த இணையதளம் தற்போது இயங்கி வருகிறது.
 
ஸ்மார்ட்போன்கள், நுகர்பொருள் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்த 17 நிறுவனங்கள், மின்னணு சாதனங்களை பழுதுபார்க்கும் அனுமதிக்கான மத்திய அரசின் இந்த இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளன.
 
ஆப்பிள், சாம்சங், ரியல்மி, ஓப்போ, ஹெச்பி, போட், பானாசோனிக், எல்ஜி, கென்ட், ஹேவெல்ஸ். மைக்ரோடெக், லுமினஸ் ஆகிய பிராண்ட்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
 
ஹீரோமோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஆகிய வாகன பிராண்டுகளும் இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments