உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
இது குறைந்த தூர இலக்குகளை தாக்கவல்ல பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளாக இருக்கக் கூடும் என்று தென் கொரிய ராணுவம் கருதுகிறது. தனது ராணுவத்தின் தொடர் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியா எண்ணற்ற ஏவுகணைகளை பரிசோதித்தது. இதைத்தொடர்ந்து வட கொரியா தனது அணு மற்றும் ஏவுகணை செயல்பாடுகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென்று அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன.
உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை பரிசோதனைக்கு பிறகு, வேறெதாவது பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா என்று கூர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குட்பட்ட நீர்ப்பரப்பில் ஏவுகணை ஒன்று வந்திறங்கியதை ஜப்பானின் கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
வட கொரிய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வட கொரிய ஊடகவியலாளரான ரேச்சல் மின்யங் லீ, அடுத்த மாதம் நடைபெறவுள்ள வட கொரிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் "கொரோனா வைரஸை வட கொரியா எப்படி திறம்பட எதிர்கொள்கிறது" என்பதை பறைசாற்றும் வகையில் இருக்குமென்று குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இதுகுறித்து வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். வட கொரியாவின் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடான சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், தென் கொரியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் வட கொரியாவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்நாட்டு அரசு கூறுவதன் உண்மைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்ற வாரம் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், வட கொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என்று தான் "மிகவும் உறுதியாக" நம்புவதாக கூறினார். வட கொரிய தலைநகர் பியோங்யோங்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 380க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வட கொரிய அரசு 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தியது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டவுடன் 80 வெளிநாட்டவர்கள் வட கொரியாவை விட்டு வெளியேறினர்.
முன்னதாக, வட கொரியாவில் மருத்துவமனை கட்டுவதற்காக பணிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார். வட கொரிய தலைநகர் பியோங்யோங்கில் கட்டப்பட இருக்கும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கிம் பங்கேற்றதாக கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது அந்நாட்டுத் தேசிய ஊடகம்.