Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு!

Advertiesment
நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு!
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (09:43 IST)
தற்போது கிடைத்துள்ள புதிய புதைபடிவங்கள், நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவுடன் நியாண்டர்தால்களை அழித்துவிட்டார்கள் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன.
 
தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால மனித இனம்) இருந்ததாகக் கூறுகிறது.
 
இது முன்பு நினைத்ததைவிடப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இரண்டு இனங்களும் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.
 
இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
டுலூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா.லுடோவிச் ஸ்லிமேக் தலைமையிலான குழுவால் ரோன் பள்ளத்தாக்கில் உள்ள க்ராட்டே மேண்ட்ரின் என்ற குகையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. முன்கூட்டியே நவீன மனிதர்கள் குடியேறியதற்கான சான்றுகள் இருப்பதை அறிந்தபோது ஸ்லிமாக் ஆச்சர்யப்பட்டார்.
 
"நாங்கள் எதிர்பார்த்த 12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹோமோ சேபியன்கள் வந்து சேர்ந்தனர் என்பதை இப்போது எங்களால் நிரூபிக்க முடிகிறது. அதன்பிறகு இந்த மக்கள் தொகை மற்ற நியாண்டர்தால் மக்களால் இடம் மாற்றப்பட்டது. மேலும் இது நம்முடைய வரலாற்று நூல்கள் அனைத்தையும் திருத்தி எழுத வைக்கிறது."
 
நியாண்டர்தால் இன மனிதர்கள் ஐரோப்பாவில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வந்தனர். ஆப்பிரிக்காவில் இருந்து ஹோமோ சேபியன்ஸ் ஐரோப்பிய கண்டத்திற்கு வந்த சிறிது காலத்திற்குப் பிறகு, அதாவது சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்துவிட்டதாகத் தற்போதைய கோட்பாடு கூறுகிறது.
 
ஆனால், புதிய கண்டுபிடிப்பு நம்முடைய மனித இனம் முன்னதாகவே வந்துவிட்டதாகவும் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போவதற்கு முன்பு சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவில் இரண்டு இனங்களும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறது.
webdunia
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூற்றுப்படி, இது நம்முடைய மனித இனம் விரைவாக நியாண்டர்தால் மனிதர்களை அழித்துவிட்டது என்ற தற்போதைய பார்வையை கேள்விக்கு உட்படுத்துகிறது.
 
"இது நவீன மனிதர்களால் ஒரே இரவில் கையகப்படுத்தப்படவில்லை," என்று அவர் பிபிசி நியூசிடம் கூறினார். மேலும், "சில நேரங்களில் நியாண்டர்தால்களுக்கு நன்மைகள் இருந்தன. சில நேரங்களில் நவீன மனிதர்களுக்கு நன்மைகள் இருந்தன. எனவே அது மிகவும் நேர்த்தியாக சமநிலையில் இருந்தது," என்று கூறினார்.
 
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தில் பல அடுக்குகளில் புதைபடிவ ஆதாரங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். அவர்கள் எவ்வளவு கீழே தோண்டினார்களோ, காலச் சக்கரத்தில் அவ்வளவு பின்னால் அவர்களால் பார்க்க முடிந்தது. மிகக் குறைந்த அடுக்குகள் சுமார் 20,000 ஆண்டுகளாக இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்த நியாண்டர்தால் மனிதர்களின் எச்சங்களைக் காட்டின.
webdunia
ஆனால், அவர்களை முற்றிலும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக, சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு அடுக்கில் நவீன மனித இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் பல்லை இந்தக் குழு கண்டறிந்தது. மேலும், நியாண்டர்தால்களுடன் தொடர்பில்லாத வகையில் செய்யப்பட்ட சில கல் கருவிகளையும் அவர்கள் கண்டறிந்தனர்.
 
இந்த ஆரம்பக்கால மனித குழு, அந்த இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் அளவிலான ஒரு குறுகிய காலத்திற்கு வாழ்ந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகு அந்த இடம் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தது. 44,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் திரும்பி வரும் வரை, நியாண்டர்தால்கள் மீண்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
 
"நாம் இப்படி தோன்றி, மறைந்து தோன்றியிருக்கிறோம்," என்கிறார் பேரா.ஸ்ட்ரிங்கர். "நவீன மனிதர்கள் குறைந்த காலத்திற்குத் தோன்றினார்கள். பின்னர் ஓர் இடைவெளி உள்ளது. அங்கு நிலவிய காலநிலை அவர்களை அழித்திருக்கலாம். பிறகு நியாண்டர்தால் மனிதர்கள் மீண்டும் வந்தார்கள்."
 
