Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் முன்னேற்றம் மற்றும் பிற செய்திகள்

Advertiesment
BBC Tamil
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:22 IST)
மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'.

"இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது" என்று இணையம் வழியே நடந்த அறிமுக நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறினார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் இவர்.

நியூராலிங்க் என்னும் இவரது புதிய நிறுவனம் மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிவருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தது இந்நிறுவனம்.

மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இந்த இடைமுகம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் மறதி நோய், பார்கின்சன் நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கமே, "மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவாற்றல் யுகம்" என்று எலான் மஸ்க் கூறும் ஒரு யுகத்துக்குள் நுழைவதுதான் என்று கூறப்படுகிறது. அத்தகைய ஒரு யுகத்தில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும் என்றும் அப்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
webdunia

இந்த நிலையில், முதல் கட்டமாக பன்றிகளிடத்தில் பரிசோதிக்கப்படும் இந்த தொழில்நுட்பம் குறித்த அறிமுக கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. அதில், மூளையில் 'கம்ப்யூட்டர் சிப்' பொருத்தப்பட்ட பன்றியான கெர்ட்ரூட்டின் நரம்பியல் செயல்பாடுகள் கணினி வாயிலாக கண்காணிக்கப்பட்டன.

அந்த பன்றி தனக்கு முன்பாக இருக்கும் உணவை பார்க்கும்போது அதன் உடலில் ஏற்படும் நரம்பியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அதன் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் அனுப்பும் ஒயர்லஸ் சிக்னல்கள் வாயிலாக பெறப்பட்டன.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நியூராலிங்க் கருவியின் முதல் பதிப்பு தற்போது எளிமையாக்கப்பட்டு, சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாக மஸ்க் இந்த நிகழ்வின்போது மேலும் கூறினார்.

"இது உண்மையில் உங்கள் மண்டை ஓட்டில் மிகவும் நன்றாக பொருந்துகிறது. இது உங்கள் தலைமுடியின் கீழ் இருக்கக்கூடும், ஆனால் அது உங்களுக்குத் தெரியாது."

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உருவாக்கும் சாதனம் ஒரு மனித தலைமுடியை விட மெல்லிய நெகிழ்வான நூல்களுடன் இணைக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் கொண்டுள்ளது. இது 1,000 மூளை நரம்பணுக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்.

கொரோனா ஊடரங்கு: இந்தியாவில் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

webdunia

கொரோனா பொது முடக்கம் செப்டம்பர் 30 வரை தொடரும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவும் வெறுப்பு, வன்முறை - சோனியா காந்தி கடும் விமர்சனம்

தேச விரோத மற்றும் ஏழை விரோத சக்திகள் இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
webdunia

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தஞ்சாவூர் பொம்மைகள், ராஜபாளையம் நாய் பெரும் உதாரணம்! – பிரதமர் மோடி பெருமிதம்!