Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரானில் புதிய அதிபர்: அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுமா?

இரானில் புதிய அதிபர்: அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுமா?
இரானின் புதிய அதிபராக ஆகஸ்ட் மாதம் இப்ராஹிம் ரையீசி பதவியேற்கவுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் எவ்வகை மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து விவாதங்கள் எழுகின்றன.

இரானில் ரையீசி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இஸ்ரேலின் பதற்றம் அதிகரித்தது.
 
இரானில் யாருக்குச் செல்வாக்கு அதிகம்? உச்சபட்சத் தலைவருக்கா அல்லது ஜனாதிபதிக்கா?
 
அமெரிக்காவால் தனிப்பட்ட முறையில் தடை விதிக்கப்பட்ட இரானைச் சேர்ந்த சிலரில் ரையீசியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளிலும் தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தமக்கிடையேயான உறவில் புதிய சமன்பாடுகளின் சாத்தியங்களை  ஆராய்கின்றனர்.
 
இரானில் புதிய மாற்றத்திற்குப் பிறகு அமெரிக்கா இதுவரை எந்தவொரு முறையான அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் தனது விருப்பத்தை ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் உரைகளிலேயே தெளிவுபடுத்தியிருந்தார்.
 
இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கெடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் தொடங்கப்பட்டன.
 
அணுசக்தி ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இது ஒரு வருடத்திற்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது. அமெரிக்காவைத் தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இதில் உள்ளன.
 
ஆனால், 2018 ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டது.
 
இரான் ஜனாதிபதி பதவிக்கு இப்ராஹிம் ரையீசி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் முக்கியமான முடிவுகளை அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி தான்  எடுப்பார் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
"பிடிவாதமான அணுகுமுறையில் மாற்றம் அவசியம்"
 
அண்மையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், அமெரிக்காவின் பேச்சு வார்த்தை அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன்  தான் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அது தொடரும் என்றும் கூறியுள்ளார்.
 
"நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள இரான், இப்போது அதிலிருந்து வெளியேற விரும்புகிறது. எனவே இதுபோன்ற பல இராஜீய பிரச்னைகளில் தனது பிடிவாதமான அணுகுமுறையை நிச்சயமாக மாற்றிக்கொள்ளும்.
 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராஹிம் ரையீசி அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் நெருக்கமாக இருக்கிறார், எனவே ரையீசி முக்கியமான முடிவுகளை எடுப்பதில் எந்தவிதமான தடைகளையும் எதிர்கொள்ள மாட்டார். ஹசன் ரூஹானி மற்றும் கமேனியின் அரசியல் வேறுபட்டது,” என பிபிசியிடம் தெரிவித்தார் இராஜீய விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த்,
 
இருப்பினும், இரானின் தரப்பிலிருந்து அணு ஆயுதம் தயாரிப்பதில்லை என்ற உறுதியும் 2015 அணுஆயுத ஒப்பந்தத்திற்குட்பட்டு நடப்பது என்ற உறுதியும் அமெரிக்காவுக்குக் கிடைத்தால் தான் ஈரான்-அமெரிக்க உறவுகளில் மாற்றம் சாத்தியமாகும் என்று வெளிநாட்டு விவகாரங்களில் நிபுணர்கள் சிலர் நம்புகின்றனர்.
 
ஆனால் " எந்தெந்த விஷயங்களில் இரானைத் தயார் படுத்துவதில் அமெரிக்கா வெற்றியடைகிறது என்பதைப் பொருத்தே இது உள்ளது. இரான் இப்போது மற்ற  நாடுகளுடனான வர்த்தகத்தை மீண்டும் மீட்டெடுக்க விரும்புகிறது. ஏனென்றால் கடும் பொருளாதார நெருக்கடியை நீண்ட காலமாகச் சந்தித்து வருகிறது இந்த நாடு."  என்கிறார் ஹர்ஷ் பந்த்.
 
இரானுடன் நெருங்கி வருமா அமெரிக்கா?
 
இராஜீய உறவுகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், ரையீசி மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.
 
மத்திய கிழக்கு அரசியலில் சவுதி அரேபியாவுக்கு டொனால்ட் டிரம்ப் நிறைய முன்னுரிமை அளித்தார். ஆனால் சவுதி அரேபியா குறித்த தனது நிலைப்பாட்டை பைடன் தெளிவுபடுத்தவில்லை.
 
இரானுடனான உறவுகளை அமெரிக்கா மென்மையாக்கிக்கொண்டால், அது சவுதி அரேபியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இரானுக்கும் சவுதி  அரேபியாவிற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.
 
வெளியுறவு நிபுணர் மனோஜ் ஜோஷி, ஹசன் ரூஹானியின் பதவிக்காலத்தில் தான் இரான் தொய்வடைந்தது என்று கருதுகிறார். ரூஹானியின் முடிவுகள் அதி  உயர் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியிருந்ததால் இப்படி இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
 
ரையீசிக்கு ஒரு தீவிரமான தலைவர் என்ற பிம்பம் உள்ளது, அவருக்கு அயதுல்லா அலி கமேனியின் ஆதரவும் உள்ளது.
 
"அதி உயர் மதத் தலைவரின் முடிவே இறுதியானது"
 
ரையீசியோ அல்லது வேறு மென்மையான அதிபரோ, இறுதி முடிவு என்பது அதி உயர் தலைவரின் முடிவு தான் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
 
"ரையீசி, அயதுல்லா அலி கமேனியின் வாரிசாகக் காணப்படுகிறார். எனவே முடிவுகளை எடுப்பதில் ரூஹானி எதிர்கொண்ட சிரமங்கள் ரையீசிக்கு இருக்காது.  மேலும் இஸ்ரேலில் தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் அரசியலில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. " என்கிறார் மனோஜ் ஜோஷி.
 
"இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் ஈரானை எப்போதும் ஒரு பெரிய தடையாகவே கருதி வந்தன. இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் ஈரானுக்கும் முக்கிய நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தன. இப்போது கூட இரு நாடுகளும் ஈரான் மீதான தடைகள் நீக்கப்படுவதற்கு ஆதரவாக இல்லை.
 
தன் எண்ணம் என்ன என்பதை இரான், அமெரிக்கா இரண்டுமே இது வரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், ராஜரீக மட்டத்தில் சில நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெளிவாகத் தெரியும்." என்று ஹர்ஷ்  பந்த் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 50 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!