மற்றொரு முக்கியக் கண்டுபிடிப்பு என்னவெனில், குழந்தையின் பல் இருந்த அதே அடுக்கில் காணப்படும் கல் கருவிகள் நவீன மனிதர்களுடன் தொடர்புடையதாக இருந்தது. அதே வழியில் செய்யப்பட்ட கருவிகள் ரோன் பள்ளத்தாக்கு மற்றும் லெபனான் போன்ற வேறு சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இதுவரை விஞ்ஞானிகளுக்கு எந்த மனித இனத்தவர் அவற்றை உருவாக்கினார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை.
 
சில சிறிய கருவிகள் அம்பு முனைகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்களில் சிலர் ஊகிக்கின்றனர். நவீன மனிதர்களின் தொடக்க காலக் குழு, வில் மற்றும் அம்புகளின் மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இந்தக் குழு 54,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் மனிதர்களை வென்றதற்கான காரணங்களில் ஒன்றாக இது இருக்கலாம். ஆனால், அப்படியிருந்தால், அது ஒரு தற்காலிக சாதக நிலையே. ஏனெனில், நியாண்டதால் மனிதர்கள் மீண்டும் திரும்பி வந்தார்கள். உறுதி செய்யப்பட்டால், இது முக்கியமான கண்டுபிடிப்பு.
 
எனவே, நம் நவீன மனித இனம் அவர்களை உடனடியாக அழித்துவிடவில்லை என்றால், இறுதியில் நமது இனத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாதகம் என்ன?
 
கலை, மொழியை உருவாக்கும் நம்முடைய திறன் மற்றும் சிறந்த மூளை இதற்கு காரணமாக இருக்கலாம் என்பன போன்ற பல கருத்துகளை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். ஆனால் நாம் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து செயல்படும் இனமாக இருந்ததால்தான் இது நடந்தது என்று பேராசிரியர் ஸ்ட்ரிங்கர் நம்புகிறார்.
 
 
"நாம் சிறப்பாக ஒருங்கிணைந்தோம், நம் சமூகக் குழுக்கள் பெரியதாக இருந்தன. நாம் அறிவை சிறப்பாகச் சேமித்து வந்தோம், நாம் அந்த அறிவின் அடிப்படையிலேயே வளர்ச்சியை எய்தினோம்," என்று அவர் கூறுகிறார்.
 
நவீன மனிதர்கள் நீண்ட காலம் நியாண்டர்தால் மனிதர்களோடு ஊடாடி வாழ்ந்தார்கள் என்ற இந்த கருத்து, நவீன மனிதர்கள் உடலில் சிறிய அளவில் நியாண்டர்தால் டி.என்.ஏ. கலப்பு உள்ளது என்ற 2010ம் ஆண்டின் கண்டுபிடிப்போடு பொருந்திப் போகிறது. இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ததையும் இது காட்டுகிறது என்கிறார் பேராசிரியர் ஸ்ட்ரிங்கர்.
 
"இது இரண்டு தரப்புக்கும் இடையில் நிகழ்ந்த அமைதியான பரிமாற்றமா என்பது தெரியாது. ஒருவேளை மற்றொரு குழுவிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டு வந்திருக்கலாம். இல்லையேல் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட நியாண்டர்தால் குழந்தைகளைத் தத்தெடுத்து இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
 
"அவை அனைத்துமே கூட நடந்திருக்கலாம். எனவே முழு கதையும் நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், அதிக தரவு மற்றும் அதிக டி.என்.ஏ, அதிக கண்டுபிடிப்புகள் மூலம், நியாண்டர்தால் சகாப்தத்தின் முடிவில் நிஜமாகவே என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மையை நெருங்குவோம்."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூங்கி கொண்டிருந்த பெண் வன்கொடுமை! – நடுவானில் நடந்த பயங்கரம்!